‘அம்மா என்று அழைக்காத உயிரில்லையே’ தொடங்கி, ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா’ என்பது வரை, நம் அம்மாக்களை சினிமாக்கள் பலவாறு கொண்டாடிவிட்டன. அம்மானாலே அன்புதான், அம்மானாலே தியாகம்தான், அம்மானாலே தைரியம்தான், அம்மானாலே தன்னம்பிக்கைதான், அம்மானாலே அம்மானாலேனு… ஒரே அன்பை பொழிஞ்சாச்சு.
சினிமாக்கள் ‘கொட்டுன’ அன்பு போதாதுனு, நம்ம ஊர் விளம்பரங்களும் அம்மாக்களின் பாரத்தை குறைக்கிறேன் பேர்வழினு ‘ஈஸியாக பாத்திரம் கழுவவது எப்படி’ ‘சுலபமாக துணி துவைப்பது எப்படி’, ‘துணியை வெளீர்னு வெளுக்க என்ன செய்யணும்’ என்று… நவீன அடக்குமுறைக்குள் கொண்டு சென்றது.
இதற்கிடையேதான் வந்துருக்கு இந்த அன்னையர் தினம். மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இந்த தினம் கொண்டாடப்படுது. இந்த தினம் தொடங்கப்பட்டதோட நோக்கம் என்னன்றதை விடவும்… ஒவ்வொரு அன்னையர் தினத்திலும் எந்த நோக்கத்துல கொண்டாடப்படுதுன்றதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கு.
இதை ஏன் அழுத்தி சொல்றோம்னா… இப்போலாம் அன்னையர் தினம் வந்தாலே ‘அம்மான்னாலே Multi Tasking Women’ ‘சமைச்சுகிட்டே குழந்தையை ரெடி பண்ணுவாங்க… சைடு கேப்ல லேப்டாப் வச்சு அதுலயும் வேலை பார்ப்பாங்க… அப்படியே வீட்ல இருக்க எல்லோருடைய ருசியையும் பசியையும் சொல்லாமலே தெரிஞ்சுக்குவாங்க’னு விதவிதமா பேச ஆரம்பிச்சிடறாங்க!
கேட்டவுடனே, ‘எதே… எங்கிருந்துய்யா இதலாம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்குறாங்க’னு தான் கேட்கத்தோணுது. இந்த மாதிரி விஷயங்களெல்லாம் இன்னைக்கு நேத்து வந்த பேச்சில்ல பாஸ்… காலங்காலமா தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியம்!
இப்படியான சில Cringe தன்மை நிறைஞ்சவங்களுக்காகவே ‘கொஞ்சம் இதலாம் ஓரங்கட்டிவச்சிட்டு, அம்மாக்களை சக மனுஷங்களா பாருங்கய்யா’னு சமீபத்திய சில விளம்பரங்கள் வெளிவந்துட்டு இருக்கு. அந்த விளம்பரங்களை பத்தியும் அது சொல்ல வர்ற நச் கருத்தை பத்தியும், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இங்க பார்ப்போம்!
Prega News – தவளும் வயதுடைய தன்னோட குழந்தைக்கு சாப்பாடு ஆர்டர் போட மறந்துட்டு ஆஃபிஸ்ல போய் மீட்டிங் அட்டெண்ட் பண்ற ஒரு அம்மா… திடீர்னு குழந்தையோட சாப்பாடு நியாபகப்படுத்தப்படுது அவங்களுக்கு. உடனே ‘தான் ஒரு நல்ல அம்மா இல்லயோ... குழந்தையோட சாப்பாடை மறந்துட்டோமே’னு குற்ற உணர்ச்சியில கூனிகுறுகி போயிடுறாங்க! அடுத்தடுத்து சில சம்பவங்கள் நடக்குது. இறுதியா ஒரு வசனம்… ‘Its okay if she Forgets! Even if a mother is imperfect, it is perfectly okay’ அப்டின்னு. இதோ அந்த வீடியோ...
Yes. அவங்கதான் கொஞ்சம் Imperfect-ஆ இருக்கட்டுமே… என்ன இப்போ?! ஒரு அம்மா ஏன் எல்லா நேரமும் Perfect-ஆகவே இருக்க நிர்ப்பந்திக்கப்படறா? அவளும் சக மனுஷிதானே...? மட்டுமில்லாம, குழந்தை வளர்ப்பென்ன அம்மாவின் பொறுப்பு மட்டுமா என்ன?
அப்பாக்களும், குடும்பங்களும் குழந்தை வளர்ப்பை பகிர்ந்துக்கிறதுதானே முறை? அதை விட்டுட்டு, ‘நீ ஏன் இதை பண்ணலை’னு அம்மாவை மட்டுமே குற்றவாளி கூண்டில் ஏற்றுவது எப்படி சரி?
Ariel – ஏன் எப்பவும் அம்மாக்களே துணி துவைக்கணும் என்ற கான்செப்ட்ல, ‘Why is laundry only a mother’s job? (துணி துவைப்பது அம்மாவின் வேலையாக மட்டுமே இருப்பது ஏன்), #ShareTheLoad (பகிர்ந்துகொள்வோம்), “Are we teaching our sons what we have been teaching our daughters? (நம் மகள்களுக்கு சொல்லிக்கொடுப்பதையெல்லாம், மகன்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறோமா?) போன்ற விஷயங்களை ஹேஷ்டேக்களாக, கேள்விகளாக இந்த பொதுச்சமூகத்துக்கு முன் கொண்டு வந்தது ஏரியல். அதானே… அது ஏன் சார் எப்பவும் அம்மாவே துணிகளை பளிச்சுன்னு ஆக்கணும்? நமக்கே அது தெரியாதா என்ன?
இதுல ரொம்பவும் கணக்க வைக்கும் குறிப்பிட்ட ஒரு விளம்பரம் உண்டு. அதன்படி குறிப்பிட்ட ஒரு வீடியோவோட முடிவுல, ‘71% பெண்கள் ‘வீட்டு வேலைகளை செய்து முடிக்க வேண்டும்’ என்பதற்காக, ஆண்களைவிட குறைவான நேரமே தூங்குகின்றனர். ஆகவே அவர்களின் வீட்டுப் பணிகளை பகிர்ந்துகொண்டு நாமும் செய்வோம்’ என்று சொல்வார்கள். ஒரு அம்மாவின் தூக்கத்தை, அவர் அம்மா என்பதாலேயே அவரிடம் இருந்து பறிப்பதை விட வன்முறையான விஷயம் வேற எதுவும் இருக்குமா? இதை வாசிக்கும் நீங்கள், யோசிச்சுப்பாருங்க... தினசரி உங்க தூக்கத்தை யாராவது ஒருத்தர் பறிச்சுகிட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்? யோசிக்கும்போதே பகீர்னு இருக்குல்ல...!
அப்போ, இந்த தரவு நம்மை உலுக்க வேண்டாமா? இதை உணரும் நொடியை விட கடினமான நொடி ஒரு பெண்ணுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.
Vim – சமீபத்திய ஒரு விம் விளம்பரத்தில், சிறுவனொருவன் வீட்டில் பாத்திரம் கழுவுவான். அதைப்பார்த்த அவன் அப்பா, ‘என்ன இன்னைக்கு உங்க அம்மாக்கு பிறந்தநாளா?’ என்பார். ‘இல்லை’ என்பான் மகன். ‘வேறென்ன ஸ்பெஷல்… Mothers day-வா?’ என்பார். ‘இல்லை’ என்பார் பாட்டி. இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி சிரிப்பார் அந்த அம்மா! அப்பா எதுவுமே புரியாமல் ‘என்னதான் ஸ்பெஷல்’ எனக்கேட்க… உடனே அந்த பாட்டி, ‘இன்னைக்கு அவனுக்கு Independence day’ என்பார்.
அப்பா உடனே ‘இன்னைக்கு ஆகஸ்ட் 15 இல்லயே’ என சொல்ல… ‘ஆகஸ்ட் 15 இல்ல, ஆனா நாம வேலைய நாமளே செஞ்சுகிட்டா அதுவே சுதந்திர தினம் தானே’ன்னு சொல்வாங்க! கூடவே, ‘நீ எப்போ உன்னோட சுதந்திர தினம் கொண்டாடப்போற’னு கேப்பாங்க!
இதேபோல, கொரோனா நேரத்தில் செவிலியர் பணியில் அம்மா பிஸியா இருக்க… இந்த பக்கம் அப்பா தன் குழந்தைகளை கண்ணும் கருத்துமா கவனிச்சுகிட்டு, அங்க இருக்க வைஃப்க்கு சுடச்சுட சமைச்சு பார்சல் கொடுத்து அனுப்புவார்!
இன்னும் இதே விம், ஏரியல், Prega news இதுபோன்ற பல விளம்பரங்களை அம்மாக்களுக்காக செய்துள்ளது. ஆனாலும் இது அதிகமான நிறுவனங்களால முன்னெடுக்கப்படலைன்றதுதான் சோகம். இப்பவும் பல விளம்பரங்கள்ல, ‘எங்க அம்மா என்னையும் பார்த்துக்குவாங்க, Office-ஐயும் பார்த்துக்குவாங்க’ என்கிற பாணியில் Multi tasking mummies தான் ஹீரோயின்களா இருக்காங்க.
கடைசியில அந்த குடும்பங்களேவும் ‘எங்க அம்மா இல்லாம எங்க வீடே இல்ல’ ‘அம்மா இல்லனா எங்க வீட்ல துரும்பும் அசையாது’ ‘அம்மா கைப்பக்குவம் மாதிரி வருமா’ என்றேல்லாம் பேசும்.
உண்மையில் அம்மாக்களுக்கு தேவைப்படுவது ‘நான் இல்லாமலும் நீ உன்னை பார்த்துக்கணும். நான் இருக்கும்போதும் நீயே உன்னை பார்த்துக்கணும். எனக்குனு ஒரு சுயம் இருக்கு. அதை நான் இழக்காமல் இருக்க, இந்த குடும்பம் எனக்கு சப்போர்டிவா இருக்கணும்’ என்ற உணர்வுதான். ஆக, இங்க அவங்களுக்கு புகழ்ச்சி தேவையில்லை. தேவையெல்லாம்… நிறைய நிம்மதியும், போதுமான அளவு ஓய்வும், ஆழ்ந்த உறக்கமும், கொஞ்சம் தனிமையும், அளவுகடந்த சுயமரியாதையும் தான்! அதை கொடுங்க போதும்.
மல்டி டாஸ்கிங்க் என்பது பெண்ணுக்கே உள்ள இயல்புன்ற மூடத்தனத்துல… நாமும் கூட நம்ம அம்மாக்களை இன்றளவும் பல விதங்களில் வஞ்சிக்கிறோம். உண்மையில அந்த காலத்து அம்மாவுக்கு கூட வீட்டுக்குள் மட்டும்தான் வேலை. ஆனா இந்த காலத்து அம்மாவுக்கு, வீட்டுக்கு உள்ளேயும் வேலை, வேலையும் வேலை. இதையெல்லாம் சத்தமா பேசுனா, அப்போ வெளியில வேலைக்கு போகவேண்டாம்னு சொல்லி நம்ம குடும்பங்கள் அம்மாக்களை முடக்கிடுது.
இந்த வன்மம் தீரணும். குடும்ப அளவிலருந்து மாற்றம் வரணும். அதுக்கு வீட்ல நம்ம அம்மாவோட பணிச்சுமையை நாம குறைக்கணும். அதாவது அம்மா மட்டுமே வேலை செய்யணும்னு நினைக்காம, நாமும் சேர்ந்து அதை செய்யணும். பாதி வேலையை குறைக்கணும். அதுமட்டும்தான் தீர்வு. அதுசரி, உங்க அம்மாகிட்ட நீங்க என்ன வேலையெல்லாம் இனி ஷேர் பண்ணிக்க போறீங்க? அத கமெண்ட்ல எங்ககிட்ட சொல்லுங்க. அதுக்கு முன்னாடி, இத்தனை வருஷம் வஞ்சித்தத்துக்காக, போய் உங்க அம்மாகிட்ட முதல்ல ஒரு சாரி சொல்லுங்க!
‘நீங்க சொல்ற மாதிரியெல்லாம் இல்லங்க... எங்க அம்மா எல்லாத்தையுமே விருப்பத்தின் பேரில்தான் எல்லாமே செய்றாங்க’ என்று சொன்னால்...
Sorry to say, ‘தானா செஞ்சாதாங்க தியாகம்...! இப்படி சொல்லி சொல்லி நாமளா அவங்க தலையில குடும்ப சுமைகளை சுமக்கவைக்கிறது ஒருவகையில துரோகம்!’
ஆக, அம்மாகிட்ட சாரி சொன்னதுக்கு அப்றமா, அன்னையர் தின வாழ்த்து சொல்லுங்க! இந்த அன்னையர் தினத்திலிருந்து ‘உங்க வேலையை, நீங்க பாருங்க!’