சிறப்புக் களம்

'விளையாட்டே புரியலை, ஆனாலும்...' - நெட்டிசன்கள் கொண்டாடும் அதிதி அசோக்!

'விளையாட்டே புரியலை, ஆனாலும்...' - நெட்டிசன்கள் கொண்டாடும் அதிதி அசோக்!

நிவேதா ஜெகராஜா

ஒலிம்பிக் மகளிர் கால்ஃப் போட்டியில் அசத்தியதன் எதிரொலியாக, நெட்டிசன்களின் தற்போதைய சென்சேஷன் ஆகியிருக்கும் அதிதி அசோக் பற்றிய கொண்டாட்டங்களின் ஒரு சிறிய தொகுப்பு இது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களை கொண்டாடியதை விட, போட்டியில் தோல்வி அடைந்த ஒருவரை சனிக்கிழமை காலை முதல் வெகுவாக கொண்டாடி வந்தனர் நெட்டிசன்கள். அவர் கால்ஃப் வீராங்கனை அதிதி அசோக். இந்தியர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு விளையாட்டு கால்ஃப். என்றாலும், இன்று அதிதி அஷோக்கிற்காக கால்ஃப் போட்டியை கண்டுகளித்தனர் கோடிக்கணக்கான இந்தியர்கள்.

'விளையாட்டே புரியலை... ஆனாலும் அதிதி அசோக்கிற்காக பார்க்கிறோம்' என்று நிறைய பேர் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார் அதிதி அசோக். எனினும், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்கள் முதல் பலரும் அதிதியை வாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர்.

கணேஷ் என்ற பயனர், ''கிரிக்கெட் போன்று பத்து பதினைந்து நாடுகள் விளையாடும் விளையாட்டல்ல கால்ஃப். உலகின் 150 நாடுகளுக்கு மேல் விளையாடும் விளையாட்டு, அதில் உலகின் முன்னணி வீராங்கனைகளோடு போட்டியிட்டு உலகத் தரவரிசையில் 200-வது இடத்தில் இருக்கும், 23 வயதே ஆன இந்தியாவின் அதிதி அசோக் தொடர்ந்து 2-வது இடத்திலே நீடித்தபோதும் இன்றைய மோசமான வானிலையால் 4-வது இடத்தை பிடித்து, 98% இந்தியர்கள் அறியாத கால்ஃப் விளையாட்டை அறிய செய்த சாதனை பெண்ணுக்கு வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டு இருக்கிறார்.

மற்றொரு பயனர், ''கால்ஃப் போட்டியில் கூட இவ்வளவு பெரிய வீராங்கனையை பெற்று இருப்பது, எதிர்காலத்தில் மிக பெரிய மாற்றத்தை இந்தியா சாதிக்கும். மிகப் பெரிய வெற்றிப்பயணம் உடையது அதிதியின் பயணம். எதிர்காலத்தில் எல்லா விளையாட்டுகளிலும் முன்னணி பெற இது உதவும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

சிலர் தங்களது மீம்களில் அதிதியை குறிப்பிட்டு, ''எங்களுக்கு கால்ஃப் எல்லாம் தெரியாது. ஆனால் உங்க ஆட்டம் வெறித்தமான இருக்கு' என்று பிகில் விஜய் டெம்ப்ளேட்டில் அசத்தியுள்ளனர்.

இன்னொரு பயனர், ''நம்மிடையே அதிகம் கவனம் பெறாத விளையாட்டு கால்ஃப். அதன் விதிமுறைகளும் நமக்கு பரிச்சயம் கிடையாது. ஆனால் கடந்த 4 நாட்களாக முதல் மூன்று சுற்றுகளிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் கால்ஃப் நோக்கி திசை திருப்பி இருக்கும் உங்களுக்கு சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார்.

சுபம் என்ற பயனர், ''23 வயது, 2-வது முறை ஒலிம்பியன், உலக தரவரிசையில் 200-ஆவது இடத்தில் இருந்தும் 1-20 இடங்களில் இருந்தவர்களுக்கு கடுமையான போட்டியை வழங்கினார். அதிதியின் விளையாட்டை பார்த்து இன்று டெல்லி, சென்னை, புனே, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு என இந்தியாவின் எதாவது ஒரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கால்ஃப் விளையாட்டில் தங்கள் கால்தடத்தை பதிக்கலாம்" என்றுள்ளார்.

சாய் பிரசாத் என்பவர், ''இந்திய பார்வையாளர்கள் 'கால்ஃப்' பார்க்கவோ அல்லது ஆர்வம் காட்டவோ இல்லை. ஆனால், உங்கள் அசாதாரண செயல்திறன் காரணமாக எங்கள் அனைவரையும் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து கால்ஃப் பார்க்க வைத்துவிட்டீர்கள். இந்தியாவில் கால்ஃப் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதற்கு நன்றி" என்று அதிதியை பாராட்டியிருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல, பிரதமர் மோடி, மித்தாலி ராஜ், ஆனந்த் மஹிந்திரா, ஹர்ஷா போக்லே போன்ற பிரபலங்களும், நெட்டிசன்களும் அதிதியை குறிப்பிட்டு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனால் இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார் அதிதி அசோக்.

- மலையரசு