சிறப்புக் களம்

ஏமாற்றும் டேட்டிங் வலைத்தளங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஏமாற்றும் டேட்டிங் வலைத்தளங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்!

webteam

சோப்பு, சீப்பு வாங்குவதில் இருந்து சோற்றுக்கு ஆர்டர் செய்வதுவரை ஆன்லைனை நம்ப வேண்டியதாகி விட்டது, இந்த அவசர உலகத்தில்! இருந்த இடத்திலேயே ’ஆப்’களிலும் வெப்சைட்களிலும் ஆர்டர் செய்து அடிமையாகி வருகிறோம் மெதுவாக!

இது ஒரு பக்கம் இருந்தாலும் இணையதளத்தில் டேட்டிங் வெப்சைட் மூலம் ஏராளமான பணத்தைக் கொள்ளையடித்து வருகிறது திருட்டுக் கும்பல்கள்! அவர்கள் செய்வதெல்லாம் ஆசையை தூண்டுவதுதான். உங்கள் சபலப்புத்தியை இன்னும் கொஞ்சம் நோண்டி, வலைத் தளத்துக் குள் இழுப்பார்கள் முதலில். பிறகு அழகழகான இளம் பெண்களின் புகைப்படங்களை பார்ப்பீர்கள். கிளிக் செய்தால் உங்களின் ஏ டூ இசட் தகவல் களைக் கேட்கும் விண்டோ வரும். சபலப்புத்தி, மண்டையில் நின்று கொண்டிருக்க, ஆர்வமாக நிரப்பி அவசரமாக உள்நுழைவீர்கள். உங்களுக் குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் அங்கு.

பிறகுதான் நடக்கும் ஆசை விளையாட்டு. இளம் பெண் ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்வார். பிறகு நடப்பதை, இந்த வெப்சைட்டில் ரூ.12.55 லட்சத்தை இழந்துவிட்டு போலீசில் புகார் கொடுத்திருக்கும் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்வதைக் கேளுங்கள்:

‘மும்பையில தாதர் பக்கம் இருக்கேன். பேங்க்ல வேலை. நல்ல சம்பளம். திருமணமாகி குடும்பத்தோடு வசிக்கிறேன். கடந்த மாதம் 21-ம் தேதி, என் போன்ல ஒரு பாப் அப் வந்தது. ஆர்வமாக கிளிக் பண்ணித் தொலைச்சுட்டேன். அது டேட்டிங் வலைத்தளம். உள்ளே போயி, எல்லா தகவல் களையும் கொடுத்தேன். பிறகு தன்யான்னு ஒரு பெண்ணு பேசுச்சு. ஸ்டார் ஓட்டல்ல இளம் பெண் கூட டேட்டிங் இருக்கும். அதுக்கு ஒரு குறிப் பிட்ட தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்னு அன்பா சொல்லுச்சு. ஆசையா சரின்னு சொன்னேன். 

மறுநாள் ஒரு போன்கால் வந்தது. மூணு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை மூன்று இன்ஸ்டால்மென்டா அனுப்புங்கன்னு சொன்னாங்க. 23-ம் தேதி, சுபேந்து மண்டல்ங்கறவர் பெயருக்கு அவர் அக்கவுண்ட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினேன். பிறகு மினி அப்படின்னு ஒரு பொண்ணு பேசினாங்க. விரைவில் அந்த இளம் பெண்ணை உங்களோட டேட்டிங்குக்கு அனுப்புறோம்னு சொன்னாங்க. அந்தப் பொண்ணையும் பேச வைச்  சாங்க. பிறகு 26-ம் தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். 

அப்புறம், நாங்க உங்களோட எல்லா பணத்தையும் திருப்பிக் கொடுத்துடுவோம், இப்ப கடைசியா 5.24 லட்சம் அனுப்புங்கன்னு அடுத்த போன் வந்தது. அனுப்பினேன். அப்புறமும் அந்த டேட்டிங் நடக்கலை. அதனால, ’உங்க வெப்சைட்ல இருந்து என் அக்கவுண்டை டெலிட் பண்ணிடுங்க. என்னோட பணத்தை திருப்பிக் கொடுங்க’ன்னு மெயில் போட்டேன். அடுத்த சில நிமிடங்கள்ல ருஷின்னு ஒருத்தன் பேசினான். ’அக்கவுன்டை டெலிட் பண்ணமாட்டோம். அப்படி பண்ணணும்னா இன்னும் பணம் வேணும்’னு சொன்னான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். பிறகு தினமும் பல முறை போன் வந்துட்டே இருந்தது. மிரட்ட ஆரம்பிச்சாங்க. அதனால 2 லட்சம் ரூபாயை அனுப்பினேன். இதுவரை அவங்களுக்கு அனுப்பிய ரூபாயை கூட்டினா, 12.55 லட்சம் வந்தது. ஆஹா, நாம ஏமாந்துட்டோம்னு என் வீட்டுல மனைவிகிட்ட சொன்னேன். அவங்கதான் போலீஸ்ல புகார் பண்ணச் சொன்னாங்க. இப்ப தாதர் போலீஸ்ல புகார் பண்ணியிருக்கேன். அந்த மோசடி கும்பலை புடிச்சு என் பணத்தை மீட்கணும். சபல புத்தியால பன்னிரெண்டரை லட்சம் போச்சு’ என்கிறார் அந்த வங்கி ஊழியர்.

வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த மோசடிக் கும்பலைத் தேடி வருகிறது.