சிறப்புக் களம்

தமிழக அரசு விதித்த ‘மத’ நிபந்தனை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் புதிய சிக்கலா? -அலசல்!

தமிழக அரசு விதித்த ‘மத’ நிபந்தனை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் புதிய சிக்கலா? -அலசல்!

கலிலுல்லா

''நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் நலன் கருதி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்'' என்று சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியான அரசாணை எண்488 மேற்கண்ட அறிவிப்பை சிக்கலாக்கியது.

அதில், 'முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/ மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது' எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 'வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள்' என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் தளத்திலும் இந்த பிரச்னை கவனம் ஈர்த்துள்ளது. திமுக அரசு அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு பேசுகையில், ''சிறையில் 10 ஆண்டுகள் கழித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கையாக இருந்தது. அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் அனைவரும் 'பொதுமன்னிப்பு' வழங்கி விடுதலை செய்யப்பட்டுவார்கள் என திமுக அரசு அறிவித்தது. மன்னிப்பு பொது எனும்போது அதில் ஏன் மதத்தை அளவுகோலாக வைக்க வேண்டும் என்பது தான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. இதையே தான் எங்கள் தலைவர் திருமாவளவனும் முன்வைத்தார். மதத்தை அளவுகோலாக வைப்பவர்கள் சாதியையும் ஏன் அளவுகோலாக வைக்கமாட்டார்கள்? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. உதாரணமாக மேலவளவு படுகொலை மோசமான சாதிய பயங்கரவாத படுகொலை அது. அந்த படுகொலையில் ஈடுப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாம் பயங்கரவாதத்தில் வராதா?

அப்படிப்பார்க்கும்போது பயங்கரவாத செயல் என்ற அளவுகோல் தவறானது. திமுக அரசு 700 பேரை விடுதலை செய்ய கணக்கெடுப்பு நடத்தியது. அதில் வெறும் 38 பேர் தான் இஸ்லாமிய சிறைவாசிகள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் முழுமையாக கழித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் மாற்றமிருக்க கூடாது. சிறை வாழ்க்கை என்பது திருந்தி வாழ்வதற்கான வாய்ப்புதான். 20, 25 ஆண்டுகள் கழித்தும் இஸ்லாமியர்கள் சிறையில் இருக்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பாட்ஷா சிறையில் இருக்கிறார். 85வயதான அவர் நடுக்க வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வயதில் அவர் இந்த சமூகத்துக்கு எதிராக என்ன ஆபத்தை விளைவித்திட போகிறார்?.

மார்ச் மாதம் ஹரியானாவில் ராஜ்குமார் என்ற ஆயுள் சிறைவாசி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், '10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம். சட்டப்பிரிவு161 அடிப்படையில் அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம். இது மாநில உரிமை சம்பந்தபட்டது' என தெரிவித்துள்ளது. மாநில அரசின் உரிமைகளைப்பற்றி பேசும் திமுக 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும். மேலும் மத ரீதியான இந்த அளவுகோலை முன்வைத்து வெளியிடப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், ''பொது மன்னிப்பு என்பது கருணை அடிப்படையில் வழங்கப்படுவது. இந்த கருணை அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பது தான் எங்கள் கருத்து. இதில் குற்றவாளிகளின் குடும்ப சூழலை அரசு கணக்கில் கொள்ளவேண்டும். 2008ம் ஆண்டுக்குப் பிறகு சிறைவாசிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த சூழலில் சிறைவாசிகள் விடுதலை குறித்து அறிவித்த திமுக அரசு அதில் மத அளவுகோலை முன்வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று அரியணை ஏறியுள்ள திமுக அரசு, அந்த சிறுபான்மை மக்களையும், 7 தமிழர்களையும் கைவிடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் இந்த பிரச்னையை நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். இதுவரை யாரும் விடுதலை செய்யப்படவில்லை என்பதால் எங்களுக்கு ஏமாற்றமோ, அதிருப்தியோ இல்லை. எனவே விடுதலை செய்யும்போது பாராபட்சம் கூடாது என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக இந்தியாவில் முறையான விசாரணை என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. உதாரணமாக பேரறிவாளன் விவகாரத்தில் விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி ரகோத்தமனே விசாரணையில் தவறு நடந்துவிட்டதாக கூறியிருக்கிறார். அறுதியிட்டு ஒருவரை குற்றவாளி என கூற முடியாத சூழலில், சிறையில் இருப்பவர்கள் தினந்தோறும் வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். கோவையில் திமுகவின் அறிவிப்பால் சந்தோஷமாக இருந்த ஆஷிக் என்பவரின் தாயார், இந்த அரசாணையால் மனமுடைந்து இறந்தும் விட்டார்.

அவர்கள் குடும்பத்தார் 'எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்' எங்களிடம் கூறியதே இங்கே வேதனையுடன் பதிவு செய்கிறேன். அதுமட்டுமல்லாமல், பொதுச்சமூகம் இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பத்திற்கு வீடு வழங்க மறுக்கிறது. அவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் தீவிரவாதியின் குழந்தை என தனிமைபடுத்தப்பட்டு சொல்லண்ணா துயரத்திற்கு ஆளாகிறார்கள். குற்றம்பரம்பரையாகவே வாழும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு திமுக அரசு அவர்களை விடுவிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் நவ்சாத் கூறுகையில், ''சட்டரீதியாக எந்தவித பிரச்னையும் இல்லை. மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறைவாசிகளை விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. 7 தமிழர்கள் விடுதலையில் கூட அதுவே குறிப்பிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டிலிருந்து வெளியான அனைத்து அரசாணைகளிலும் அவர்கள் விடுதலைக்கு தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக எந்த குற்றத்தையும் நியாயப்படுத்திவிட முடியாது. குற்றம் குற்றம்தான். அப்படிப்பார்க்கும்போது, ஒருவர் 10 ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால், அவர்களின் நன்னடத்தைகளை பொறுத்து அவர் விடுவிக்க தகுதியானரவாகிவிடுகிறார். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

காவல்துறையினர் பதிவு செய்த அனைத்து வழக்குகளும் உண்மையானவை என்றும் சொல்லிவிட முடியாது. அதேபோல சிறையில் இருக்கும் அனைவருமே குற்றவாளிகளாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம்,22 வருடங்கள் சிறையிலிருந்த நபர்களும் கூட அவர்களின் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டவை என்று கூறி விடுதலை செய்யப்பட்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள். பொய் வழக்கு என கூறி நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன. அதனடிப்படையில் பார்க்கும்போது பொதுமன்னிப்பு என்ற தளத்தில் பாராபட்சம் தேவையில்லாத ஒன்று. இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.