2011 உலகக்கோப்பையில் இந்திய அணியின் 'அன்சங் ஹீரோ' என்று புகழப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் முனாஃப் படேல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் போது இந்திய அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர் முனாப் படேல். அப்போதைய பவுலிங் கோச் எரிக் சிம்மன்ஸ் இந்திய அணியின் 'அன்சங் ஹீரோ' என்றால் முனாப் படேல் தான் என்று புகழ்ந்தார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்தவர் முனாஃப் படேல், 2006-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் கடைசியாக 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் அணியில் இருந்து ஓரங்கப்பட்டார். ஐபிஎல்க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் இடம் பெற்று விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல்லிலும் ஏலம் எடுக்கப்படாத நிலையில் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து பேசியுள்ள முனாஃப் படேல், என்னுடன் விளையாடிய அனைவரும் ஓய்வை அறிவித்துவிட்டனர். தோனியைத் தவிர. இதில் வருத்தப்பட எதுவுமில்லை. மற்றவர்கள் இன்னும் விளையாடி வந்து நான் ஓய்வு பெற்றால் ஒருவேளை வருத்தப்பட வாய்ப்புள்ளது. நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு கிரிக்கெட்டை தவிர வேறு ஒன்றுமே தெரியாது. இளம் கிரிக்கெட் வீரர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிடுகிறேன். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை என்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இளமைகாலம் குறித்து பேசிய முனாஃப், "நான் கிராமத்தைச் சேர்ந்தவன். என் குடும்ப நிலை காரணமாக இளமைகாலத்தில் நான் ஒருநாளைக்கு 35 ரூபாய் சம்பளத்துக்கு டைல்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்துள்ளேன். என் முன்னேற்றத்திற்கு கிரிக்கெட்டை தவிர வேறு எந்த பின்புலமும் இருக்கவில்லை. கிரிக்கெட் மட்டுமில்லை என்றால் நான் என்னவாகி இருப்பேனென்றே தெரியவில்லை. ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்துகொண்டிருப்பேன். என் வாழ்க்கையை இந்த கிரிக்கெட் தான் மாற்றியது. நான் கிராமத்தில் இருந்து வந்தாலும் பெரிய ஆட்களுடன் பழகினேன்.அவர்கள் என்னை புரிந்துகொள்ள தொடங்கியபோது என்னை அவர்களுக்கு பிடித்துபோனது" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் வார்னே எழுதியுள்ள ‘நோ ஸ்பின்’ என்ற புத்தகத்தில் முனாஃப் படேல் குறித்து நெகிழ்ச்சியோடு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இனிமையான குணமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட வீரரகளில் முனாப் படேலும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.