சிறப்புக் களம்

20 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் இந்திய குதிரையேற்ற வீரர்.. யார் இந்த ஃபவுத் மிர்சா?

20 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் இந்திய குதிரையேற்ற வீரர்.. யார் இந்த ஃபவுத் மிர்சா?

EllusamyKarthik

வரும் 23 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ளார் ஃபவுத் மிர்சா. இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இந்த ஈவெண்டில் பங்கேற்கும் வீரர் இவர். 

இதற்கு முன்னதாக 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தரஜித் லம்பாவும், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இமித்தியாஸ் அனீஸும் குதிரையேற்ற ஈவெண்டில் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர். 

யார் இந்த ஃபவுத் மிர்சா?

29 வயதான இவர் கர்நாடகாவின் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை ஹஸ்னீன் மிர்சா கால்நடை மருத்துவர். அதனால் இயல்பாகவே விலங்குகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பால்ய பருவத்திலிருந்தே கிட்டியுள்ளது. அதனால் அவரது வயது பிள்ளைகள் பிளே ஸ்டேஷன் கையுமாக விளையாடிக் கொண்டிருக்க ஃபவுத் மிர்சா நாய், பூனை மற்றும் குதிரைகளுடன் விளையாடி தனது பொழுதை செலவிட்டுள்ளார். அதில் குதிரைதான் ஃபவுத் மிர்சாவின் பேவரைட். அதுவே நாளடைவில் அவரை குதிரையேற்ற வீரராக மாற்றியுள்ளது. 

2018 ஆசிய விளையாட்டுகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். போலாந்தில் 2019 இல் நடைபெற்ற Concours Complet International ஈவெண்டில் தங்கம், 2021 இல் மீண்டும் Concours Complet International லாங் ஈவெண்டில் தனது இரண்டு குதிரைகளையும் ரைட் செய்து குறைந்தபட்ச தகுதியும் பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தடைகளை தாண்டி ஒலிம்பிக் பயிற்சி!

குதிரைக்கு ஏற்பட்ட காயம், கொரோனா தொற்றால் ஜெர்மனிக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை, ஈவெண்டுகள் ரத்தானது மாதிரியானவை ஃபவுத் மிர்சா பயிற்சியை மேற்கொள்ள தடையாக அமைந்தன. இருப்பினும் அந்த தடைகள் அனைத்தையும் கடந்து லண்டன் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை Sandra Auffarth இடம் பயிற்சி பெற்று வருகிறார் ஃபவுத். இருவரும் டோக்கியோவில் ஒரே ஈவெண்டில் எதிரெதிராக விளையாட உள்ளனர். 

“இந்த விளையாட்டில் ரைடரும், பயிற்சியாளரும் எதிரெதிரே விளையாடுவது வழக்கமான ஒன்றுதான்” என்கிறார் ஃபவுத். 

ஓர் இலக்கை அடைய இணையும் ஈர் இதயம்!

“இந்த விளையாட்டில் வீரருக்கும், பந்தயத்தில் விளையாடும் குதிரைக்குமான பிணைப்பு என்பது மிகவும் முக்கியம். இரு இதயமாகவும், இரு மனங்களாகவும் பிரிந்துள்ள நானும், எனது குதிரையும் ஓர் இலக்கை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதில் எங்கள் இருவரது பங்களிப்பும் மிகவும் முக்கியம். 

பயணம், சூழல், உணவு என அனைத்துக்கும் குதிரை தகவமைத்துக் கொண்டால்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எனது இரண்டு குதிரைகளில் அனுபவம் மிக்க Seigneur Medicott குதிரையை பயன்படுத்தி விளையாட உள்ளேன். நிச்சயம் எனது குதிரை எனக்காக சிறப்பாக போராடும் என்ற நம்பிக்கை உள்ளது” என ஃபவுத் மிர்சா தெரிவித்துள்ளார். 

அவதார் திரைப்படத்தில் எப்படி பண்டோரா பிரதேசத்தில் வாழும் நாவியும், அங்குள்ள சக உயிரினங்களும் ‘ஸஹீலு’ (இணைப்பு) செய்து தங்களது நியூரல்களை இணைத்துக் கொண்டு இயங்குகிறதோ அது போல குதிரையேற்ற விளையாட்டில் ஒரு வீரருக்கும், குதிரைக்கும் இணைப்பு அவசியம். நிச்சயம் அந்த இணைப்பின் ஊடாக ஃபவுத் மற்றும் அவரது குதிரை டோக்கியோவில் சிறப்பாக அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.