சிறப்புக் களம்

கொரோனா கால மகத்துவர்: மலைவாழ் மக்களுக்காக அசாத்திய பணியில் இளம் மருத்துவர் அருண்

கொரோனா கால மகத்துவர்: மலைவாழ் மக்களுக்காக அசாத்திய பணியில் இளம் மருத்துவர் அருண்

நிவேதா ஜெகராஜா

கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட மலைவாழ் மக்கள் 25 பேரை, காடு மலை தாண்டி ஒற்றை ஆளாய் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்த இளம் மருத்துவரின் போற்றுதலுக்குரிய பணி - அர்ப்பணிப்பை வாழ்த்தி மகிழ்கிறார்கள் சக மருத்துவர்களும் நெட்டிசன்களும்.

கடந்த ஆண்டு கோவிட்-19 பணியில் ஈடுபட்டிருந்த இளம் மருத்துவர் ஜெயமோகன் உடல்நலக்குறைவால் மரணித்ததை தொடந்து நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு மருத்துவராக நியமிக்கப்பட்டார் மருத்துவர் அருண். இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்தவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலம் 25 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக, அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று வீடு வீடாக சென்று பேசி பின்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார் மருத்துவர்.

ஈரோடு சத்தியமங்கலத்தில் இருந்து தென்குமரஹடா பகுதிக்கு வர 5மணி நேரம் காட்டிற்குள் பயணிக்க வேண்டும். ஆனால் அப்படி பயணித்தாலும் 108 வாகனம் ஆற்றை கடந்து தெங்குமரஹடா ஊருக்குள் வர முடியாது.

இந்த சூழ்நலையில் நோயாளிகளை வீட்டிலிருந்து அரசு வாகனத்தில் ஏற்றி ஆற்றுப்படுகைக்கு வந்து பின்பு அவர்களின் கைகளை பிடித்து மருத்துவரே அழைத்து வருகிறார்.

நோயாளிகளை வீட்டிலிருந்து ஆற்றுபடுகைக்கு அழைத்து வர வாகன ஓட்டியும் அவர்தான். இறுதியாக ஆற்றிலும் நோயாளிகளின் கைகளை பிடித்து அடுத்த பக்கம் 108 வாகனம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து இறுதியாக அனைவரையும் மருத்துவமனைக்கு கோத்தகிரிக்கு / ஊட்டிக்கு அழைத்து சென்று அவர்களை அட்மிசன் போட்டு சிகிச்சை பெற வைத்திருக்கிறார்.

தென்குமரஹடாவிலுருந்து நீலகிரி மருத்துவமனைக்கு வர வேண்டுமானால் ஈரோடு, கோவை என இரண்டு மாவட்டங்களை கடந்து தான் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


- சுகன்யா