சிறப்புக் களம்

"எல்லாம் படிச்சீங்க; என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"- சிந்தனை சிற்பி பட்டுக்கோட்டை நினைவுதினம்

"எல்லாம் படிச்சீங்க; என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"- சிந்தனை சிற்பி பட்டுக்கோட்டை நினைவுதினம்

webteam

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ” என சிந்தனைகளை தூண்டுவதையே தனது கொள்கையாய் வைத்திருந்து அதை பாடல்கள் மூலம் மக்களுக்கு முழுமூச்சாய் முழங்கியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர், கவிஞர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கல்யாண சுந்தரனார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

“திருடராய் பார்த்து திருடா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... அதனால் திருடாதே”

பத்தொன்பது வயதில் பாடல்களை எழுத ஆரம்பித்த இவர், உருவத்தை காட்டாமல் பாடல்களின் வழியே உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். “நல்லத நான் சொன்னா நாத்திகனா?” என்ற பாடலே அவரது முதல் பாடலாக அமைந்தது. 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். மொத்தம் 180 பாடல்கள் மட்டுமே அவர் எழுதியுள்ளார். 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் இவர் தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது.

மனிதன் பிறக்கும்போது பிறந்த குணம் போக போக மாறுது;
எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் போகும்போது சேருது” என குழந்தை தன்மையையும் முதுமை தன்மையையும் விளக்கியவர்.

இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாக்கியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார்.

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா” என தனிமனித ஒழுக்கத்தை பாடல்கள் வழியே எளிமையாக கடத்தியவர்.

விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர் கல்யாணசுந்தரம்.

இயற்கை, சிறுவர்கள், காதல், மகிழ்ச்சி, சோகம், வீரம், நகைச்சுவை, நாடு, சமூகம், அரசியல், தத்துவம், ஏழைகளின் குரல், இறைமை என அனைத்து வகையான பாடல்களையும் எழுதி மக்களின் மனதை கவர்ந்தார்.

“சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?” என்ற கேள்வியால் மக்களின் மனதை துளைத்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் 1959 அக்டோபர் 8 ஆம் தேதியான இதே நாளில் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாத குழந்தை இருந்தது.

ஆளும் வளரணும்
அறிவும் வளரணும் அது
தாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு
ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்
மகிழ்ச்சி

மனிதனாக
வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
தம்பி மனதில் வையடா

வளர்ந்து வரும்
உலகத்துக்கே நீ வலது
கையடா நீ வலது கையடா” என சமூக அக்கறை மிகுந்த வரிகளையும் சிந்தனைகளையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு கால் நூற்றாண்டாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர் தனது 29ஆம் வயதில் இயற்கை எய்தினார். ஆனாலும் இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

1981 ஆம் ஆண்டு தமிழக அரசு கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. கல்யாணசுந்தரத்தின் நெருங்கிய நண்பர் எம்.ஜி.ஆரிடம் இருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் விருதை பெற்றுக்கொண்டார். 1993 ஆம் ஆண்டு தமிழக அரசு கல்யாணசுந்தரத்தின் அனைத்து பாடல்களையும் நாட்டுடமை ஆக்கியது. 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பட்டுக்கோட்டையில் கவிஞருக்கு மணிமண்டபம் திறந்துவைக்கப்பட்டது.