சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-25: இளம் தலைமுறையின் செய்தி நாயகிகள்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-25: இளம் தலைமுறையின் செய்தி நாயகிகள்

webteam

முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தினந்தோறும் காலை நாளிதழுக்காக வாசகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த காலம் இருந்தது. ஆனால், தொலைக்காட்சி வருகையும், அதன் பிறகு இணையத்தின் எழுச்சியும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியை சாத்தியமாக்கியிருக்கின்றன. அதிலும் இப்போது ஸ்மார்ட்போனில் விரல் நுனியில் செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த இணைய யுகத்திலும், செய்திகளை தெரிந்து கொள்ள லட்சக்கணக்கானோர் தினமும் காலை இமெயிலில் வந்து சேரும் செய்தி மடலுக்காக காத்திருக்கின்றனர் என்பது வியப்பு தான் அல்லவா? ஆம், தி ஸ்கிம் (The Skimm )செய்தி மடல் சேவை தான் இப்படி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றிருக்கிறது. ஸ்கிம் செய்தி மடல் எழுபது மில்லியனுக்கும் மேலான சந்தாதாரர்களை கொண்டிருப்பதோடு, தனி நபர் நிதிக்கான தனிப்பகுதி, பாட்காஸ்டிங் உள்ளிட்ட துணை சேவைகளை கொண்டுள்ள மாபெரும் ஊடக சாம்ப்ராஜ்யமாக உருவாகியிருக்கிறது.

பாரம்பரிய ஊடகங்களுக்கு சவால் விடும் அளவுக்கு நவீன ஊடக சாம்பிராஜயமாக உருவாகியிருக்கும் தி ஸ்கிம் செய்தி, புத்துணர்ச்சி பெற்றிருக்கும் செய்தி மடல் சேவைக்கும் முன்னணி உதாரணமாக அமைந்திருக்கிறது.

இமெயில் மடல்

செய்தி மடல் என்பது பழைய கருத்தாக்கம் தான் என்றாலும், இணைய யுகத்தில் இமெயில் வடிவில் வந்து சேரும் செய்தி மடல்கள் அல்லது மின் மடல்கள் வாசர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாக உருவாகியுள்ளன.

குறுஞ்செய்தி, மெசஞ்சர் செய்தி என நவீன வசதிகள் வந்துவிட்ட காலத்தில், இமெயிலே கொஞ்சம் பழைய வடிவமாகிவிட்டாலும் கூட, குறிப்பிட்ட ஆர்வம் சார்ந்த உள்ளடக்கத்தை நேரடியாக வழங்குவதற்கான வசதி, இமெயில் மூலமான செய்தி மடல் வசதிக்கு புத்தூயிர் அளித்துள்ளது. எழுத்தார்வம் கொண்ட பலரும் இந்த வசதியை பயன்படுத்தி வருவதோடு, ஊடகத்துறையைச் சேர்ந்த பலரும் கூட செய்தி மடல் வடிவத்தை கையில் எடுத்திருக்கின்றனர். ஒரு சிலர் செய்திமடலை நடத்துவதையே முழுநேர பணியாக மேற்கொள்ளும் அளவுக்கு தொழில்முறையாகவும் கைகொடுத்திருக்கிறது. செய்தி மடல் சேவைக்கு என்று பிரத்யேக செய்திகளையும், நேர்காணல்களையும் வழங்கும் இதழாளர்களும் இருக்கின்றனர்.

புதிய வழி

இப்படி லட்சக்கணக்கான செய்தி மடல் சேவைகள் இருந்தாலும், இவற்றில் முன்னணியில் விளங்கும் முன்னுதாரண செய்தி மடல்களில் ஒன்றாக 'தி ஸ்கிம்' அமைந்துள்ளது. இளம் தலைமுறை பெண்கள் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு விரும்பி நாடும் வழி என அறியப்படும் வெற்றிகரமான 'ஸ்கிம்' செய்தி மடல் சேவையின் நிறுவனர்களும் இரண்டு இளம் பெண்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஸ்கிம் செய்தி மடல் சேவையின் பின்னே இருக்கும் டேனியேலா வெய்ஸ்பெர்க் (Danielle Weisberg) மற்றும் கார்லி ஜாகின் (Carly Zakin)
வெற்றிக்கதையை பார்க்கலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த டேனியேலா மற்றும் கார்லி, இத்தாலியின் ரோம் நகரில் உயர் கல்வி படித்துக்கொண்டிருந்தபோது சந்தித்து நண்பர்களாயினர். அப்போது ஒன்றாக அறை எடுத்து தங்கி நெருக்கமானவர்கள் படித்து முடித்ததும் தங்கள் வழிகளில் பிரிந்து சென்றுவிட்டனர். அதன் பிறகு இருவரும் பணி சூழலில் தற்செயலாக மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.பி.சி தொலைக்காட்சியில் இருவரும் பயிற்சி ஊழியர்களாக பணியாற்றினர். அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இருவருக்கும் செய்தி சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்தது, செய்தி தான் எல்லாமும் என நினைத்தனர். அதே நேரத்தில் ஊடகத்துறையில் எப்படி முன்னேறிச் செல்வது என்றும் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தனர்.

நட்பு வட்டம்

டேனியேலாவுக்கும், கார்லிக்கும் பெரிய நட்பு வட்டமும் இருந்தது. இருவரும் செய்தி துறையில் இருந்ததால் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவர்களை சந்திக்கும்போது அன்றைய முக்கிய செய்தி பற்றி கேட்டுத்தெரிந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தோழிகளிடம் செய்தி கேட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் துறைகளில் நல்ல வேலையில் இருந்தனர், மிகுந்த திறமைசாலிகளாகவும் இருந்தனர். அப்படி இருந்தும் அவர்கள் செய்தி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததை தோழிகள் கவனித்தனர்.

டேனியேலாவுக்கும், கார்லிக்கும் இந்த போக்கு வியப்பை அளிக்கவில்லை. செய்தியாளர்களாக இருந்ததால் தாங்கள் செய்திகளை சுவாசிப்பதாக
உணர்ந்தவர்கள், மற்ற துறையில் இருந்தவர்கள் அப்படி இருக்க வேண்டியதில்லை என நினைத்தனர். இந்த சிந்தனை மூலம் அவர்கள் மனதில் புதிய எண்ணம் பளிச்சிட்டது. தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பது போன்றவர்களுக்கான செய்தி சேவையை வழங்குவது தான் அந்த யோசனை. திறமைசாலிகளாக இருக்கும் தொழில்முறை இளம் பெண்கள் செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அதற்கான நேரம் ஒதுக்க முடியாமல் பிஸியாக பறந்து கொண்டிருப்பதை உணர்ந்தவர்கள், இவர்களுக்காக என்றே புதுமையான செய்தி சேவையை வழங்கலாம் என
தீர்மானித்தனர்.

செய்தியில் எளிமை

செய்திகளில் ஆர்வம் கொண்ட இளம் தொழில்முறையினர் அதிக நேரத்தை செலவிடமால், அன்றைய செய்திகளை எளிதாக தெரிந்து கொள்ள வழி செய்வதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது. அவர்கள் துவக்கிய சேவை இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டிருந்தது. ஒன்று செய்திகளை தெரிந்து கொள்வதற்காக அங்கும் இங்கும் செல்லும் தேவையில்லாமல், ஒரே இடத்தில் அன்றைய தின முக்கிய செய்திகளை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக, அதிக நேரம் செலவிடமால் எளிதாக படித்துவிடக்கூடிய அளவுக்கு இலகுவான மொழியில் செய்திகளை வழங்குவது. ஒரு விதத்தில் தினமும் காலையில் செய்திகளை ட்விட்டர் மற்றும் இமெயில் மூலம் தெரிந்து கொள்வது தோழிகளின் வழக்கமாக இருந்தது. இதையே சேவையாக வழங்க நினைத்தனர். செய்தி வாசிப்பு தங்களுக்கு இயல்பாக இருந்ததால் இதை சிறப்பாக செய்ய முடியும் என்றும் நம்பினர்.

செய்திக்குவியலில் இருந்து இளம் தலைமுறை பெண்களுக்கு பொருத்தமான அவர்கள் பொருட்படுத்தக்கூடிய செய்திகளை தேர்வு செய்ததோடு, அவற்றை எளிதாக படிக்கும் வகையில் சுருக்கமாகவும் அளிக்க விரும்பினர். இந்த யோசனை உறுதியானவுடன் இருவரும் என்பிசி தொலைக்காட்சி பணியை விட்டு விலகி, தி ஸ்கிம் எனும் பெயரில் செய்தி மடல் சேவையை துவக்கினர்.

அன்றைய செய்திகளை தொகுத்து சில நிமிடங்கள் படித்து விடக்கூடிய வகையில் இமெயில் தினமும் அதிகாலை 6 மணிக்கு அனுப்பி வைத்தனர். நாட்டு நடப்பில் ஆர்வம் உள்ள எவரும் அதிகாலை இந்த செய்தி மடலை படித்தால் போதும்; தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு விடலாம். இந்த தகவல் அறிவு அவர்களுக்கு பணியிலும், விருந்து உரையாடல்களிலும் கைகொடுக்கும்.

இலகு வாசிப்பு

டேனியேலாவும், கார்லியும் செய்தித்துறை அனுபவத்தை கொண்டு தாங்களே செய்திகளை தேர்வு செய்து, அவற்றை சுருக்கி தொகுத்தனர். முக்கிய செய்திகள் எளிதாக புரியும் வகையில், அவற்றை உடைத்து, ஏன், எப்படி? போன்ற விளக்கங்களையும் அளித்தனர். வழக்கமான செய்தி விவரிப்பு பாணியில் இருந்து விலகி இலகு வாசிப்பிற்கான நடையை பின்பற்றினர்.

2012 ம் ஆண்டு தி ஸ்கிம் செய்தி மடல் சேவை அறிமுகமானது. ஆனால் இந்த சேவைக்கு நிதி திரட்ட அவர்கள் முயற்சித்த போது நிராகரிப்புகளே பதிலாக கிடைத்தன. பலரும், இமெயிலில் செய்தி என்றதும் இமெயில் வடிவம்தான் எப்போதோ இறந்துவிட்டதே என உதடு பிதுக்கி, செயலி வடிவை முயற்சிக்கவும் என ஆலோசனை கூறினர். ஆனால், டேனியேலா, கார்லி இமெயில் வடிவில் நம்பிக்கையுடன் இருந்தனர். இமெயில் முகவரி பெட்டியை திறந்ததும் வந்து விழும் தி ஸ்கிம் செய்தி மடலை திறந்தால் முக்கிய செய்திகளை எல்லாம் எளிதில் வாசிப்பதற்கான வாய்ப்பையே சிறந்த அனுபவம் தரக்கூடியதாக கருதினர்.

அது மட்டும் அல்லாமல், முதல் கட்டமாக தங்களுக்கு அறிமுகமான வட்டாரத்தில் சில நூறு பேருக்கு இந்த மடலின் மாதிரியை சேவையை அனுப்பியிருந்தனர். அவர்களிடம் இருந்த நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. எனவே நம்பிக்கையோடு சேவையை துவக்கினர். முதல் கட்ட வாசகர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. இதனிடையே இந்த சேவை பற்றிய செய்தியை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தனர். அதன் பயனாக இணைய இதழான ’ஸ்லேட்’ இந்த சேவை பற்றிய அறிமுக செய்தியை வெளியிட்டது. இது பரவலான கவனத்தை ஈர்த்தது.

பெரும் வரவேற்பு

ஸ்கிம் செய்தி மடல் சேவையின் இலக்கு வாடிக்கையாளர்கள் குறித்தும் தெளிவாக இருந்தனர். மில்லினியல் என குறிப்பிடப்படும் புத்தாயிரமாண்டு தலைமுறையினரை குறிப்பாக பெண்களை இலக்காக கொண்டு செயல்பட்டனர். இந்த தரப்பினருக்கு ஸ்கிம் செய்தி மடல் பிடித்துப்போனது. ஆரம்ப உறுப்பினர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் இந்த இமெயிலை பகிர்ந்து கொண்டனர். இப்படியே வாசகர் வட்டம் விரிவாக புதிய உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்தனர்.

இதனிடையே பிரபலங்கள், நட்சத்திரங்கள், ஊடகவியாளர்களும் இந்த பட்டியலில் இணைந்தனர். அனைத்து தரப்பினரும் ஸ்கிம் செய்திகளை தொகுத்து வழங்கிய விதத்தையும் அதன் எளிமையான நடையையும் விரும்பினர். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓபராவும் இந்த மடலின் வாசகியாக இணைந்தது உள்ளிட்ட செய்திகள், ஸ்கிம் செய்தி மடலை மேலும் பிரபலமாக்கியது. ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் இணைந்தனர். அதோடு, இந்த மடலை பெற்ற செய்தியாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதை அறிமுகம் செய்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஈர்க்கப்பட்டனர்.

வெற்றிப்பாதை

ஸ்கிம் மடலுக்கு கிடைத்த வரவேற்பு மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடிந்தது. எனினும் விளம்பரதாரர்கள் பற்றி கவலைப்படாமல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர். அதோடு, செய்தி மடலில், சுருக்கத்தை படித்தவுடன் விளம்பர கிளிக் இல்லாமல் முழு செய்தியையும் நேரடியாக படிக்க வழி செய்தனர். இவை எல்லாம் வாசர்களை ஈர்த்தன.

மில்லினியல் பெண்களுக்கான மடலாக இருந்தாலும் ஆண்களும் இதில் விரும்பி இணைந்தனர். உறுப்பினர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கை நெருங்கிய போது, ஒரு செய்தி மடல் சேவை இந்த அளவு வரவேற்பை பெற்றிருப்பது மேலும் கவனத்தை குவித்தது. அதிலும் இரண்டு இளம் பெண்கள் இதை தலைமையேற்று நடத்தியது அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

துவக்கத்தில் டேனியேலாவும் கார்லியும், தங்கள் அறையில் இருந்தே செய்தி மடலை நடத்தினர். அவர்களே செய்திகளை தொகுத்தளித்தனர். வரவேற்பு பெருகிய நிலையில் மேலும் ஊழியர்களை நியமித்துக்கொண்டனர். வர்த்தக அலுவலகத்திற்கும் மாறினர். செய்தி மடல் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பகுதிகளையும் அறிமுகம் செய்தனர்.

2016 அமெரிரக்க தேர்தலின் போது, வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட வாக்காளர்களை பதிவு செய்ய வைத்தனர். அடுத்த தேர்தலில் இந்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டது. இந்த பிரச்சாரம் மேலும் கவனத்தை ஏற்படுத்தியது. இதனிடையே செய்திகளை தொகுத்து வழங்குவதை எளிமையாக்கும் பெயரில் மிகவும் கொச்சையாக்கி இருப்பதாக விமர்சனமும் எழுந்தது. ஆனால் இலக்கு வாசகர்கள் இந்த பாணியை விரும்பவே செய்கின்றனர். ஸ்கிம் செய்தி மடல் சேவை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து ஐந்து மில்லியனுக்கும் மேல் உறுப்பினர்களை ஈர்த்தது. தற்போது இந்த
எண்ணிக்கை ஏழு மில்லியனுக்கும் மேல் அதிகமாக இருக்கிறது. ஸ்கிம் பாட்காஸ்டிங் உள்ளிட்ட புதிய பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இன்று தொழில்முறை ஊடகங்களுடன் போட்டியிடும் அளவுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் ஸ்கிம் செல்வாக்கு பெற்று திகழ்கிறது.

சைபர்சிம்மன்