சிறப்புக் களம்

எளியோரின் வலிமை கதைகள் 18: டைப்ரைட்டர்’-’ஒரு பக்கத்துக்கு 30 ரூபாய்கூட கொடுக்க மாட்டாங்க’’

எளியோரின் வலிமை கதைகள் 18: டைப்ரைட்டர்’-’ஒரு பக்கத்துக்கு 30 ரூபாய்கூட கொடுக்க மாட்டாங்க’’

webteam

ஆவணப்படுத்துதல் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. குறிப்பாக சாதாரணமாக நாம் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தாலோ அல்லது யார் மீதாவது குற்றம் சுமத்தினாலோ எடுத்தவுடன் கேட்கிற கேள்வி ஆதாரம் இருக்கிறதா? என்ன ஆதாரம்? என்றெல்லாம் கேட்பதுண்டு. வாய்மொழியாக பேசியது சைகை செய்தது போன்ற ஆதாரங்களை நிரூபிக்க முடியாமல்கூட போய்விடும். ஆனால் எழுத்துமூலம் ஆதாரப்படுத்துவது என்பது கல்வெட்டு தோன்றிய காலங்களில் இருந்தே இருந்து வருகிறது என்று சொல்லலாம். காலம் மாற மாற கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என மாறி மாறி, தற்போது காகிதங்கள் மூலமாக பல்வேறு தகவல்களை பதிவு செய்வதோடு அவற்றை ஆதாரமாகக் கொண்டு வரலாறுகளும் எழுதப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தட்டச்சு என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இன்றுவரை கருதப்பட்டு வருகிறது. தற்போது என்னதான் கணினி உலகம் முன்னேறி இருந்தாலும்கூட அதற்கு முன்னோடியாக இருந்தது தட்டச்சு என்பதை யாரும் மறந்து விட முடியாது. அப்படி தட்டச்சு செய்து பிழைப்பு நடத்துகிற எளிய மனிதர்களைப் பற்றித்தான் இன்று பார்க்க போகிறோம்.

’’என் பேரு சண்முகம்ங்க. நான் கிட்டத்தட்ட முப்பது வருஷமா டைப்ரைட்டிங் அடிக்கிறேன். அப்போல்லாம் டைப்ரைட்டிங் அடிக்கிறவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். அதுக்காக இன்ஸ்டிடியூட்டுக்கு போய் தமிழ் இங்கிலீஷ்ல ஐயர் பாஸ் பண்ணனும். பாஸ் பண்ண உடனே வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நானும் டைப்ரைட்டிங் கத்துக்கிட்டேன். அப்போ டைப்ரைட்டிங் அடிக்கிறதுக்கு ஆளுங்க ரொம்ப கம்மியா இருந்ததால நம்ம ஏன் ஒரு மெஷின் வாங்கிக் கூடாதுன்னு யோசிச்சு, 5000 ரூபாய் கொடுத்து ஒரு மெஷின் வாங்கினேன். பத்திர பதிவுகள் வரும். அரசு அலுவலகத்துக்கு மனு அடிக்க வருவாங்க. நிறைய பத்திரங்கள் டைப்ரைட்டிங் மெஷின்ல அடிச்சதாத்தான் இருக்கும். ஒரு சில நாள்ல நிறைய கூட்டம் வந்துரும். அப்போல்லாம் நாளைக்கு வாங்கன்னு சொல்லி அனுப்புன காலமெல்லாம்கூட இருந்துச்சு.

இப்போ கம்ப்யூட்டர் வந்துருச்சு. அதனால டைப் அடிக்கறதோட மவுசு குறைந்து போச்சுங்க. எனக்கு இந்த வேலையைத்தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. இந்த வேலையை செய்துதான் குடும்பத்த வளர்த்தேன். ஆனா இப்போ ரொம்ப சிரமமா இருக்கு. இப்போ ஒவ்வொரு ஊர்லையும் ஒருத்தர் ரெண்டு பேருதான் டைப்ரைட்டிங் மெஷின் வச்சு இருக்காங்க. நான் நடந்து போகும்போது பெரிய பெரிய பில்டிங் எல்லாம் பார்ப்பேன். அந்த பில்டிங்க்கான பத்திரம் எல்லாம் டைப் பண்ணுது நான்தான்னு நினைக்கும்போது என்று ரொம்ப பெருமையா இருக்கும். சில பேரு கவர்மெண்ட்ல மனு கொடுக்க வருவாங்க. ஆனா அவங்ககிட்ட காசு இருக்காது. அங்களுக்கெல்லாம் இலவசமாக டைப் அடிச்சு கொடுப்பேன். அப்போ ஒரு பக்கத்துக்கு ஒரு ரூபா ரெண்டு ரூபா தான் கொடுத்தாங்க. இன்னைக்கு ஒரு பக்கத்துக்கு 30 ரூபாய் வரைக்கும் கேட்கிறோம். ஆனால் அப்படி யாரும் கொடுக்கிறதில்லை. யாராவது ஒருத்தர் கொடுப்பாங்க; இல்ல 25 ரூபாய் கொடுப்பாங்க. அவ்வளவுதாங்க. இது வச்சுதான் எங்க குடும்பம் ஓடுது.

இப்போல்லாம் ஒரு நாளைக்கு ஒருத்தர் ரெண்டு பேர்தான் டைப்ரைட்டிங் அடிக்க வர்றாங்க. நிறைய பத்திரங்கள் அடிக்கும்போது ஜக்குபந்தி சொல்லுவாங்க. ஒரு மனைக்கு கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு அடிக்கும்போது சில சந்தேகம் வரும். நான் குறுக்குக் கேள்வி கேட்டவுடனே பத்திரம் அடிக்க வந்தவர் ரொம்ப மகிழ்ச்சி ஆகிடுவாங்க. ஏன்னா நமக்கு ஜக்குபந்தி எப்படி இருக்கும்னு நல்லாவே தெரியும். எந்த பத்திரமா இருந்தாலும் அந்த இடத்தில அவங்கள கேட்டுக்கிட்டுதான் நான் அடிப்பேன். அவங்களும் ஆச்சரியமா பார்ப்பாங்க. ஏன்னா எங்களுக்கு தொழிலே அதுதானே. அது மாதிரி நிறைய அனுபவங்கள் எங்களுக்கு இருக்குதுங்க. இடையில இடையில தவறாகிவிடும். அது திருத்த வருவாங்க. பத்திரங்களா இருந்தால் திருத்த முடியாது. புதுசா பத்திரம் வாங்கணும்; தப்பு பண்ணது நாமதான்னா, அந்த பத்திரம் வாங்குற செலவும் எங்களோடதாகிடும்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த டைப்ரைட்டிங் மெஷின் இருக்குமோ தெரியல. இப்ப இது உற்பத்தி பண்றது கூட இல்லைன்னு கேள்விப்பட்டேன். மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சுன்னா மெக்கானிக தேடி அலையறதே பெரும்பாடாயிடும். ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும், என் கண்பார்வை தெரியற வரைக்கும் இந்த டைப்ரைட்டிங் மெஷின் தான் என் வாழ்க்கை’’ என்றார்.

அச்சுக் கோர்ப்பது, அதற்குப் பிறகு தட்டச்சு செய்வதுதான் அச்சு வடிவத்தில் முதல்பகுதியாகும். தற்போது கணினி மையம் ஆகிவிட்டாலும்கூட, அதன் அடிப்படை இங்கே இருந்துதான் வந்தது என்பதை நம்மால் உணர முடியும். இது எத்தனை பேருக்கு தெரியும்? இப்படியாகவே ஒவ்வொரு ஊரிலும் ஒரு தட்டச்சு செய்பவர் இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறார். அவர்களுடைய வாழ்க்கை எழுத்துக்களை உருவாக்குவதுபோலவே இருப்பதை நம்மால் உணர முடியும்.

இதேபோலத்தான் செஞ்சியை சேர்ந்த சண்முகம் என்பவரும் தட்டச்சு பழகிக்கொண்டு தட்டச்சு பயிற்சி நிலையம் ஒன்று அமைத்து நடத்தி வருகிறார். இன்றுவரை என்னதான் கணினி மயம் ஆனாலும்கூட தட்டச்சு பழகுவதில் யாரும் குறையவில்லை என்கிறார் இவர். ஒரு காலத்தில் 5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட தட்டச்சு மெஷின் இப்போது 50 ஆயிரம் வரை விற்பனையாகிறது என அவர் கூறுகிறார். என்னதான் கணினியில் தட்டச்சு செய்தாலும்கூட பழக்கத்திற்கு டைப்ரைட்டிங் மெஷின்தான் சரியானது என்கிறார் அவர். வருமானம் ஒன்னும் இல்லைங்க இருந்தாலும் கத்துக்கிட்ட தொழில்; அதை விடாமல் இருக்கிறோம் என்கிறார். இப்படி தட்டச்சு செய்பவர்களின் வாழ்க்கையும் தேடிப் பார்ப்பது போலவே இருந்து வருகிறது.

- ஜோதி நரசிம்மன்