ஓடிடி தளங்கள் சினிமாவின் ட்ரெண்டை மாற்றியுள்ள அதேநேரத்தில், இதுவரை கவனிக்கப்படாமல் அல்லது ஓரங்கட்டப்பட்டு வந்த நடிகர்களுக்கு புதிய புகழ் வெளிச்சம் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மனோஜ் பாஜ்பாய். பாலிவுட் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கி, மசாலாக்களைத் தாண்டி தீவிர சினிமாவின் முதன்மைக் கதாபாத்திரங்களாக வலம் வந்து, மற்ற மொழிகளில் வில்லனாக நடித்து வந்த மனோஜ் பாஜ்பாய் இப்போது இந்தியாவின் முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது, ஓடிடி எப்படி இதற்கு கைகொடுத்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
"எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் வேண்டாம். நல்ல கதாபாத்திரங்களை என்னிடம் கொடுங்கள், சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறு ஒருவரிடம் கொடுங்கள். நான் விரும்புவது ரசிகர்களைக் கவரும் நல்ல கதாபாத்திரங்கள் மட்டுமே. யாரும் என்னிடம் இருந்து நல்ல கதாபாத்திரங்களை எடுத்துவிடக் கூடாது என்பதுதான் எனது பேராசை..." - இப்படி சொல்லியது பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய். தனது பணிவு காரணமாக மனோஜ் இப்படி கூறினாலும், கொரோனா பேரிடரின் தாக்கத்தால் ஏற்பட்ட ஓடிடி ஆதிக்கமும் அவரை பாலிவுட்டின் புதிய சூப்பர் ஸ்டாராக மாற்றியிருக்கிறது.
கொரோனா பேரிடரில் தியேட்டர்கள் முடங்கிக்கிடக்க, 100 கோடி கிளப்புகளை சாதாரணமாக கடந்து கொண்டிருந்த பாலிவுட் பிரபலங்கள் தங்களின் படங்களை வெளியிட முடியாமல் இருந்து வருகின்றனர். ஆனால், மனோஜ் பாஜ்பாய் சத்தமில்லாமல் ஓடிடி மூலம் பாலிவுட்டில் புதிய உச்சங்களை எட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கு வித்திட்டது 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ். இதன் முதல் பாகம், 2019-ல் வெளியானது. இதற்கு முன்னதாக பல படங்களில் பணிபுரிந்தாலும், தேசிய விருதை வென்றிருந்தாலும், பாலிவுட்டை தாண்டி மனோஜ் பாஜ்பாய் அதிகமாக தேடவைத்தது என்னோவோ 'தி ஃபேமிலி மேன்' தொடர் மட்டுமே.
இந்தத் தொடரில் கிடைத்த புகழ் வெளிச்சம், அவரை வேறோர் இடத்துக்கு கொண்டுச் சென்றுள்ளது. இந்தத் தொடரின் இரண்டு பாகங்களும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பிளாக்பஸ்டர் வெப் சீரிஸாக மாறியிருக்கிறது. இந்த வெப் சீரிஸ் அடைந்த வெற்றி, உண்மையில் ஒரு பாலிவுட் பிளாக்பஸ்டருக்கு குறைவானதல்ல. இந்த இரண்டு சீசன்களின் வெற்றிக்குப் பிறகு, பாலிவுட்டில் ஒரு புதிய இடத்தை அடைந்திருக்கிறார் மனோஜ். மேலும், இந்தத் தொடரின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் ஓடிடி வரலாறு மாறியிருக்கிறது. பல நடிகர்களும் தற்போது ஓடிடியை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர்.
`தி ஃபேமிலி மேன்' தொடருக்கு பின் மனோஜின் நடிப்பில் வெளியான ஓடிடி ஆந்தாலஜி வெப் சீரிஸ் 'ரே' (Ray). இந்தியாவின் முதல் ஆஸ்கர் நாயகன் 'சத்யஜித் ரே'வின் சிறுகதைகளை தற்கால வாழ்வியல் பொருத்தங்களோடு வடிவமைத்து உருவான தொடரே 'ரே'. நான்கு எபிஸோடுகளைக் கொண்ட இந்த ஆந்தாலஜியில் 'ஹங்காமா ஹாய் க்யோன் பார்பா' (Hungama Hai Kyon Barpa) என்ற எபிஸோடில் மனோஜ் நடித்திருந்தார். ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்ளும் வெற்றியாளர்கள் தாங்கள் எப்போதோ செய்த சிறு தவறு குறித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அழகான கதையாக இது இருந்தது. மனோஜ் பாஜ்பாய், நடிப்பில் தனி கவனம் பெற்றது இந்த எபிஸோடு.
அடுத்து 'டயல் 100' திரைப்படம். தியேட்டர் வெளியீடு என சொல்லியே உருவானது இந்த திரைப்படம். ஆனால், கொரோனா காரணமாக நேரடி ஓடிடி வெளியீடு செய்ய வேண்டிய காலச் சூழல். தைரியமாக இறங்கிய மனோஜ் "ஓடிடியில் வெளியிடுவதில் எந்த ஏமாற்றமும் இல்லை. ஓடிடியில் எனது உழைப்பை பார்க்க புதிய பார்வையாளர்கள் கிடைத்துள்ளார்கள் என்று உணர்கிறேன்" என்று கூறி படத்தின் ஓடிடி வெளியீட்டை ஆதரித்தார். அவரின் கணிப்புக்கு ஏற்ப நல்ல வரவேற்பு இருந்தது. இப்படி டிஜிட்டல் தளங்களில் வளர்ச்சி, மனோஜ் பாஜ்பாய்க்கும் வளர்ச்சியை கொடுத்தது.
அவருக்கு மட்டுமல்ல, பாலிவுட்டின் மற்ற நடிகர்கள், பங்கஜ் திரிபாதி, கிரிஷ்ண குமார் மேனன், ஜெய்தீப் அஹ்லாவத் போன்றவர்களுக்கும் ஓடிடி தளங்கள் ரசிகர்கள் மத்தியில் புதிய உயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் பாஜ்பாய் உட்பட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் இவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பாலிவுட்டில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பிடிக்க பல காலமாக போராடி வருபவர்கள். ஆனால் கான், பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்களை மையமாக கொண்டு இயங்கும் பாலிவுட் அமைப்பில் இவர்களால் தடம் பதிக்க முடியவில்லை. இந்த சூப்பர் ஸ்டார்களை மீறி ரசிகர்களை கவர முடியவில்லை.
ஆனால், டிஜிட்டல் தளங்கள் இந்தத் தடைகளை தகர்த்தெறிய அவர்களுக்கு உதவியது. இதனால் இப்போது இவர்களின் கவனமும் ஓடிடி பக்கமே இருக்கிறது. ஓடிடி தனக்கு எப்படி கைகொடுத்தது என பேசியிருக்கும் மனோஜ், ``மொழி தடைகளை டிஜிட்டல் தளங்கள் உடைத்துள்ளதால் அதிகமான பார்வையாளர்கள் எனது படங்களை பார்க்கிறார்கள் என நம்புகிறேன். இதனை எப்படி கூறுகிறேன் என்றால், ஒருமுறை உத்தராகண்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, மக்கள் தங்கள் மொபைல்களில் எனது வெப் சீரிஸைப் பார்ப்பதில் பிஸியாக இருந்தனர். இந்த வளர்ச்சிதான் என்னைப் போன்றவர்களுக்கு தேவை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓடிடி தளங்களால் ஏற்பட போகும் சாத்தியங்களை கற்பனை செய்து பாருங்கள்" என்று மனம் திறந்துள்ளார்.
1994 முதல் பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் மனோஜ் பாஜ்பாய் ஆரம்ப காலத்தில் ராம் கோபால் வர்மாவின் ஆஸ்தான நடிகராக இருந்தவர். அவருக்கு 2002 - 2009 வரை மோசமான காலகட்டம். இந்த வருடங்களில் அவரின் படங்கள் நிறைய தோல்வியைத் தழுவின. ஆனால், இந்தத் தோல்விகளால் துவண்டுவிடவில்லை. "அந்த காலகட்டத்தில் தோல்வியை கண்டு நான் சோர்வடைந்துவிட்டேன் என பலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியில்லை. அந்தத் தருணத்தில்தான் நிறைய உழைத்தேன். தோல்வியை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் உழைக்கத் தொடங்கினேன்" எனக் கூறும் மனோஜ், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேடத் தொடங்கினார். தான் ரசித்துப் பார்த்த இயக்குநர்களை அணுகி வாய்ப்பு கேட்டார்.
இதன் பயனாக, பிரகாஷ் ஜாவின் 'ராஜ்நீதி' (2010), அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ் ஆஃப் வைஸாப்பூர்' (2012), நீரஜ் பாண்டேவின் 'ஸ்பெஷல் 26' (2013) படங்கள் மனோஜின் புதிய பரிணாமத்தை ரசிகர்களுக்கு காட்டியது. தனது நடிப்பாற்றலின் உச்சத்தைக் காட்ட 'அலிகார்' உதவியது.
இப்போதும் அவரே சில படிகளை முன்னெடுத்துள்ளார். சுயாதீன திரைப்பட கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது, ஓடிடியில் கவனம் செலுத்துவது என முனைப்பு காட்டி வருகிறார். மொழி தடைகளை உடைத்து, மற்ற மொழி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார். கன்னடத் திரைப்படமான `திதி' படத்தின் இயக்குநர் ராம் ரெட்டியுடன் ஒரு படம், `தி ஃபேமிலி மேன்' இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உடன் மீண்டும் ஒரு வெப் சீரிஸ் என கமிட் ஆகிக் கொண்டிருக்கிறார்.
``நடிகர்கள் எந்தவொரு தளத்துக்கும் சார்பாக இருக்கக் கூடாது. அவர்கள் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்" என்று ஒருமுறை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார் மனோஜ். அவரின் இந்த கொள்கையே, ஓடிடியே தேடி தைரியமாக நகரவைத்தது. அதுவே இப்போது அவரை பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் மாற்றியிருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.
- மலையரசு