சிறப்புக் களம்

திறந்தவெளி வழிக் கல்வி படித்தால்.. மருத்துவம் படிக்க தடை!

webteam

தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி வழிக் கல்வி மூலம் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்திய மருத்துவ கவுன்சில அறிவித்துள்ளது.

மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவை திறந்தவெளி வழிக் கல்வி வாரியம் எதிர்த்துள்ளது. குறிப்பாக திறந்த வெளி மற்றும் தொலைதூரக்கல்வி வாயிலாக பயின்று தேர்ச்சி பெற்ற 3000 மாணவர்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் 899 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருப்பதாக வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வருடத்திற்கு திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி வாயிலாக 2 லட்சம் மானவர்கள் பயின்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், மருத்துவ கல்வியை உயர்த்தும் மருத்துவ கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இதனை பார்க்க முடிவதாகவும், தொலைதூரகல்வியில் பயிலுவோர் – செய்முறை பயிற்சி பெற வாய்ப்பு இல்லை என்ற அடிப்படையில் இது சரி என்றும் தெரிவித்தார்.

ஆனாலும் மருத்துவ கல்வி பெறும் வாய்ப்பை, நுழைவுத்தேர்வால் மட்டுமே முடிவு செய்ய கூடாது என தெரிவித்த அவர், பள்ளிக்கல்வியை நேரடியாக பெற, வாய்ப்பில்லாதவர்கள் தோலைதூர கல்வியில் +2 படிப்பதால், அவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால், தொலைதூர கல்வியிலும் செய்முறை பயிற்சியை உள்ளடக்க வேண்டும் என தெரிவித்தார்.

மருத்துவ நுழைவுத்தேர்வில் கடந்த ஆண்டு வரை தொலைதூர மற்றும் திறந்தவெளி வழிக் கல்வி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

அவர்களுடைய தேர்ச்சி விகிதமும் கவலைப்படும் வகையிலும் இல்லை. ஆனால், தினசரி வகுப்புகளுக்கு சென்று பயிலும் மாணவர்களோடு ஒப்பிடும் போது, இவர்களின் தகுதி நீட் போன்ற தேர்வுக்கு சரியாக இருக்காது என எம்சிஐ தெரிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், இது போன்ற திடீர் அறிவிப்புகளை வெளியிடும் எம்சிஐ, தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி கல்வி பயிலும் மாணவர்களையும் எப்படி தகுதிப்படுத்துவது என யோசிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு, செய்முறை தேர்வுகள் என்பது மருத்தும் பயில உதவும் என்பதால், அதனை எப்படி அறிமுகப்படுத்துவது, பயிற்றுவிப்பது என்பது போன்ற வழிகளை கண்டறிந்து செயல்படுத்தாமல், வெறுமனே தடை என அறிவிப்பு வெளியிடுவது மாணவர்களை பாதிக்கும் செயல் என கூறினார்.

இந்த தடையின் பின்னால், இரண்டு காரணங்களை எம்சிஐ தெரிவிக்கிறது. ஒன்று செய்முறை தேர்வு, மற்றொன்று தரம். செய்முறை தேர்வு இல்லையென்றால் அதனை அறிமுகம் செய்வதும், தரமான மாணவர்களாக இல்லையென்றால், பாடத்திடத்தில் மாற்றங்களை கொண்டு வருவதும் அரசின் கடமை. ஆனால், அதை விடுத்து மொத்தமாக தடை என்ற அறிவிப்பு, தொலைதூர கல்வி மற்றும் திறந்த வெளி கல்வி பயிலும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும்..