சிறப்புக் களம்

ஹைதராபாத் மூலம் தெலங்கானாவையே குறிவைக்கும் மோடி-அமித் ஷா

ஹைதராபாத் மூலம் தெலங்கானாவையே குறிவைக்கும் மோடி-அமித் ஷா

Veeramani

கர்நாடகாவுக்கு பிறகு தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற தெலுங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பு என பாஜக தலைமை கருதுகிறது. சென்ற வருட மக்களவை தேர்தலில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவை நிஜாமாபாத் தொகுதியில் பாஜகவை சேர்ந்த அரவிந்த் தோற்கடித்தது பாஜக தலைமையின் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

இதனால்தான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை சாதாரணமான ஒரு தேர்தலாக கருதாமல், சட்டசபைத் தேர்தல் அல்லது ஒருசில மக்களவை இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடந்தால் எந்த அளவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்  நடக்குமோ அந்த அளவு முயற்சி செய்து பாரதிய ஜனதா கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஹைதராபாத்தை தேர்ந்தெடுக்க இன்னொரு முக்கிய காரணம் அந்த நகரத்தின் மக்களுக்கு ஹிந்தி பரிச்சயமான மொழி. ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் ஹிந்தியில் பிரச்சாரம் செய்வது என்பது அந்த மக்களுக்கு அவர்கள் நேரடியாக தங்களுடைய கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பை அளித்து இருக்கிறது.

ஆகவேதான் ஒரு பக்கம் அமித் ஷா இன்னொரு பக்கம் ஜேபி நட்டா, இதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதைத்தவிர பாரதிய ஜனதாக் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் காய்களை நகர்த்த மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அமித் ஷாவின் வலதுகரமாக கருதப்படும் பூபேந்திர யாதவ் ஆகியோரையும் களமிறக்கியது.

தெலுங்கானாவின் தற்போதைய அரசியல் களம் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கிறது என அந்தக் கட்சியின் தலைமை கருதுகிறது. ஒரு பக்கம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது என்றும் தெலுங்கானா தனி மாநிலமாக உருவானபோது சந்திரசேகர ராவுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை எனவும் பாஜக தலைமை கருதுகிறது. அதே சமயத்திலே காங்கிரஸ்-தெலுங்கு தேசம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணியும் தெலுங்கானா மாநிலத்தில் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செல்வாக்குடன் இருப்பதை தகர்த்தால் பிற இடங்களில் பல்வேறு வாய்ப்புகள் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் என்கிற சூழ்நிலையில்தான் பாஜக தலைமை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தங்கள் கட்சியை மாநிலத்தில் நிலைநாட்ட முழு முனைப்புடன் களம் இறங்கியது. இன்னொரு முக்கிய காரணம் சமீபத்தில் ஹைதராபாத் நகரை உலுக்கிய மழை வெள்ளம். கிட்டத்தட்ட 30 உயிர்களுக்கு மேல் பலிகொண்ட இந்த வெள்ளத்தின் காரணமாக அந்த பகுதி மக்களுக்கு பல ஆயிரம் கோடி சொத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஆக்கிரமிப்புகள் மற்றும் நிர்வாகம் சரி இல்லாமல் இருப்பதே என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் ஹைதராபாத் நகரத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகள் மற்றும் 24 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதும் ஹைதராபாத் மாநகராட்சியின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. தற்போது ஹைதராபாத் மாநகராட்சியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிங்கு  99 இடங்கள் இருக்கின்றன;  அசாதுதீன் ஓவைசி கட்சிக்கு 44 இடங்களில் இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் 5 இடங்கள் மட்டுமே இருக்கின்றன.

ஆகவே கடுமையான போட்டியை அளித்து ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 20 இடங்களை பிடித்தால் கூட அது ஹைதராபாத் நகரத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கானா மாநிலத்திலும் பாஜக வேரூன்ற உதவிகரமாக இருக்கும் என அந்தக் கட்சியின் தலைமை கருதுகிறது ஏற்கனவே சென்ற வருட மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

அது மட்டும் அல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் குடும்பத்துக்கு கோட்டை என்று கருதப்பட்ட டுபாக்கா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலே தெலுங்கானா மாநிலத்தில் வேரூன்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது. மிகவும் சுலபமாக பிரதான எதிர்க்கட்சி இடத்துக்கு பாரதிய ஜனதா இப்போதே வந்துவிட்டது என பாஜக தலைவர்கள் களிப்புடன் இருக்கிறார்கள்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொடர்ந்து மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி யில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் மஜ்லிஸ் கட்சி 5 இடங்களை கைப்பற்றி இருப்பதன் காரணமாக அந்த கட்சியின் கோட்டையான ஹைதராபாத்தை உலுக்கி  பார்க்க வேண்டும் என்பதும் பாஜகவின் விருப்பமாக இருக்கிறது.  டிஆர்எஸ்-மஜ்லிஸ் கூட்டணி தெலுங்கானாவில் மிகவும் வலுவாக இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து முக்கிய எதிர்கட்சியாக பாரதிய ஜனதா செயல்பட்டால் அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் கட்சிக்கு நிச்சயம் அதிக வெற்றி கிடைக்கும் என பாஜக தலைமை கருதுகிறது.

ஆகவேதான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலை மிகவும் பிரம்மாண்டமான முறையில் பெரிய மாநில சட்டசபைத் தேர்தல் போல பாஜக பெரும் திட்டங்களுடன் வியூகம் வகுத்து மூத்த தலைவர்களின் பிரச்சாரத்துடன்  நடத்தி முடித்துள்ளது.

-.புதுடெல்லியிருந்து கணபதி.