சிறப்புக் களம்

'ஆளவந்தான்' நந்துவும், 'நானே வருவேன் கதிரும்'...! - ரெண்டு பேரும் ஒன்னா...?

'ஆளவந்தான்' நந்துவும், 'நானே வருவேன் கதிரும்'...! - ரெண்டு பேரும் ஒன்னா...?

subramani

தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசைக்க செல்வராகவன் இயக்கியிருக்கும் சினிமா 'நானே வருவேன்'. இது கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. கூடவே பலர் இது கமல்ஹாசன் நடித்த ஆளவந்தானை நினைவூட்டுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் இரட்டையரில் ஒருவர் சைக்கோ என்பதைத் தாண்டி ஆளவந்தானின் நிழல் நானே வருவேனில் எங்குமே இல்லை. நானே வருவேன் தமிழ்சினிமா இதுவரை பார்க்காத வித்யாசமான சைக்கோ த்ரில்லர் படம்.

ஆவி பேய் போன்ற கதைகளை பொறுத்தவரை அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்பட்ட நபருக்கு தனக்கு என்ன நடக்கிறது. யார் தன்னுடலில் புகுந்தது என்றே தெரியாது என்பது போலவும் கூடவே அவரை அவரைச்சுற்றியிருப்பவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்பது போலவுமே இதுவரை கதைகள் வந்திருக்கின்றன. உதாரணமாக சந்திரமுகி. ஜோதிகாவுக்கு தன் உடலில் வேறு ஒரு அமானுஷ்ய மாற்றம் நிகழ்வதும் அதன் விளைவாக அவர் வித்யாசமாக நடந்து கொள்வதும் அவரால் உணரவே முடியாது.

இது போன்ற விஷயங்களில் நானேன் வருவேன் முற்றிலும் மாறுபடுகிறது. இக்கதையில் அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்படும் சிறுமிக்கு தனக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நன்றாகவே புரிகிறது. இக்கதையில் உளவியல் டாக்ராக நடித்திருக்கும் பிரவுவிடம் பேசும் சிறுமி. “எனக்கு தெரியும் சோனு என் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறான். உங்களுக்கு தெரிய மாட்டான். எனக்கு என்ன நடக்குதுனு நல்லா தெரியும்” என்கிறார். நடிப்பில் அபார சதமும் அச்சிறுமி அடித்திருக்கிறார்.

அதே போல பேய் ஆவி கதைகளில் ஆவி பிடித்தவரை சரி செய்ய மலையாள மந்திரவாதி அல்லது இஸ்லாமிய பேயோட்டிகளை கொண்டு வருவார். ராகவா லாரன்ஸ் படங்கள் உதாரணம். ஆனால் நானே வருவேன் வித்யாசமாக ஆவி குறித்து ஆராயும் டெக்னோ இளைஞர்களை காட்டியிருக்கிறது. அவர்கள் சிறிய அளவிலான காட்சிகளில் வந்து சென்றாலுமே அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் மொழி நமக்கு பிடிக்கிறது.

ஆளவந்தான் நந்து நானே வருவேன் கதிர் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருமே நிராகரிப்புகளால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். ஆளவந்தானில் தன் சித்தி கொடுமையால் நந்து சைக்கோ ஆகிறார். கூடவே பெரிய போதை வஸ்து உபயோகமும் நந்துவை குழந்தையாகவும் சைக்கோவாகவும் மாற்றி மாற்றி அடிக்கும். அதிலும் நந்துவுக்கு ஒரு சுயநியாயம் உண்டு. அது பெண்கள் என்றாலே கொடுமையானவர்கள் என்பதே. அதனால் தான் தன் சகோதரனை ஒரு பெண்ணிடமிருந்து காப்பாற்றுவதற்காக தான் முயல்வதாக அவர் நம்புகிறார். அதே நேரம் தனது தாய் குறித்த சிந்தனைக்குப் போகும் போது குழந்தையாகிவிடுவார்.

நானே வருவேன் கதிரை பெற்ற தாயே நிராகரிக்கிறாள். ஆனால் அவள் மோசமான தாய் அல்ல. சின்னவயது கதிரின் சைக்கோ செயல்பாடுகள் அவளை வேறு வழியின்றி அப்படி செய்யவைக்கிறது. கூடவே கதிரின் கதாபாத்திரம் குறிப்பிட்ட யார் மீதும் கோவம் உள்ளதாக காட்டப்படவில்லை. சுய பச்சாதாபம் உள்ளதாக அது உள்ளது. அவன் சிறுவயதில் பெரிய நிராகரிப்புகளை சந்தித்ததால் தனக்கு அன்பான குடும்பம் வேண்டும் என்றும்., தனக்கு மட்டும் ஏன் எதும் நிலைக்க மாட்டேங்குது என்றும் மனவிரக்தி அடைகிறான். இவ்வகையில் நந்துவும் கதிரும் வெவ்வேறு துருவங்கள்.

செல்வராகவனின் இயக்குதிறன் பன்மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒரு சர்வதேச தரத்திலான கதை சொல்லல் பாணி இப்படத்தில் உள்ளது. “இப்டியான லொகேசன் எங்க இருக்கு. வில் அம்பு எல்லாம் விட்டு சண்டை போடுறார். அது உண்மைக்கு நெருக்கமாக இல்லை.” என்கின்றனர் சிலர். செல்வராகவனின் படைப்புகள் பெரும்பாலும் அவரது தனிமன உலகினுள் சுழலும் தன்மை கொண்டவை. அவை வெகுஜன மனங்களுக்குள் புக போராடவே வேண்டியிருக்கிறது.

அதே நேரம் சில முக்கிய காட்சிகளை மேலோட்டமாக அணுகியிருப்பது நானே வருவேனின் பலவீனம். குறிப்பாக தன்னை டீஸ் செய்யும் மூவரை வேட்டையாடுகிறார் கதிர். இது அழுத்தமான காரணமாக இல்லை. என்பது ஒரு வாதம். ஆனால் சின்ன வயதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட கதிருக்கு கொலை செய்ய இந்த சின்னச் சின்ன காரணங்கள் போதுமானதாக உள்ளது.

கதிர் நந்து இருவரும் அன்புக்கு ஏங்கும் வளர்ந்த குழந்தைகள் ஆனால் அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பது புரியாமல் சிக்கிக் கொள்கின்றனர். நானேவருவேன் தமிழ் சினிமா ரசிகர்களை ஆளவந்திருக்கும் மன்னன்.

சத்யா சுப்ரமணி