சிறப்புக் களம்

அசாமில் பாஜகவை அசைக்க புது ரூட்... அகில் கோகாய் உடன் கைகோக்கும் மம்தா பானர்ஜி!

அசாமில் பாஜகவை அசைக்க புது ரூட்... அகில் கோகாய் உடன் கைகோக்கும் மம்தா பானர்ஜி!

நிவேதா ஜெகராஜா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றியை தனதாக்கி இருக்கும் மம்தா பானர்ஜி, இந்த வெற்றியை அடுத்து தனது கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்த முயன்று வருகிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்திருப்பது மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுரா. இந்த இரு மாநிலங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கான வலுவான தளத்தை உருவாக்க கடுமையாக உழைக்க தொடங்கியிருக்கும் மம்தா, அம்மாநில விவகாரங்களில் தற்போது கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

திரிபுராவில் வரும் 2023-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஏற்கெனவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்திவரும் நிலையில், தற்போது அசாம் மாநிலத்திலும் கவனம் செலுத்தும் பொருட்டு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார் மம்தா. அதன்படி, அசாம் அரசியலில் தற்போது கவனம் பெற்றுவரும் அகில் கோகாயை திரிணாமூல் கட்சி அசாம் மாநில பிரிவுக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுத்திருக்கிறது. 2024-ல் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு தற்போது ஆளும் பாஜகவை வலுவாக எதிர்க்க அகில் கோகாய் சரியாக இருப்பார் என்று மம்தா கணக்கு போடுகிறார்.

இதையடுத்தே சமீபத்தில் அகிலை சந்தித்து பேசியிருக்கிறார் மம்தா. இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில் கோகாய், ``நான் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, மம்தா பானர்ஜி என்னை சந்திக்க அழைப்பு விடுத்தார். மம்தா பானர்ஜியின் வேண்டுகோளின்பேரில், எனது கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கொல்கத்தாவுக்கு இரண்டுமுறை சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர்கள் கட்சியில் சேர்ந்து திரிணாமூல் அசாம் மாநில தலைமையாக செயல்பட என்னை மம்தா கேட்டுக்கொண்டார். நான் எனதுக் கட்சியை திரிணாமூலில் இணைக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். நான் இன்னும் அவரிடம் எந்தப் பதிலும் சொல்லவில்லை. என்றாலும் ஒரு பிராந்திய கட்சி (ரைஜோர் தளம்) என்ற ரீதியில், எங்களுடன் வர முயற்சிக்கும் பிற பிராந்திய கட்சிகளுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

யார் இந்த அகில் கோகாய்? 

நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒற்றை மனிதராக பாஜகவை கலங்கடித்தவர் இந்த அகில் கோகாய். இவர் ஒரு செயல்பாட்டாளர். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக பல வருடங்களாக போராடி வருகிறார். அசாம் மாநிலத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து போராடினார் அகில். இதற்கு அவருக்கு கிடைத்த பரிசுதான், சிறை. மாநிலத்தில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி 2019 டிசம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அகில் கோகோய்.

இதையடுத்து அரசியலில் ஈடுபடும் வகையில் ரைஜோர் தளம் என்ற கட்சியை துவங்கினார். கடந்த ஆண்டு அக்டோபரில் உழவர் அமைப்பான கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்) மற்றும் ஒரு சில சி.ஏ.ஏ எதிர்ப்பு அமைப்புகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது இந்த புதிய கட்சி. அதன்படி நடந்து முடிந்த தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டது. இதில் அசாமின் வரலாற்று சிறப்புமிக்க தொகுதியான சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோன்வாரியை எதிர்த்து போட்டியிட்டார் அகில் கோகாய். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டார்.

சிஏஏ எதிர்ப்பு (குடியுரிமை திருத்தச் சட்டம்) ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தேசத் துரோக குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் மீது என்ஐஏ வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களால் பிரசாரம் செய்ய முடியாது. இந்த நிலையில் இருந்த அகில், தொகுதி மக்களுக்கு சிறையில் இருந்தே மடல் எழுதி வாக்குகள் சேகரித்தார்.

இதில், அசாம் சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அவரது 84 வயதான தாய் பிரியாடா கோகாய் மகனுக்காக வீதி வீதியாக பிரசாரம் செய்தார். அவருடன் அகில் மனைவி கீதாஸ்ரீ தமுலி மற்றும் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் பிரசாரம் செய்தனர்.

இடதுசாரி வாக்குகளின் ஒருங்கிணைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட சிஏஏ எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் அவரது தாயார் பிரியோடா கோகாயின் உணர்ச்சிபூர்வமான பிரசாரம் ஆகியவை காரணமாக சிறையில் இருந்தபடியே பாஜகவை தோற்கடித்து வெற்றியை தன் வசமாக்கினார் அகில். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோன்வாரியை 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த தேர்தலில் அகில் பெற்ற வாக்குகள் மட்டும் 57,219 ஆகும். தேர்தல் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார் அகில். இந்த நிலையில்தான் அசாமில் பாஜகவை எதிர்க்க இவரே சரியான தேர்வு என மம்தா அவரை தன் கட்சியில் இணைக்க முயன்று வருகின்றார்.