thunder thunder
சிறப்புக் களம்

இந்தியாவில் ஆண்டுதோறும் 2,000+ உயிர்களைப் பறிக்கும் மின்னல் - ஒரு தரவுப் பார்வை

இந்தியாவில் ஆண்டுதோறும் 2,000+ உயிர்களைப் பறிக்கும் மின்னல் - ஒரு தரவுப் பார்வை

Madhalai Aron

வடஇந்தியாவான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டையில், மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கி 7 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 70 பேர் வரை மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கின்றனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீட்டையும் அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. மேலும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி சராசரியாக 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 2017-ல் 2,885 பேரும், 2018-ல் 2,357 பேரும், 2019-ல் 2,876 பேரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்தியாவில் 2001-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மின்னல் தாக்கி 42,500 பேர் உயிரிழந்தனர்.

India's second annual Lightning Report தெரிவித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 31, 2021 தேதி வரை இந்தியாவில் இடி மின்னல் தாக்கியதால் 1,619 பேர் உயிரிழந்தனர். இதில் பீகார் மாநிலத்தில் 401 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 238 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 228 பேரும், ஒடிசாவில் 156 பேரும், ஜார்க்கண்ட்டில் 132 பேரும் பலியாகினர்.

2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 90,62,546 மின்னல் தாக்குதலும், 2,876 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தில், 3,67,699 மின்னல் தாக்குதலும், 57 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2020-2021-ம் ஆண்டை பொருத்தவரை இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்காண்ட் மாநிலத்தில் மின்னல் அதிக முறை தாக்கியிருக்கிறது.

2019-ல் ஒடிசாவில் 20,43,238 முறையும், மத்தியப் பிரதேசத்தில் 17,10,719 முறையும், சத்தீஸ்கரில் 15,33,495 முறையும், மேற்கு வங்கத்தில் 15,21,786 முறையும், ஜார்க்கண்ட்டில் 14,91,096 முறையும் மின்னல் தாக்கியுள்ளது.

மின்னலின் வீரியமான, இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது தீவிரமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது காலநிலை மாற்றம் தான் என்றும் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி, இந்திய நிலப்பரப்புக்குள் ஒரே நாளில் மட்டும் 41,000 மின்னல்கள் தாக்கியுள்ளது என பூனேவில் அமைந்திருக்கும் இந்திய வானியல் நிறுவன ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்புக்களில் இறங்கும் மின்னல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இதில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதுபோன்ற மின்னல் தாக்குதல்களில் விவசாயிகளே அதிகம் உயிரிழக்கின்றனர். இதற்குக் காரணம் பருவ மழைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தெரிந்துக் கொள்ளாததே. இதற்கான விழிப்புணர்வுகளையும், எச்சரிக்கைகளையும் சரியான முறையில் வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தற்போதைய சிக்கல்களை உணர்ந்து அதற்கான தகுந்த நடவடிக்கைகளை உடனே கொண்டுவந்தால் மட்டுமே இதுபோன்ற பேராபத்திலிருந்து உலகையும், நம்மையும் பாதுகாக்க வேண்டும்.