சிறப்புக் களம்

தனிமை உணர்வு ஆபத்தானதா? தனிமை உணர்வை எதிர்கொள்வது எப்படி? - மனநல மருத்துவரின் ஆலோசனைகள்!

JustinDurai

தனிமை உணர்வு ஆபத்தானதா? தனிமை உணர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஆலோசனை தருகிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.

''தனிமை என்பது அழகானது, அது சில நேரங்களில் தேவையானதும் கூட’ என்று சில பேர் சொல்ல நாம் கேட்டிருப்போம். அது தனிமை அல்ல, அமைதி. தனிமை என்பது வேறு, அமைதி என்பது வேறு.

அமைதி என்பது புறவுலக தொந்தரவுகளில் இருந்து நாம் சற்று நேரம் விலகியிருப்பது. ஒரு புத்துணர்ச்சிக்காக, நம்மை ஆசுவாசப்படுத்தி கொள்ள இந்த அமைதி சில நேரங்களில் தேவையானது தான். ஆனால் தனிமை என்பது புறக்கணிக்கப்பட்ட நிலை, அதனால் ஏற்படும் ஒரு உணர்ச்சி. அது ஆபத்தானது. அது நமது சுய மதிப்பீட்டை குறைத்துவிடும்.

புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் உணர்ச்சியும், உடலின் வலிகளும் நமது மூளையின் ஒரே பகுதியில் இருந்து தோன்றுவதாக நரம்பியல் நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதனால் தான் நாம் தனிமையை அத்தனை வலியாய் உணர்கிறோம். நமக்கு யாருமில்லை என்ற எண்ணம் அத்தனை வலி நிறைந்ததாய் நமக்குள் இறங்குகிறது.

தனிமை என்பது ஒரு உணர்ச்சி. ஒரு கோபத்தை போல, ஒரு மகிழ்ச்சியை போல, ஒரு துக்கத்தை போல அதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவே. நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறும்போது, நம்மை நோக்கி ஆறுதலாய் ஒரு கரம் நீளும் போது, நம்மை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ளும்போது, நமக்கான கவனத்தை ஒருவர் கொடுக்கும்போது நீரில் கரையும் பனிக்கட்டி போல தனிமை கரைந்து விடும். ஆனால் அதுவரை நாம் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.

தனிமையில் இருந்து நாம் மீண்டு வர நமக்கு யாராவது ஒருவர் தேவைப்படுவதை போல நாமும் நம்மை சார்ந்தவர்களுக்கு தேவைப்படுவோம், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை சுற்றியுள்ளவர்கள் தனிமையாய் உணரும்போது அதில் இருந்து அவர்களை மீட்டு கொண்டு வருவது அத்தனை முக்கியமானது.

தனிமை என்பது தற்காலிகமானது, தனிமையை வெல்ல வேண்டும் என்றால் அந்த தனிமையான மனநிலையில் இருந்து நாம் மீள்வது தான் முதல் படி. மனிதர்களோடு எப்போதும் ஒரு பிணைப்பை வைத்திருப்பதுவே அந்த மனநிலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழி.