மகளிர் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை அரங்கேறியிருக்கிறார் இந்திய நாயகி மிதலி ராஜ். அவரின் சாதனைப்பயணத்தின் சில தடங்களை பார்க்கலாம்.
தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்த மிதலி ராஜ், தனது சகோதரருடன் சேர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். இளையோர் கிரிக்கெட்டில் சாதித்த மிதலி ராஜ், 1999-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், தனது தனித்துவமான திறமையால் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தார். 183 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்ற இவர், தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்த வீராங்கனை ஆவார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
34 வயதாகும் மிதலி ராஜ், ராஸ்தானில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவர். தமிழர்களான துரைராஜ்-லீலா தம்பதியினரின் மகள். தந்தை துரைராஜ் ராஜஸ்தானில் விமானப்படையில் வேலை பார்த்த காரணத்தால் மிதலி அங்கு பிறந்தார். பின்னர் ஹைதராபாத்திற்கு அவர் தந்தை பணிமாற்றம் ஆனதால் அங்கு பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். இளம் வயதில் நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் சகோதரர் மிதுனுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். இளையோர் கிரிக்கெட்டில் சாதிக்கத் தொடங்கிய மிதலி பின்னர், தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மிதலி ராஜ் அறிமுகமானார். தமது தனித்துவமான ஆட்டத்தால் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். 10 டெஸ்ட் போட்டிகளிலும், 182 ஒருநாள் போட்டிகளிலும் மிதலி ராஜ் விளையாடியிருக்கிறார். இதுதவிர்த்து 63 ட்வெண்டி ட்வெண்டி போட்டிகளிலும் மிதலி ராஜ் களம் கண்டிருக்கிறார். தொடர் சாதனைகளின் விளைவாக அன்மையில் தேசிய அணியின் கேப்டனானாகவும் ஆனார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்தது உட்பட பல்வேறு சாதனைகளை மிதலி ராஜ் அரங்கேற்றியிருக்கிறார். அர்ஜூனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசத்தின் உயரிய விருதுகளையும் மிதலி ராஜ் பெற்றிருக்கிறார். மகளிர் கிரிக்கெட்டுக்கு அதிக வரவேற்பு இல்லாத போதும் அசாத்திய சாதனையை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் மிதலி ராஜ்.