சிறப்புக் களம்

தற்கொலை குற்றமல்ல - புதிய மசோதா சொல்வது என்ன?

தற்கொலை குற்றமல்ல - புதிய மசோதா சொல்வது என்ன?

Rasus

தற்கொலைக்கு முயற்சி செய்வது குற்றமல்ல என்று அறிவிக்கும் மத்திய அரசின் மனநல ஆரோக்கிய பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதா என்ன சொல்கிறது? என்பதைப் பார்க்கும் முன் தற்கொலை முயற்சி குறித்து நடைமுறையில் உள்ள சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

தற்போதுள்ள, மனநல சுகாதார பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாராவது ஒருவர் தற்கொலைக்கு முயன்றால் அது குற்றமாகும். அவர்களுக்கு சட்டத்தின் கீழ் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படும். ஏதேனும் போராட்டத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் கைது செய்யப்படுவது கூட தற்கொலை முயற்சி என்ற வழக்கின் கீழ்தான். மணிப்பூரில் 16 வருடங்கள் உண்ணாவிரதம் ஷர்மிளா கைது செய்யப்பட்டது இந்த விதியின் கீழ்தான்.

ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மசோதா, கடுமையான மன அழுத்ததிற்கு பிறகே ஒருவர் தற்கொலைக்கு முயல்வதால், தற்கொலை குற்றமல்ல என அறிவித்துள்ளது. தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு அரசு உரிய சிகிச்சையை வழங்க வேண்டும் எனவும் அந்த மசோதா கூறுகிறது.

இந்த மசோதாவின் மற்ற அம்சங்கள்:

மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் விபரங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

குணமான மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் பிரச்சனைகளை சந்தித்தால், அவருக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை அவரே முடிவு செய்யலாம். இதற்காக ஒரு பிரதிநிதியை அவர் நியமிக்கலாம்.

எல்லா மாநிலங்களும்‘மன ஆரோக்கிய திட்டம்’ ஒன்றை வகுக்க வேண்டும்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மின் அதிர்வு சிகிச்சை கொடுக்க கூடாது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருத்தடை செய்யக் கூடாது.