சிறப்புக் களம்

மலாலா மணந்த அசர் மாலிக் பின்புலம்... பாக். நெட்டிசன்களின் விமர்சனம் ஏன்?!

மலாலா மணந்த அசர் மாலிக் பின்புலம்... பாக். நெட்டிசன்களின் விமர்சனம் ஏன்?!

PT WEB

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், சமூகப் போராளியுமான மலாலாவுக்கு திருமணம் முடிந்துள்ளது. அவரின் துணையாக வந்துள்ள அசர் மாலிக் யார் என்பது குறித்து பார்ப்போம்.

பெண்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த 24 வயதாகும் மலாலா யூசஃப்சாய். பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த மலாலாவை `பெண்களுக்கு கல்வி வேண்டும்' என்று போராடியதற்காக தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, பெண் கல்விக்காக போராடிய அவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 17 வயது. மிகச் சிறிய வயதில் நோபல் பரிசை வென்றவர், அதன்பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

அதேநேரம் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர், இங்கிலாந்தின் பிர்மிங்காமில் வசித்துகொண்டே பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்து வருகிறார். இந்த நிலையில், மலாலாவுக்குத் திருமணம் நடந்திருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மலாலா. தனது ட்விட்டர் பதிவில், அசர் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பிர்மிங்காமில் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். நோபல் பரிசு மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட மலாலாவைத் திருமணம் செய்துள்ள அசர் குறித்து அறிந்துகொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அசர் மாலிக் யார்?

அடிப்படையில் ஒரு தொழிலதிபரான அசர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபியில் பொது மேலாளராக இருக்கிறார். சில ஆண்டுகள் முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு விளம்பரங்களை ஒப்பந்தம் செய்து தரும் ஏஜென்ஸியை நடத்தி வந்திருக்கிறார். இந்தியாவின் ஐ.பி.எல் போட்டிகள் போல பாகிஸ்தானிலும் சூப்பர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முல்தான் அணியை நிர்வகித்த அனுபவம் அசர் மாலிக்கிற்கு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வருகிறார் அசர் மாலிக். சில ஆண்டுகளாகவே அசர் மாலிக்கும் மலாலாவும் நண்பர்களாக பழகி வந்தனர்.

சில மாதங்கள் முன்புகூட ட்விட்டரில் இருவரும் ஒன்றாக புகைப்படம் பதிவிட்டு இருந்தனர். இந்தநிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இரு குடும்பங்களும் முறைப்படி ஏற்பாடு செய்த இந்த திருமணம் இஸ்லாமிய முறைப்படி பர்மிங்காம் நகரில் உள்ள மலாலா இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, மலாலா திருமணம் குறித்து பாகிஸ்தான் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். விமர்சனத்துக்கு, சில மாதங்கள் பிரிட்டிஷ் இதழான 'வோக்' இதழில் கொடுத்த பேட்டி காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வோக் இதழுக்கு அளித்த பேட்டியில் ``மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் இருக்க விரும்பினால், நீங்கள் ஏன் திருமண ஆவணங்களில் (இஸ்லாமிய முறை) கையெழுத்திட வேண்டும். இரு மனங்கள் விருப்பப்பட்டால் ஒருவருக்கொருவர் இணையாக வாழ்ந்துகொள்ளலாமே" என்று பேசியிருந்தார். மலாலாவின் இந்தக் கருத்தை குறிப்பிட்டு நெட்டிசன்கள் தற்போது அவரை விமர்சித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

- மலையரசு