சிறப்புக் களம்

"சசிகலாவை முடக்க நினைக்கிறது பாஜக!"- நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி

"சசிகலாவை முடக்க நினைக்கிறது பாஜக!"- நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி

sharpana

அமமுகவில் இருந்து விலகி, தற்போது திமுக ஆதரவாளராக மாறியிருக்கும் நாஞ்சில் சம்பத் உடன் ஒரு மினி பேட்டி...

 திமுகவில் இணையப்போகிறீர்களா?

 "என்னுடைய இலக்கியப் பணி, எழுத்துப் பணி, நடிப்புப் பணி போன்ற அனைத்தும் கட்சியில் இணைந்தால் அடிப்பட்டு போய்விடும். அதனால், இப்போதைக்கு திமுகவில் இணையவில்லை. ஆனால், வகுப்புவாத சக்திகளை எதிர்க்க திமுகவை ஆதரித்து சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யப்போறேன். வரும் 25-ஆம் தேதி திமுகவின் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திலும் பேசப்போகிறேன். கட்சி உறுப்பினர் ஆகாமலேயே என்னால் திமுகவுக்கு வலிமை சேர்க்க முடியும். வலிமை வாய்ந்த ஒரு பிரசாகராக இருப்பேன். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறது."

 'ரஜினி அரசியலுக்கு வரமட்டார். பார்த்துக்கொண்டே இருங்கள்' என்று நீங்கள் கூறியது போலவே ரஜினி வரவில்லையே?

 "ரஜினி வருவதற்கு எந்த விதமான மூலதனமும் இல்லை. வயதாகிவிட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. மண் சார்ந்து, மொழி சார்ந்து ரஜினி சிந்திக்கவில்லை. தமிழர்களின் உரிமை போராட்டங்களைக் கொச்சைப்படுத்தினார். இப்படி தமிழகத்தின் நலனில் அக்கறை இல்லாத ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதுதான் நடந்திருக்கிறது. இப்போதும், ஒன்று சொல்கிறேன். அண்ணன் ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக அமர்வார்."

 கடைசியாக அமமுகவில்தான் இருந்தீர்கள். இம்மாதம் 27-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

 "சசிகலா வந்தபிறகு அதிமுகவில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உறுதி. 'என்னை முதல்வர் ஆக்கியது சசிகலா அல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள்தான். சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை' என்று நன்றி மறந்த எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், சசிகலா வந்தவுடன் நிலைமை தலைகீழாக மாறும். எடப்பாடி பழனிசாமியே இந்தக் கட்சியில் இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.:

 சசிகலாவின் உடல்நிலை... மருத்துவ சிகிச்சை...

 "இதற்குப் பின்னால் எதோ சதி இருக்கிறது என்றே கருதுகிறேன். இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்ற நிலையில், அவர் விடுதலை பெறுகின்ற தருணத்தில் இப்படி ஒரு நிலைமையை உருவாக்கிவிட்டார்களா என்று சந்தேகமாக இருக்கிறது."

 'சசிகலா உயிருக்கு ஆபத்து' என்று திவாகரன் கூறியுள்ளாரே?

 "சசிகலா சிறையில் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்காது. அதனால், சில பேரங்கள் மருத்துவமனையில் நிகழலாம். அதேநேரத்தில், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கிறது. பாஜக எந்த பாவத்தையும் செய்யும். அவர்கள் செய்கின்ற பாவ வலையில் விழுந்துக் கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு ஆபத்து விளைவித்தால் தனது பதவிக்கு ஆபத்து வராது என்று நினைக்கிறார்.

 இதுபோன்ற காரணங்களால் சசிகலாவின் விடுதலையை உடனடியாக உறுதி செய்து 27 ஆம் தேதி வரை காத்திருக்காமல், அவர் விரும்புகின்ற வகையில், அவர் யாரை நம்பிக்கைக்குரியவராக கருதுகிறாரோ அவருடைய பாதுகாப்பில் இருக்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சூழல் வரவேண்டும்.

 'தமிழ்நாட்டிற்கான திட்டங்களை பெறுவதற்காகத்தான் போனேன்' என்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அண்ட புளுகு ஆகாச புளுகை அவிழ்த்துவிட்டார். ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் இவர், இனிமேல் என்ன திட்டங்களைத் தீட்டப்போகிறார்? எந்தத் திட்டத்தை தொடங்கிவைக்கப்போகிறார்? சசிகலாவை வேறு ஒரு வழக்கில் சிக்கவைத்து மீண்டும் அவரை சிறையில் அடைத்து இதயமே இல்லாதவர்களின் கையில் மீண்டும் ஒப்படைக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்பதை பேசப் போனாரே தவிர, வேறு ஒன்றுக்கும் போகவில்லை."

 இதனால் அவர்களுக்கு என்ன பயன்?

 "அதிமுகவை பலவீனப்படுத்த சசிகலாவை முடக்க நினைக்கிறது பாஜக. அது ஆட்டுவிப்பதற்கு தகுந்த மாதிரிதான் அதிமுகவும் ஆடுகிறது. அதிமுகவை இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி, அதிமுகவில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. இந்த தரம்தாழ்ந்த அரசியலை பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் செய்தார்கள். இப்போது தமிழகத்திலும் செய்ய காத்திருக்கிறார்கள். அதற்கு அதிமுக அடிமைகள் துணையாக இருக்கிறார்கள்."

 சசிகலா சிறையில் இருந்து வந்தால் சந்தீப்பீர்களா?

 "நிச்சயம் சந்திக்க மாட்டேன். அப்படி சந்தித்தால், அந்தக் கட்சியில் சேரப்போகிறேன் என்று செய்தி வரும். அதனால், தவிர்ப்பேன்.

 சசிகலா குறித்த குருமூர்த்தியின் பேச்சு குறித்து...

 "சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்ட குருமூர்த்தியின் கொழுப்பெடுத்த வார்த்தையை சபிக்கிறேன். தமிழ்நாட்டில் மதிக்கத் தகுந்த பெண்மணியாக இருக்கும் சசிகலாவை இப்படி கொச்சைப்படுத்தி இருப்பதன் மூலம் பெண்ணியத்தையும், அதன் கண்ணியத்தையும் காயப்படுத்தி இருக்கிறார். அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர சசிகலாவின் தயவும் தாட்சண்யமும் இல்லாமல் நடக்காது என்று கருதுகிறார்.

 சசிகலா மட்டுமல்ல, யார் வந்தாலும் இம்முறை அதிமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால், இது கட்சியாக பயணிக்க வேண்டும் என்றால் சசிகலாவால்தான் பயணிக்க வைக்க முடியும். முன்பு குருமூர்த்தி சொல்வதைத்தான் மோடி கேட்கிறார் என்றார்கள். ஆனால், குருமூர்த்திக்கு எதிரான ஒரு முடிவை டெல்லி இன்று எடுத்திருக்கிறது. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி சசிகலாவை இணைக்க வாய்ப்பில்லை என்று வீராப்புடன் டெல்லியில் பேட்டி கொடுத்துவிட்டு தமிழகம் வந்தார். ஆகவே, குருமூர்த்தியின் உபதேசத்தை கேட்கும் நிலையில் மோடியும் இல்லை. அமித் ஷாவும் இல்லை."

 திராவிட இயக்கத்தை வீழ்த்தவேண்டும் என்கின்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்திருப்பவர் குருமூர்த்தி. இந்தியாவில் இருக்கும் தேசிய வங்கிகள் அழியும் நிலைக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவரும் இவரே. ஆகவே, குருமூர்த்தி நம் இனத்திற்கு சுமை. இந்த மண்ணிற்கு அவமானத்தின் அடையாளம்."

- வினி சர்பனா