சிறப்புக் களம்

”குடும்பம் இணைந்தது; பாட்டி கனவு பலித்தது!” - மு.க அழகிரி மகள் கயல்விழி சிறப்பு பேட்டி

”குடும்பம் இணைந்தது; பாட்டி கனவு பலித்தது!” - மு.க அழகிரி மகள் கயல்விழி சிறப்பு பேட்டி

sharpana

’இதயம் இனித்தது… கண்கள் பனித்தன’ என்பதுபோல் முதல்வர் மு.க ஸ்டாலின் - மு.க அழகிரி உரசல்களுக்குப்  பிறகு  மீண்டும்  குடும்பமாக  ஒன்றிணைந்த பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் மு.க அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி. மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் தனது தம்பி, துரை தயாநிதியுடன் கலந்துகொண்ட கயல்விழி அழகிரியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். உற்சாகமுடன் பேசுகிறார்.

உங்கள் சித்தப்பா முதல்வரானதை எப்படி பார்க்கிறீர்கள்?

  “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சித்தப்பாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. நல்லாட்சியை வழங்குவார் என்று நாங்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் உணர்ந்துவிட்டார்கள். அதன், முன்னோட்டம்தான் முதல்நாள் கையெழுத்தில் 5 திட்டங்களை அறிவித்தது. பஞ்ச பூதங்கள் மாதிரி இந்த 5 திட்டங்களும் எங்கேயும் யாருமே செய்யாத அற்புதமான திட்டங்கள். இனி தமிழக மக்களுக்கு தொடர்ச்சியாக நன்மை மட்டும்தான் நடக்கும். அதனால், அடுத்தமுறையும் திமுகவே ஆட்சியமைக்கும்”.

உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கிறாரே?

”உதயநிதி என்கூடவே வளர்ந்த தம்பி. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் உதயநிதி பேசுவது ரொம்பவே பிடிக்கும். நகைச்சுவைக் கலந்து பாமர மக்களுக்கும் போய் சேரக்கூடிய அளவுக்கு பேசுகிறார். நானும் துரையும் கடந்த 6 ஆம் தேதி வீட்டிற்குச் சென்று சித்தப்பாவுக்கும் உதயநிதிக்கும் வாழ்த்துச் சொல்லிவிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டுதான் வந்தோம்”.

உங்கள் அப்பா மு.க அழகிரியின் வாழ்த்து… நீங்களும் உங்கள் தம்பியும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளீர்களே? எப்படி நிகழ்ந்தது இந்த மனமாற்றம்?

  “நீர் அடித்து நீர் விலகாது. என்னதான் மன பேதங்கள் இருந்தாலும் இருவரும் அண்ணன் தம்பிகள். பாசம் எப்படி விட்டுப்போகும்? சித்தப்பா முதல்வரானதற்கு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதனால்தான்,  சித்தப்பா முதல்வரானதில் பெருமைப்படுறேன் என்று மனதார வாழ்த்தினார். சித்தப்பா முதல்வராக பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பா, நான், தம்பி என எங்கள் அனைவருக்கும் சித்தப்பா அலுவலகத்திலிருந்து போன் செய்ததோடு அழைப்பிதழும் கொடுத்தார்கள். நானும் தம்பியும் உற்சாகமுடன் கலந்துகொண்டோம். சித்தப்பா பதவியேற்றதை நேரில் பார்த்தபோது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. எனது தம்பி துரையும் ரொம்ப சந்தோஷப்பட்டார். தம்பி உதயநிதியும் துரையும் கட்டி அணைத்துக் கொண்டார்கள். சித்தப்பாவும் எங்களிடம் அப்பாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். ரொம்பநாள் கழிச்சி எங்க குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்தேன். போனதெல்லாம் எனக்கு திரும்ப கிடைத்த மகிழ்ச்சி; உணர்வு. வார்த்தைகளால் சொல்லவே முடியவில்லை. கும்பிட்டக் கடவுள் காப்பாத்திட்ட மாதிரி இருந்துச்சி. எங்க பாட்டிதான் வீட்டின் ஆலமரம். பாட்டி மாதிரி ஒரு குடும்பத்தலைவி இருக்க முடியாது. குடும்பம் ஒற்றுமையா இருக்கணும் என்பதுதான் பாட்டியின் கனவு.  பாட்டி கனவு பலிச்சிடுச்சி”.

ஆனால், உங்கள் அப்பா பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லையே?

”கொரோனா சூழலால்தான் அப்பாவால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதுத்தவிர, வேறு எந்தக் காரணமும் கிடையாது. அப்பா சித்தப்பாவுக்கு போனில் வாழ்த்து சொன்னார். இருவரும் சகஜமாக பேசிக்கொண்டனர். எந்த வருத்தமும் இல்லை. கொரோனா சூழலில் உடல்நிலை சரியில்லாததால் பதவியேற்பு விழாவுக்கு வர முடியவில்லை என்று கூறியதோடு  ‘கண்டிப்பா சென்னை வருவேன். வந்து உன்னை பார்க்கிறேன்’ என்று சித்தப்பாவிடம் அப்பா கூறினார். வீட்டில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது மனசுக்கு ரொம்ப இதமாவும் நிம்மதியாவும் இருக்கு. ரெண்டு பேரும் ஒற்றுமையோடு இருந்தால் எல்லோருக்கும் நல்லதுதான்”.

உங்கள் சித்தப்பாவிடம் பிடித்த விஷயங்கள் என்ன?

 ” சித்தப்பா கடின உழைப்பாளி. அதேபோல, எந்த விஷயத்தையும் மென்மையாக அணுகக்கூடியவர். அது சிலப்பேருக்கு வராது. நான் ஏழாவது படிக்கும்போது பள்ளியில் நடந்த நாடகத்தில் கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்போ தாத்தாக்கிட்டப்போய் ’எனக்கு டயலாக் எழுதிக்கொடுங்க’ என்றேன்.  ’சித்தப்பாக்கிட்ட கேளு’ என்றார் தாத்தா. சித்தப்பாக்கிட்ட கேட்டவுடனே உற்சாகமா தாத்தா எழுதிய சிலப்பதிகாரத்திலிருந்து எனக்கு சுருக்கி எழுதிக்கொடுத்து டயலாக் பேச பயிற்சியும் அளித்தார் சித்தப்பா. அந்தப் போட்டியில் நான் முதல் பரிசு வாங்கியதற்கு காரணம் சித்தப்பாதான். அதெல்லாம் என்னால் மறக்கவே முடியாது”.

உங்கள் அப்பா தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியானதே?

   “அந்த மாதிரியெல்லாம் அப்பாவுக்கு எந்த எண்ணமும் இதுவரைக் கிடையாது. அப்படி இருந்தால் உடனே முடிவெடுத்து கட்சி ஆரம்பித்திருப்பார். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு அப்பா என்னைக்காவது சொல்லியிருக்காரா?  திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதனால்தான், கடந்த 7 வருடங்களாக மெளனமாகவும் இருந்தார். தாத்தாவின் கட்சியை விட்டுவிட்டு  அடுத்தவர் கட்சிக்குப் போக எப்படி மனது வரும்? என்னைக்குமே அப்படி நடக்காது. அப்பா மதுரையில் இருக்கிறார். நானும் தம்பி துரையும் சென்னையில் இருக்கிறோம். தேர்தல் முடிவுகள் வந்த அன்று டிவியைப் பார்த்துவிட்டு அப்பா எங்கள் இருவருக்கும் போன் செய்து ரொம்பவே சந்தோஷப்பட்டார்”.

மு.க தமிழரசு வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்ற உதயநிதி உங்கள் தந்தையிடம் சென்று வாழ்த்து பெறவில்லையே?  

  “அப்பா மதுரையில் இருக்கிறார். கொரோனா சூழலில் அடுத்தத் தெருவுக்குச் செல்வதே சரியானதல்ல. கண்டிப்பாக, தம்பி உதயநிதி அப்பாவை பார்க்க வருவார். அப்பாவும் சென்னை சென்று வாழ்த்து தெரிவிப்பார்”.

தயாநிதிமாறன்தான் உங்கள் குடும்பத்தைச் சேரவிடாமல் தடுக்கிறார் என்கிறார்களே?

”அப்படில்லாம் எதுவுமே கிடையாது. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். தயாநிதி அண்ணன் அப்படி பண்ணி அவருக்கு என்ன வரப்போகுது? என்ன லாபம்? அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு”.

அதேபோல, உங்கள் சித்தி துர்கா ஸ்டாலினுக்கும் உங்கள் அம்மாவுக்கும் தொடர்ந்து மனவருத்தம் என்று சொல்லப்படுகிறதே?

    “இது பொய்யான குற்றச்சாட்டு;தவறான தகவல். சிறு வயதில் நான் கோபாலபுரத்தில்தான் வளர்ந்தேன். சித்தப்பா மிசாவில் சிறையில் இருந்தபோது நான் ஒரு வயதுக் குழந்தை. எப்பவும் சித்திக்கிட்டேயேத்தான் இருப்பேன்னு அம்மா சொல்வாங்க. எங்கச் சித்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.  படிக்கும்போது விடுமுறையில் வரும்போதெல்லாம் சித்தியுடனேயே இருப்பேன். ரொம்ப அக்கறையா பார்த்துப்பாங்க. அதேபோல, அம்மாவும் சித்தியும் நெருக்கமாத்தான் இருக்காங்க. சித்தப்பா முதல்வரானதுக்கு அம்மா சித்திக்கு போன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. தாத்தா இறந்தபோது சித்திதான் அம்மாவுக்கு உணவு கொடுத்தாங்க. இஷ்டத்திற்கு இப்படியெல்லாம் சித்தி குறித்து தவறாக பேசக்கூடாது. சித்தி எதையும் வெளிப்படையாக பேசுவாங்க. என்ன தவறு என்றாலும் நேராகச் சொல்லும் குணம்தான் அவங்கக்கிட்டப் பிடிக்கும். அதேபோல, சூப்பரா சமைப்பாங்க. அவங்களோட மீன் குழம்புக்கு நான் மட்டுமல்ல குடும்பமே ரசிகர்கள். மீன்  குழம்பு அவ்ளோ நல்லா வைப்பாங்க”.

உங்கள் பாட்டி தயாளு அம்மாள் உடல்நிலை எப்படி இருக்கிறது?

   “பாட்டிக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருப்பதில்லையே தவிர, நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்காங்க. பாட்டியை நான் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். மற்ற உறவினர்கள் அனைவரையும் தாத்தா இறுதிச்சடங்கின் போது சந்தித்தது. இத்தனை நாட்களுக்குப் பிறகு சித்தப்பாவின் பதவியேற்பு விழாவில் சந்தித்தது ரொம்ப சந்தோஷம்”.

- வினி சர்பனா