சிறப்புக் களம்

வெற்றிலைக் காட்சியும் நிவின் பாலியின் பட்டினியும்! நட்ராஜ் சொல்லும் ‘ரிச்சி’ ரகசியம்!

வெற்றிலைக் காட்சியும் நிவின் பாலியின் பட்டினியும்! நட்ராஜ் சொல்லும் ‘ரிச்சி’ ரகசியம்!

webteam

“சினிமா, ரசனைகளின் கலை. ஒவ்வொரு படத்துலயும் எதையாவது புதுமையா சொல்லிட முடியாதான்னுதான் ஒவ்வொரு கலைஞனும் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அதுல சில முயற்சிகள், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வரும். இல்லன்னா, அவங்க எதிர்பார்ப்புக்கு மேலயும் இருக்கும். ‘ரிச்சி’ அப்படிப்பட்ட படமா இருக்கும்னு நம்பறேன்’ என்கிறார் நட்டி என்கிற நட்ராஜ். இந்தி சினிமாவின் மோஸ்ட்வான்டட் சினிமாட்டோகிராஃபர். தமிழ் சினிமாவின் கவனித்தக்க ஹீரோ.

‘ரிச்சி’ கன்னட படத்தோட ரீமேக். ஆனா, தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் இருக்கும். இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் கதையை சொல்லிட்டு, “இது ரீமேக்தான். இருந்தாலும் படம் முடியறவரை ஒரிஜினலை பார்த்திடாதீங்க. ஏன்னா, நான் நினைச்சு வச்சிருக்கிற செல்வம் கேரக்டர், அதுல வர்ற கேரக்டர் மாதிரி ஆயிடக் கூடாது”ன்னார். அது நியாயமாகவும் பட்டது. படம் நாளைக்கு ரிலீஸ். பிறகுதான் என் கேரக்டரை ஒரிஜினல்ல எப்படி பண்ணியிருக்காங்கன்னு பார்க்கப் போகிறேன்” என்கிறார் நட்டி. நிவின்பாலி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ்பரத், லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடித்துள்ளனர்.

நிவின் பாலியோட நடிச்ச அனுபவம்?

நல்ல நடிகர். ஒரு காட்சிக்காக, படத்துக்காக எவ்வளவு மெனக்கெடணுமோ, அவ்வளவு செய்றார். அவரோட டெடிகேஷன் பார்த்து வியந்தேன். கதைப்படி படம் முழுவதும் அவர் வெற்றிலைய உதப்பிட்டே இருப்பார். எப்பவும் உதடு சிவப்பா இருக்கணும். சுண்ணாம்பு தடவி வெற்றிலை போட்டா, வாயி பொத்துப் போயிரும். இதுக்காக அவர் பிரேக் பாஸ்ட்டையும் லஞ்சையும் விட்டுட்டு ஷூட்டிங்ல கலந்துக்கிட்டார். நான் ஆச்சரியப்பட்டேன், இப்படியெல்லாம் இருப்பாங்களா?ன்னு. அவரே அருமையா டப்பிங் பேசியிருக்கார். பொதுவா மலையாளத்துக்காரங்க தமிழ் பேசினா, அதுல மலையாள வாடை வீசும். அது இல்லாம, பக்கா தமிழ்ப் பையன் மாதிரி பேசியிருக்கார்.

‘ரிச்சி’என்ன கதை?

ரிச்சர்ட், செல்வம், ரகு இந்த மூணுபேரை சுற்றிதான் கதை நடக்கும். ஒருத்தன் நண்பனைத் தாக்கக் காத்திருக்கிறான். இன்னொருத்தன் நண்பனுக்காகக் கொல்றான். இதுல நான் செல்வம் கேரக்டரை பண்றேன். காதல், ஆக்‌ஷன், எமோஷன் எல்லாமே படத்துல இருக்கும்.

தொடர்ந்து இரண்டு ஹீரோ கதைகள்லயே நடிக்கிறீங்களே?

அப்படித்தான் நடிக்கணும்னு நினைக்கலை. அப்படி எதிர்பார்த்தும் இருக்கலை. நல்ல கதைன்னா எத்தனை ஹீரோக்கள் கூடயும் நடிக்கலாம். அதுல என்ன தப்பு இருக்கு? நல்ல கதைக்காக நான் வெயிட் பண்றேன். ரெண்டு ஹீரோ கதைகள் அமையும்போது மறுக்க முடியாதே. என் கேரக்டர் பிடிச்சிருக்கறதால நடிக்க வேண்டியதா இருக்கு.

‘சதுரங்க வேட்டை’க்கு முன் , பின் அப்படின்னு உங்க சினிமா வாழ்க்கைய பிரிக்கலாமா?

கண்டிப்பா. ‘சதுரங்க வேட்டை’ எனக்கு பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கு. அந்தப் படத்தோட இயக்குனர் வினோத், எங்கிட்ட கதை சொல்லும்போதே, “எங்கய்யா இருந்தீங்க, இவ்வளவு நாளா?”ன்னு கேட்டேன். அந்த மாதிரி விழிப்புணர்வை ஏற்படுத்தற படங்கள்தான், இன்னைக்குத் தேவையா இருக்கு.

இந்தி சினிமாவுல முக்கியமான ஒளிப்பதிவாளர் நீங்க. அங்க நடிக்கிற ஐடியா?

பாலிவுட்ல எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. ‘சதுரங்க வேட்டை’ய அங்க ஸ்கிரீன் பண்ணினேன். டைரக்டர் நீரஜ் பாண்டே, “என்ன நட்டி, ஒளிப்பதிவாளர்னு சொல்லி எங்களை எல்லாம் ஏமாத்திட்டு இருக்கீங்களா? பிரமாதமான நடிகன் நீ” அப்படின்னார். இதையேதான் நிறைய பேர் சொன்னாங்க. இருந்தாலும் தமிழைத் தவிர, வேற மொழியில் நடிக்கும் ஆசை இல்லை. எந்த மொழியில நடிச்சாலும் அந்த மொழி நல்லா தெரிஞ்சிருக்கணும். நான் இந்தி பேசுவேன். ஆனா, அது அவங்கபேசற இந்தி மாதிரி இருக்காது. வேற மாநிலத்துக்காரன் பேசற இந்தியாகத்தான் இருக்கும். அதனால வேற மொழிகள்ல நடிக்கும் ஐடியா இல்லை.

அடுத்து?

இப்ப 3 படங்கள் நடிச்சிட்டிருக்கேன். ‘அ ஆ’ங்கற தெலுங்கு படத்துக்கு கேமரா பண்ணினேன். இப்ப பிருத்விராஜ் நடிக்கிற மலையாள படம், திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் தெலுங்கு படங்களுக்கு கேமரா பண்ணிட்டு இருக்கேன்.