சிறப்புக் களம்

இன்று தேசிய பல் வலி தினம்! - எதற்காக இந்நாள் தெரியுமா?

இன்று தேசிய பல் வலி தினம்! - எதற்காக இந்நாள் தெரியுமா?

JustinDurai

இன்று பிப்ரவரி 9,  தேசிய பல்வலி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. என்ன? பல் வலிக்கு என்று தனியாக ஒரு தினமா? எதற்காக பல் வலியை ஒரு தினத்தில் வலியுறுத்தி தேசிய தினமாக அனுசரிக்க வேண்டும்? நிச்சயம் அதற்குக் காரணமுண்டு என விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

‘’மனிதன் பிறந்த சில மாதங்களில் இருந்து இறப்பு வரை அவனுக்கு உணவை நன்றாக மென்று உண்ணவும்,  தான் நினைப்பதை வருவதை திறம்பட பேசவும் பற்கள் இன்றியமையாத தேவையாக இருக்கின்றன. இத்தகைய பற்களை நாம் முறையாகப் பேணுவது நமது கடமை தானே? பற்களிடம் நாம் காட்ட வேண்டிய அக்கறையை பரைசாற்றவே இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது.

இந்த நாளில் நாம் நினைவு கொள்ள வேண்டியது, பல் வலி என்பது பல காரணங்களால் ஏற்படும். பற்சிதைவு நோய், பல் முறிவு, ஈர்களில் புண், கட்டுக்கடங்காத நீரிழிவு, பற்களுக்கு இடையே அழுக்கு அதிகமாக சேருவது, பல் கூச்சம் போன்றவை அவற்றுள் சில.

பல் வலி எனும் ஆரம்பநிலை அறிகுறி ஏற்படும்போதே அதை முறையாக கவனித்துப் பார்க்கும் BDS / MDS பயின்ற   பல் நோய் சிறப்பு நிபுணர்களை உடனே சந்திக்க வேண்டும். அவர்கள் தரும் சிகிச்சைகளை உடனே செய்து பற்கள் முழுவதுமாக சிதைந்து போவதில் இருந்து காக்க வேண்டும்

இந்த பல் வலி விழிப்புணர்வு தினத்தில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்:

  1. தினமும் இரண்டு முறை பல் துலக்குதல்
  2. வருடம் ஒரு முறையேனும் பல் நோய் சிறப்பு நிபுணரை சந்தித்து பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
  3. பல் வலி ஏற்பட்டால் அதை உதாசீனம் செய்யாமல் இருத்தல். நாமே சுய வைத்தியம் செய்து பிரச்னையை பெரிதாக்காமல் அதற்குரிய மருத்துவரை சந்தித்தல்.
  4. கட்டாயம் சர்க்கரை சீனி கலந்த உணவுகள் பானங்களை தவிர்த்தல்.

சீனி மற்றும் சர்க்கரைக்கு நமது பற்களை அரிக்கும் திறன் உண்டு. அவையே பற்சிதைவு நோய்க்கு அஸ்திவாரம் போடுகின்றன.

மேற்சொன்ன வழிமுறைகளைக் கடைபிடித்து நமது பற்களின் ஆரோக்கியத்தைப் பேணி இறுதி காலத்தில் கூட வலிமையான பற்கள் கொண்டிருக்கலாமே.’’