மதுரை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வருகின்ற ஜாரி விராலிப்பட்டியில் மீனாட்சிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி நிலத்தின் மீதான கட்டுப்பாடு யாருக்கு உரியது? என்பது குறித்து பல ஆண்டுகளாக வழக்கு நடந்து, இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையினால் 03/ 04/ 23 அன்று வனத்துறைக்குக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை தொடர்ந்து, வனத்துறையினர் எங்களது இயல்பான வாழ்க்கையில் தலையிடுகின்றனர் என அப்பகுதி வாழ் மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். காப்புக் காடுகளுக்கு உரிய சட்டத்தைப் பயன்படுத்தி மீனாட்சிபுரத்தில் நுழைவதையும் விவசாயம் செய்வதையும் தடைசெய்து அப்பகுதி வாழ் மக்களை தொடர்ச்சியாக வனத்துறையினர் துன்புறுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மீனாட்சிபுரம் கிராமம் பழங்குடிகள் மற்றும் பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் வன உரிமைச் சட்டம் 2006,(Scheduled Tribes and the Other Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006) கீழ் வரும் பகுதி. எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் மக்களை விரட்டுவதென்பது சட்டவிரோதமானதாகும். ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து அவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் கேள்வியை எழுப்பி வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு கிராமத்தின் வாழ்வுரிமையைக் காக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்
இக்கிராமத்தில் ஜாரி விராலிப்பட்டியிலிருந்து சாஸ்த்தா கோவில் செல்லும் பாதை நெடுக்கு என்று வளமான விவசாய நிலங்கள் பல உள்ளன. ஏறக்குறைய 250 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.ஆனால், இப்பகுதிக்குச் செல்வதற்கு சாலை வசதி என்பது கிடையாது. ஜாரி விராலிப்பட்டி முதல் சாஸ்த்தா கோவில் வரை சாலை அமைத்துக்கொடுத்து மக்களின் வேலை வாய்ப்பையும், விவசாய உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்பது அம்மக்களின் நீண்டநாள் கனவாக உள்ளது. எனவே அதை நனவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்துள்ளனர்.
போதுமான வசதி கூட இல்லாத காரணத்தால் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பை நடத்தி முடித்த பின்னர், அந்தப் பெண்ணை மலையிலிருந்து கீழே கூட்டி கொண்டு போய்விடுவர். மலையின் கீழ்புறம் சென்றுதான் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர்.அதன் பின்னர்தான் கிராமத்திற்கு வர முடியும்.
கிராமத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லை என்பதே இந்த பழக்கத்திற்குக் காரணமாம். அவசரத்திற்கு விரைந்து செல்வதற்கு நல்ல சாலை வசதிகூட கிடையாது. இங்கு கடந்த 15 வருடமாக எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. பிரசவத்திற்கு உறவினர்கள் வீடுகளில் ஏதாவது ஒன்றில் தங்கி பிரசவித்து, அதன் பின்னர் தங்களது சொந்த ஊரை அடைவர். இல்லாவிட்டால் 2 மாதத்திற்கு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கிறார்கள். வாடகைக்கு வீடு எடுக்க வசதி இல்லை என்றால் பாலத்தின் அடியில் தங்கி பிரசவம் முடிந்த பிறகுதான் மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பி வருகிறார்கள்.
இது மட்டுமல்லாது மீனாட்சிபுரத்தில் உள்ள 130 வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சக்திமூலம் மின்சாரம் வழங்குவதற்காக M/s. Servotech என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு வேலை தொடங்கப்படாத காரணத்தினால் அதன் ஒப்பந்தப்புள்ளியும் ரத்து செய்யப்பட்டுள்ளது . இதைத் தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தற்பொழுது கிராமம் சென்றதால் மின்சாரம் வழங்க இயலாது என மின்சார துறையும் கையை விரித்ததுள்ளது.
மேலும் வனப்பகுதிக்குள் சாலை அமைக்க வனத்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலை துறையும் சாலை வசதியை ஏற்படுத்தி தராமல் கைவிரித்தது.
இதோடுகூட மீனாட்சிபுரம் பகுதியில் இருந்த துவக்க பள்ளியும் தற்பொழுது மூடப்பட்டு நடப்பாண்டு மாணவர்கள் கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக வனப்பகுதியை வாழ்விடமாக கொண்டு வசித்து வந்த மீனாட்சிபுரம் வாழ் மக்கள் தற்பொழுது விவசாயம் செய்ய முடியாமலும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த ஒரு சேவையை பெற முடியாமலும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி, வாழ்வாதாரத்தை தொலைத்து கொண்டிருக்கின்றனர். மேலும் வனத்துறையினர் தங்களை மலையில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி மன வேதனைக்கு ஆளாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ,
“நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம். சுதந்திரம் அடைந்த பிறகு கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை வனமாக அறிவிக்க முயற்சி நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் இந்த இடம் மதிப்பு மிக்க நிலமாக இருக்கிறது எனக் கூறி சுமார் சுமார் 265 விவசாயிகள் விவசாயம் செய்து வரும் மொத்தம் 796 ஏக்கர் நிலத்தை, அங்கே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை மேல்முறையீடு செய்தது. அப்போது வனத்துறைக்கு சாதகமாக தீர்ப்பாக அமைந்தது. தற்பொழுது உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை மாலையிலிருந்து கீழே இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். மதுரை மாவட்டத்திலே பசுமை கிராமம் என பெயர் பெற்ற இந்த கிராமத்தில் இருந்து அதன் பூர்வ குடிகளை வெளியேற்ற வனத்துறை முயற்சிக்கிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் வனப்பகுதியில் குடியிருந்து வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. வனத்தில் குடியிருந்தால் மட்டும் போதாது வாழ்வாதாரத்திற்கு விவசாயம் செய்ய வேண்டும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு நாங்கள் விவசாயம் செய்து வரும் இடத்தை எங்களுக்கு குத்தகைக்கோ அல்லது பட்டா வழங்கியோ எங்களுக்குரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்.”
“எங்கள் கிராமத்தில் துவக்க பள்ளியானது. இயங்கிக் வந்தது. தற்பொழுது இந்த பள்ளிக்கு வரக்கூடிய பாதை வனத்துறைக்கு சொந்தமானது என்பதனால் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என முடக்கி விட்டார்கள்.
இதனையும் மீறி இந்த சாலையை பயன்படுத்தினால் ஆசிரியர் மீது வழக்கு பதியப்படும் என எச்சரித்தனர். இதனால் 2023 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. மாணவர்கள் படிக்க வேண்டுமென்றால் மலையில் இருந்து கீழே இறங்கி விடுதியில் தான் படிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.”
“எங்கள் பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டு தான் வளர்த்தோம் தற்பொழுதும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. அடிப்படை வசதியான மின்சாரம் கூட இல்லாததால் இரவு நேரங்களில் தீபம் மட்டுமே ஏற்றி வாழ்கிறோம். அதிலும் தற்பொழுது மண்ணெண்ணெய் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. பிரசவத்திற்கு கூட உரிய வசதி எங்களுக்கு இல்லை.
இதே பகுதியில் உள்ள பெரியவர்களை அழைத்து வந்து தான் பிரசவம் பார்க்கிறோம். தற்பொழுது பிரசவம் பார்த்து வந்த பெரியவர்களுக்கும் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அதிலும் பிரச்சனை இருக்கிறது. ஐந்தாவது ஆறாவது வகுப்புவரை மட்டுமே தான் எங்கள் பிள்ளைகள் படித்துள்ளனர். அதற்கு மேல் படிக்கவில்லை. படிக்க வேண்டும் என மலையில் இருந்து கீழே இறங்கி விடுதியில் சேர்த்தாலும் பிள்ளைகள் படிக்க மறுக்கிறார்கள். சாலை வசதி, மின்சார வசதி போன்றவற்றை எங்களது பக்கத்து ஊருக்கு கொடுக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். வனத்துறையினர் எங்களை மலையில் இருந்து கீழே இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் நாங்கள் எங்கே தான் செல்வோம்”
“ஊராட்சி சார்பாக மேற்கண்ட இந்த கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏதேனும் அடிப்படை வசதி செய்து கொடுக்க முன் வந்தாலும் வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். வனத்துறையை மீறி எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்க முடியவில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாகனம் ஏற்பாடு செய்து இங்கு வசிப்பவர்களிடம் நேரில் வந்து ஓட்டுகளை மட்டும் வாங்குகிறார்கள். அதன் பிறகு எந்த வசதியும் செய்து கொடுக்க மாட்டார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தேவைப்படுகிறது. இடிந்து விழக்கூடிய பள்ளியை சீரமைக்கவேண்டும் என முயற்சித்தால் வனத்துறை அதற்கு முட்டுக்கட்டை போடுவதால் பள்ளியை இயக்க முடியவில்லை.”
“சாலை வசதி இல்லாத காரணத்தினால் பிரசவ காலங்களில் மிகுந்த சிரமப்பட வேண்டியதாய் உள்ளது. மலை கிராமத்தின் கீழே சமவெளியில் சொந்த வீடு இருப்பவர்கள் ஏழாவது மாதம் எட்டாவது மாதத்திலேயே மலையில் இருந்து கர்ப்பிணிகள் கீழே இறங்கி தங்கி விடுகிறார்கள். பிரசவம் முடிந்த பிறகு தான் மீண்டும் மலை மீது ஏறி வருகிறார்கள். பலரும் இங்கு பாட்டி வைத்தியம் தான் பார்க்கிறார்கள். பிரசவம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கிறார்கள்.
எங்கள் மலைப்பகுதியில் குழந்தை பிறந்து குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். வனத்துறை சார்பாக எங்கள் பகுதியில் நாங்கள் இருக்கக் கூடாது என எங்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறார்கள். ஒரு சிறு குச்சி கூட வெட்டக்கூடாது என மிரட்டுகிறார்கள். இப்பகுதியில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டால் நிச்சயம் எங்களால் எங்கும் சென்றும் பிழைக்க முடியாது. பிரசவத்திற்கு கீழே சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்க வசதி இல்லை. அப்படி இல்லாதபட்சத்தில் பாலத்தின் அடியில் தங்கி தான் பிரசவம் பார்க்க வேண்டும்.”
”கீழிருந்து மலைப்பகுதிக்கு மேலே ரேஷன் பொருட்களை காசு கொடுத்து வாங்கி வருகிறோம். இலவசமாக வாங்க வேண்டிய ரேஷன் அரிசியை 150 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மற்ற இதர பொருட்களை 300 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். தேர்தல் சமயத்தில் மின்சாரம், சாலை ,மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து ஓட்டை மட்டும் வாங்கி செல்கிறார்கள். அதன் பிறகு யாரும் இங்கு வந்து பார்ப்பதில்லை”
இப்படி தங்களது மனக்கவலையை மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கேட்கவே பதிலும் கூற மறுத்துவிட்டார்.