மோடியை திமிர் பிடித்தவர் என்று கூறி, அவர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து சலசலப்பை ஏற்படுத்திய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக தலைமை மௌனம் காத்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
அண்மையில் மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் பிரதமர் மோடி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ''பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறினேன். அதற்கு பதிலளித்த மோடி, 'அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?'' என்றார். அதற்கு நான் ''நீங்கள்தான் இந்தியாவின் பிரதமர் எனக் கூறினேன். இறுதியாக நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன். பின்னர், அவர் என்னிடம் அமித் ஷாவை சந்திக்குமாறு கூறினார். நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது, 'அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள்'' என கூறியதாக தெரிவித்தார். நாடு முழுவதும் சத்யபால் மாலிக்கின் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்த பேச்சுக்கு ஆளும் பாஜகவின் முக்கியபிரமுகர்கள் யாரும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் மீது பாஜகவினர் அதிருப்தியில் இருந்தபோதிலும், உத்தரபிரதேச மாநில தேர்தல் முடியும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றும், அவர் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தி பிரிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.
''அவரை தற்போது பதவி நீக்கம் செய்தால், அவர் பல செய்திகளை வெளியிடுவார்'' என்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். சத்யபால் மாலிக் மேகாலயா ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 9 மாதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது சமூக வலைதள பக்கங்களில் பாஜக குறித்து குற்றம்சாட்டி வரும் சத்யபால் மாலிக்குக்கு எந்தவித முக்கியத்துவம் கொடுக்க கூடாது, அவரது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றக்கூடாது என்பது தான் பாஜகவின் திட்டமாக உள்ளது. பாஜகவை பொறுத்தவரை, சத்யபால் மாலிக்குக்கு அவரது குற்றச்சாட்டு மூலம் தேவையற்ற முக்கியத்துவத்தை கொடுப்பது, தங்களுக்கு எதிராக முடியும் என கருதுகிறது. அது உத்தரபிரதேச தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் இதை தவிர்க்க முடிவெடுத்துள்ளது என்கின்றனர் பாஜகவினர் சிலர்.
லோக்தளத்தில் இருந்து காங்கிரஸ், ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, பின்னர் இறுதியாக பிஜேபி என மாலிக் தனது கட்சி விசுவாசத்தை பலமுறை மாற்றியுள்ளார். அவர் லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் உறுப்பினராகவும், கடந்த காலத்தில் கேபினட் அமைச்சராகவும் இருந்துள்ளார். சத்யபால் மாலிக்கை பொறுத்தவரை செப்டம்பர் 2017 மற்றும் ஆகஸ்ட் 2018 வரை பீகாரின் ஆளுநராக இருந்தார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், கோவா ஆளுநராக பணியாற்றியவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேகாலயாவின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.
ஜம்மு & காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது “அம்பானி” மற்றும் “ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடையவர்” ஆகியோருக்கு சொந்தமான கோப்புகளை அழிக்க ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார் சத்யபால் மாலிக். அதுமட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார். கோவாவில் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வெளியான மாலிக்கின் பகிரங்க அறிக்கைகள் அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர்கள் பேசும்போது, ''சத்யபால் மாலிக் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதன்முறையல்ல. கட்சித்தலைமை ஒவ்வொன்றையும் கவனித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பார்க்கும்போது,இது நடவடிக்கை எடுக்க சரியான நேரம் கிடையாது. எங்களுக்கு முக்கியமான தேர்தல் உள்ளது. அதில் கவனம் செலுத்துவதே தற்போதைய தலையாய கடமை. கட்சியினரிடம் இருந்து எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்காக, அவர் வேண்டுமென்றே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது போல் தெரிகிறது. அவரது வலையில் கட்சி விழப் போவதில்லை'' என்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய துணைத் தலைவராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் உறுதுணை : THE PRINT