தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க பயணங்களை மேற்கொள்ள இ-பாஸ் பெறுவது கட்டாயம் ஆகும்.
கொரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 4வது முறையாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தமிழக அரசு உள்நாட்டு விமானங்களில் தமிழகம் வருபவர்கள் அரசு இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளது. இந்த இ-பாஸ் பெறுவது எப்படி என்பதை தற்போது காணலாம். அரசு இ-பாஸ் பெறுவதற்கு முதலில் https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம் கிடைக்கு ஓடிபி (OTP) எண்ணை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும். அதன்பின்னர் தனி நபர்/குழு, தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்நுழைதல், தமிழ்நாட்டிற்குள் விமான பயணம் இதில் எந்த சேவை தேவையோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானங்களில் வருபவர்கள், ரயில், சர்வதேச விமானம் ஆகிய சேவைகளை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் உள்நுழைதல் சேவை தேர்வு கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அங்கே கேட்கப்பட்டிருக்கும் பெயர், பாலினம், அடையாளச் சான்று உள்ளிட்ட தகவல்களை கொடுத்து முதல்கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு செல்ல வேண்டும்.
அதன்பின், எங்கிருந்து வருகிறோம், தமிழ்நாட்டில் எங்கே செல்கிறோம் ஆகிய விவரங்களையும் பதிவிட்டு இரண்டாம் கட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக குறிப்பு எண் உருவாக்கப்படும், உங்களின் கோரிக்கை ஏற்புடையதாக இருந்தால் இ-பாஸ் வழங்கப்படும். தனிநபரை பொறுத்தவரை திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.