சிறப்புக் களம்

தமிழக காடுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழக காடுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

jagadeesh

தமிழக காடுகளில் வாழும் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கும் புலிகள் சரணாலயங்களில் தமிழகத்தில் 828 முதல் 908 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் அதிகளவிலான சிறுத்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 2,017 சிறுத்தைகள் புகைப்படங்கள் பதிவாகின. அதிலிருந்து இறுதியான எண்ணிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2014 கணக்கெடுப்பை பொறுத்தவரை 629 சிறுத்தைகள் தமிழகக் காடுகளில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி சிறுத்தகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதில் முதுமலை புலிகள் சரணாலயத்தில் 12.11 சதவிகித சிறுத்தைகள் வாழ்வதாகவும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் 7.05 சதவிகிதமாகவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 10.18 சதவிகிதம் சிறுத்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் ஆச்சரியம் தரும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தின் ஒட்டியப் பகுதிகளில் 20.43 சதவீதத்தில் சிறுத்தைகள் செழிப்பாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகமலை வன உயிர் காப்பகம் தேனி மாவட்டத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகம் மதுரை மற்றும் கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகத்துடன் ஒட்டி அமைந்துள்ளது. இதனை புலிகள் காப்பகமாக மாற்ற கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள், டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு 2017 - 2018 ஆம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தப் பகுதிகளில் 14 புலிகள் இருப்பது தெரிய வந்தது. அதில் மூன்று ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பட்டது.

இதனையெல்லாம் பரீசிலித்த மத்திய அரசு இவற்றை புலிகள் சரணாலயமாக மாற்ற கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. மேலும் தேசியப் புலிகள் பாதுகாப்பு கழகமும் இதற்கு அனுமதியளித்துள்ளது. மேலும் மேகமலை சரணாலயத்தில் புலிகளின் உணவுக்கான தேவையும் கணக்கில் கொள்ளப்பட்டது. அதாவது ஏராளமான காட்டு மாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் இந்த சரணாலயத்தில் இருப்பதால் புலிகளின் உணவு தேவையும் ஈடு செய்யப்படும். இப்போது இங்கு சிறுத்தைகள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் சூழலியலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக சிறுத்தைகள்

இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3,421, 1,783 1,690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில்தான், சிறுத்தைகள் எண்ணிக்கையும் மதிப்பிடப்பட்டன. சிறப்பு மென்பொருளை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 51,337 சிறுத்தை போட்டோக்களில், 5,240 இளம் சிறுத்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.