சிறப்புக் களம்

நாடாளுமன்றத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லையா..? தொடரும் குற்றச்சாட்டுகள்..!

நாடாளுமன்றத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லையா..? தொடரும் குற்றச்சாட்டுகள்..!

webteam

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். அதற்கு காரணம் ஒரு வீட்டில் ஒரு பெண் சரியாக இருந்தால் அந்த குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். ஒவ்வொரு குடும்பமும் முன்னேற்றப் பாதையில் சென்றால் நாடு முன்னேறும் என்பதே அதன் உள்ளடக்கம்.

அந்த வகையில் பெண்களை மதிக்க வேண்டும், கண்களைப்போல பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் காலம்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துகிறோமோ என்றால் அது கேள்விக்குறியே.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க பல்வேறு மகளிர் அமைப்புகள், மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் நீதிமன்றங்கள் என பல்வேறு துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல் பெண்களின் உரிமைக்குரல்கள் டெல்லியிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்திலும் பெண் உறுப்பினர்கள் கால் எடுத்து வைத்துள்ளனர்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 66 பெண்‌ எம்பிக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 716 பெண் வேட்பாளர்களில்‌‌ ‌76 ‌பேர் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றனர்.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் 4‌7 பெண்கள் களமிறக்கப்பட்டனர். இதில் 34 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 54 பெண் வேட்பாளர்களில்‌ சோனியா காந்தி‌, ஜோதிமணி, கேரளாவின் ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 24 பெண்களை நிறுத்திய பகுஜன் சமாஜ்‌ கட்சியில் ஒரே ஒரு வேட்பாளரும், சுயேச்சையாக போட்டியிட்ட 222‌ பெண் வேட்பாளர்களில் ‌ஒரே ஒருவருர் மட்டுமே வெற்றிப் பெற்றனர். தற்போதைய பெண் எம்பிக்களில் மிக இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றுள்ளார் சந்திராணி முர்மு.

தமிழகத்தை பொருத்தவரை திமு‌க சார்பில் போட்டியிட்ட‌ கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், நாட்டில் நடக்கும் பிரச்னைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் எடுத்துச் செல்ல நாடாளுமன்றத்திற்கு சென்றால் அங்கேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக நிலவி வருகிறது.

அதற்கு உதாரணமாக, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து போட்டி நிலவியபோது அஜித்பவாரின் உதவியால் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியமைத்தார். இது சட்ட விரோதமானது என அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் குரல் கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் மக்களவை பாதுகாவலர்கள் தங்களை பிடித்து தள்ளிவிட்டதாக கரூர் மக்களவை எம்பி ஜோதிமணி மற்றும் கேரளா காங்கிரஸ் எம்.பி ரம்யா ஹரிதாஸ் ஆகிய இருவரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மக்களவையில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அப்போது பாஜக-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் பாஜக பெண் எம்பி தன்னை தாக்கியதாக கேரளாவின் ஆலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ரம்யா ஹரிதாஸ், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக பெண் எம்பிக்களிடம், காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சில எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி “மக்களவையில் பாஜக பெண் எம்பிக்களிடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறான முறையில் நடந்து கொண்டனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கடந்த 3 கூட்டத்தொடரில் காங்கிரசார் குண்டர்கள்போல் செயல்பட்டு நாடாளுமன்றம் செயல்பட இடையூறு ஏற்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.