சுபாஷ் சந்திரபோஸ் PT
சிறப்புக் களம்

“இளைஞர்களே... ரத்தத்தை கொடுங்கள், நான் சுதந்திரத்தை தருகிறேன்” - என்ற நேதாஜி பிறந்ததினம் இன்று!

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்ததினம் இன்று.

Jayashree A

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 1897 ஜனவரி 23 தேதி பிறந்தார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே தேசியவாத நடவடிக்கைகளுக்காக 1916ல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் 1919ல் பட்டம் பெற்று 1920 ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றியும் பெற்றார். பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

நேதாஜியின் வேட்கையை கல்லூரியிலேயே கண்ட சி.ஆர்.தாஸ், நேதாஜிக்கு தன்னுடைய தேசியக் கல்லூரியின் தலைவர் பொறுப்பை அவர்வசம் கொடுத்தார். அப்போது நேதாஜிக்கு வயது 25தான். அப்போதே பற்ற ஏங்கி நிற்கும் மாணவர்களுக்கு இடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். அவரின் வார்த்தைகளில் இருந்த உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் அவர் கக்கிய அனல் மாணவர்களை உத்வேகப்படுத்தியது. நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.

கொல்கத்தாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து வந்த நேதாஜிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டக்காலத்தில் “இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்” என்று மேடையில் அனல் பேச்சை வீசிய வங்கத்துச்சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

ஆங்கிலேயரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்தபோதே "சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுவது" என்று துணிச்சலுடன் முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நாட்டின் விடுதலைக்காக ராணுவத்தையே உருவாக்கிய துணிச்சல்காரர். “விடுதலை என்பது கெஞ்சி கேட்டு பெறும் யாசகம் அல்ல, ரத்தம் சிந்தி பெற வேண்டியது” என உறுதியாக இருந்தார் அவர்.

தங்களுக்கு தலைவலியாக நேதாஜி உருவெடுத்ததை உணர்ந்த ஆங்கில அரசு அவரை பொய்க்காரணங்களை கூறி சிறையில் அடைத்தது. ஆனால் நல்ல தலைவனின் வெற்றிக்கு தலைவன் எதிரே நிற்கத்தேவையில்லை, அவரின் பெயர் ஒன்றே போதும் என்பதற்கு ஏற்ப சிறையில் இருந்தபடியே சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி. நேதாஜி என்ற பெயரை மக்கள் எவ்வளவு நம்பினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம், சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கியது, ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையம், நாட்டுக்கெனத் தனிக் கொடி, ஜன கன மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியது, ஜான்சி ராணிப் படை என பெயரிட்டு பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தியது, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதன்முறையாக முழுங்கியது என நேதாஜியின் ஒவ்வொரு அடியும் ஆங்கிலேய அரசுக்கு மரண அடியாக விழுந்தது.

அடிமை விலங்கை உடைக்க வேண்டும், சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி நாடு முழுவதும் நாள்தோறும் ஒவ்வொரு வடிவங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதில் காந்தியின் வழி அகிம்சை என்றால், அதற்கு நேர் எதிரான வழியை தேர்வு செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு என்பது நேதாஜியின் கொள்கை. இந்தக் கொள்கை மனதில் வெடித்துக் கிளம்பியதால் காங்கிரஸிலிருந்து வெளியேறி ஃபார்வர்டு பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கி தனக்கான பாதையில் நடை போட்டார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய மக்களை அணி திரட்டினார். சுபாஷ் சந்திர போஸின் துணிச்சலையும் வேகத்தையும் கண்டு வியந்த மக்கள், அவருக்கு சூட்டிய பெயர்தான் நேதாஜி.

நாட்டின் விடுதலைக்கான முனைப்பில் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், அவரின் மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் எழுந்தன. வீட்டுச்சிறையில் அடைத்து ஆங்கிலேயர்கள் காத்து நின்ற போதே காற்று போல தப்பித்து ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த மாவீரன் விமான விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என மக்கள் பேசினர். அதற்கு வலு சேர்க்கும் விதமாக ‘நேதாஜி இறக்கவில்லை. அவர் சரியான தருணத்தில் வருவார். என்னோடு தொடர்பில் இருக்கிறார்’ என்று முழங்கினார் நேதாஜியின் நெருங்கிய நண்பரான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். ஆனால் இறுதிவரை நேதாஜி வரவே இல்லை.

நேதாஜி இல்லாவிட்டாலும் அவர் பெயர் ஒலிக்காத மேடைகளே இல்லை. அவர் கூறிய வார்த்தைகள் இந்தியாவில் எங்கெங்கும் எதிரொலித்தது. அவர் பெயரை சொல்லிக்கொண்டாலே அந்த உத்வேகம் தங்களுக்கும் பிறப்பதாக மக்கள் உணர்ந்தனர்.