சிறப்புக் களம்

தடுப்பூசி சமநிலையின்மை: ஏழை நாடுகளுக்காக குரல் கொடுக்கும் உலக சுகாதார நிறுவனம்

தடுப்பூசி சமநிலையின்மை: ஏழை நாடுகளுக்காக குரல் கொடுக்கும் உலக சுகாதார நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதேனாம், நேற்று நடந்த உலகளாவிய கலந்துரையாடலின்போது, “இந்தியாவை சேர்ந்த டெல்டா வகை உட்பட, உலகில் பலவகை கொரோனா திரிபுகள் பரவிவருகின்றன. இந்த நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வேகமாக தளர்வுகள் விதிப்பது, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசும்போது, “உலகில் இரு வழி பெருந்தொற்று நோய் கையாளுதலை எங்களால் உணர முடிகிறது. ஒரு வழியில் உள்ள நாடுகள், தங்கள் நாட்டில் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்தி, அதன்மூலம் தளர்வுகளை அறிவிக்கின்றன; இன்னொரு வழியிலுள்ள நாடுகளோ, தங்களின் மிக மோசமான காலகட்டத்தை சந்தித்துக்கொண்டு, உடன் தடுப்பூசி விநியோகத்தையும் சாத்தியப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.

கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி விநியோகத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆகிவிட்ட நிலையில் அது எந்தளவுக்கு உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது என நாம் பார்க்க வேண்டியுள்ளது. அப்படி பார்த்தால், இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் பணக்கார நாடுகளுக்கு 44 % தடுப்பூசிகளை பெற்றுவிட்டன. ஆனால் ஏழை நாடுகள், 0.4 % மட்டுமே பெற்றுள்ளன. பல மாதங்களாக இதே நிலையிலேயே இருக்கிறது. இது வேதனை தரும் தரவுகளாக இருக்கிறது.

தடுப்பூசி விநியோகம் அதிகமிருக்கும் நாடுகளில், இறப்பு விகிதம் மிகக்குறைவாக இருப்பதை எங்களால் உணரமுடிகிறது. குறிப்பாக அங்கெல்லாம் வயதானவர்கள் இறப்பு மிகவும் குறைந்தே இருக்கிறது.” எனக்கூறியுள்ளார்.

தடுப்பூசி மீதான இந்த சமநிலையின்மை தரவுகளை முன்னிறுத்தி, உலக சுகாதார மாநாட்டின்போது டெட்ராஸ் பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது. அப்போது அவர், “செப்டம்பர் மாதத்துக்குள்  உலகளவில் 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசி போடும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள், 30 சதவிகித பேருக்காவது தடுப்பூசி போட வேண்டும் என்ற முன்னெடுப்பை நாம் தொடங்க வேண்டும். இதில் 10 சதவிகிதம் என்ற எண்ணிக்கையை அடைய, 250 மில்லியன் கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும்.

ஜி 7 நாடுகள் என அழைக்கப்படும் கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, யு.கே. ஆகிய நாடுகள் நினைத்தால், இந்த இலக்கை நம்மால் எளிதில் அடைய முடியும். இவர்கள் அனைவரும், தங்களிடம் உள்ள தடுப்பூசிகளை, ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பிற நாடுகளுக்கு பகிர வேண்டும்.

எம்-ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் வழியாக தடுப்பூசிகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் உங்களுடைய தடுப்பூசி விவரங்களை, உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவோடு பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம், நிறைய மக்களுக்கு தடுப்பூசியை விநியோகிக்க முடியும்” என வலியுறுத்தினார்.