சிறப்புக் களம்

”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்!"- நாஞ்சில் சம்பத் பேட்டி

”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்!"- நாஞ்சில் சம்பத் பேட்டி

sharpana

’ஜனவரியில் கட்சித் துவக்கம்; 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்போவும் இல்ல’ என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு அரசியல் அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார் ரஜினி. இந்நிலையில், நாஞ்சில் சம்பத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,

ரஜினியின் கட்சி அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

ரஜினியின் இந்த அறிவிப்புக்கு இன்றைக்கு மட்டும்தான் ஆயுள் உண்டு. இதுவும் புஸ்வானம் ஆகிப்போய்விடும். கட்சி தொடங்குவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் சூழலும் அவருக்கு அமையவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கமாட்டார். பார்த்துக்கொண்டே இருங்கள். அவரது ரசிகர்களை மாற்றி மாற்றி ஏமாற்றுவது நல்லதல்ல.

கட்சி ஆரம்பிக்க மாட்டார்’ என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

மக்களையே சந்திக்காமல் எப்படி கட்சி நடத்துவார்? எப்படி தன்னுடைய இயக்கத்தை முன்னெடுத்து செல்லமுடியும்? அதனால், ஏழேழு ஜென்மத்திற்கும் தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்கமாட்டார். அவருக்கு மக்கள் எழுச்சியும் உண்டாகாது. ரஜினி மன்றத்தில் இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் எல்லோருக்கும் 55 வயதிற்குமேல்தான் ஆகிறது. அதனை வைத்து என்ன அறுவடை செய்யமுடியும்?

கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை  நியமித்திருக்கிறாரே ரஜினி?   

தமிழருவி மணியன் திராவிட இயக்கத்தின் மீது சித்தாந்த ரீதியாக பகை உள்ளவர். எனது சிறு வயதிலேயே, திராவிட கழகங்களை விமர்சித்து தொடர்ந்து துக்ளக்கில் எழுதி வந்தவர். அப்படிப்பட்ட தமிழருவி மணியன்தான், இக்கட்சியின் மேற்பார்வையாளர் என்பதால் திராவிட இயக்கத்துக்கு ஏதாவது ஒரு பலவீனத்தை உருவாக்கமுடியுமா என்பதன் அரசியல் இது. ஆனால், தமிழருவி மணியன் இருக்கும் இடத்தில் அரசியல் சரித்திரம்தான் இருக்கும். அரசியல் நடக்காது.

கலைஞர் - ஜெயலலிதா இல்லாத சூழலில் ரஜினி இருப்பதுதான் பொருத்தம் என்கிறாரே குருமூர்த்தி?

கலைஞரோடும் ஜெயலலிதாவோடும் ரஜினியை ஒப்பிடுகின்ற குருமூர்த்தியின் அரசியல் அறியாமைக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஜெயலலிதாவின் துணிச்சலும் ஏழை மக்கள் மீது அவருக்கு இருந்த கரிசனமும் ரஜினிக்கு இருக்கிறதா என்பது முதல் கேள்வி. கலைஞரிடம் இருந்த கூர்மையான அறிவும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் உயரவேண்டும் என்ற சமூக பார்வையும் ரஜினிக்கு இருக்கிறதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழக சினிமாவில் பாடலுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. தியாகராஜ பாகவதர் படங்கள் செய்த சாதனை அது. பாட்டுக்காகவே ஓடிய படங்களை வசனத்திற்காகவும் ஓடும் என்று நிரூபித்தவர் கலைஞர் என்பது வரலாறு. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது துணிச்சலுடன் ’மிசா தவறு’ என்று இந்திரா காந்தியை எதிர்த்தவர். கலைஞர் என்ற காவியத் தலைவனோடு அட்டைக்கத்தி ரஜினியை தயவு செய்து ஒப்பிடவேண்டாம். ரஜினி கட்சி தொடங்கினால் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் போன்றோருக்கு கொஞ்சநாள் பிழைப்பு நடக்கும். அவ்வளவுதான்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது யாருக்கு பாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?

ரஜினிக்குத்தான் மிகப்பெரிய பாதகம். அவருடைய உடல்நிலை ஏற்கனவே சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறார். ’கொரோனா யாரை எப்போது தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது’ என்று அவரே சொல்லிவிட்டு, இப்போது கட்சி ஆரம்பித்திருப்பதால் பாதிப்பு அவருக்குத்தான்

பாஜக தூண்டுதலாலேயே ரஜினி அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆன்மிக அரசியல் என்றாலே, அது பாஜக அரசியல்தான். ஆன்மிக அரசியல் என்றாலே பாசிச அரசியல்தான். ஆன்மிக அரசியல் என்றாலே மக்களை முட்டாளாக்கும் அரசியல்தான். ஆன்மிக அரசியல் என்றாலே ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாதான். இதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆன்மிக அரசியல் என்பது காவி அரசியல்தான். நாசவேலை செய்வதே பாஜகவின் தொழில். திமுகவின் வெற்றிக்கு பாதிப்பை உருவாக்க முடியுமா என்று நினைத்தே ரஜினியை இறக்கி இருக்கிறார்கள்.

அதோடு, ரஜினி வெற்றிபெற்றால் அவரைப் பயன்படுத்தி ஆட்சியமைக்க முடியுமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் அதற்கு வாய்ப்பு இல்லை. ரத யாத்திரை நடத்தி பாஜகவை வளர்த்தெடுத்த பாஜகவின் முகமான அத்வானியையே ஓரங்கட்டிய கட்சி பாஜக. ராமர் கோவில் கட்டுவோம் என்று ஊர் ஊராக பிரச்சாரம் செய்த உமா பாரதியை ஓரங்கட்டிய இவர்கள் எந்த நாச வேலையையும் செய்வார்கள். ரஜினியை அப்படியே தமிழகத்தில் ஊடுருவ பயன்படுத்திக்கொண்டு விட்டுவிடுவார்கள்.

ரஜினி ஊழலற்ற அரசு அமைப்பேன் என்று கூறியிருக்கிறாரே?

இவர்கள் நடத்தும் பள்ளிக்கு வாடகை கட்டவில்லை. இவர்களின் கல்யாண மண்பத்துக்கு வரி கட்டவில்லை. இவரா ஊழலைப் பற்றிப் பேசுவது? இவர் படத்திற்கு எத்தனை கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன் என்று இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. படத்திற்கு நடிக்க வாங்கிய பணத்ததை எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? இப்படி மறைமுகமாக இருக்கும் ரஜினியே மிகப்பெரிய ஊழல்வாதிதான்.

ரஜினி வருகையை ஓ.பி.எஸ் வரவேற்றுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஓ.பி.எஸ் அதிமுகவில் இருக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ் பேர்வழி. அதனால்,  அவர் வரவேற்றதில்,ஆதரவு தெரிவித்ததில் நான் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

இனி, கமல்ஹாசன் எதிர்காலம் என்னவாகும்?

கமல்ஹாசனின் நிலைமை ஏற்கனவே மோசமாகத்தான் இருக்கிறது. ரஜினியாலும் கமலாலும் தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவே முடியாது.

-வினி சர்பனா