child game pt desk
சிறப்புக் களம்

இளையோர் மொழிக்களம் | விளையாட்டில் வளர்ந்த மொழி

எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 16

மகுடேசுவரன்

விளையாட்டுக்கும் இளமைக்கும் உள்ள தொடர்பும் அருமையானது. இயற்கையின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு உடல்திறன் மேம்பட்டாக வேண்டும். அதற்கு உடலை நன்கு பயிற்றுவிக்க வேண்டும். உடல் திறனே உயிராற்றலைப் பெருக்குகிறது.

உயிரோடிருத்தல் என்பது உடலின் இயங்கு திறனோடு தொடர்புடையது. அதனால்தான் விலங்குகளின் உடற்குறை அவற்றின் வாழ்நாளை முடித்துக் கட்டுகிறது. காலில் அடிபட்ட புலிக்கு இனி உணவு கிடைக்காது. ஓட முடியாத மானுக்குத் தன்னால் இனி வேட்டையிலிருந்து தப்பிக்க இயலாது என்பது தெரியும். உயிரோடிருத்தல் என்பது உடல் திறனின் ஈகை. உடல் திறனை வளர்த்து வளர்த்துச் சிறந்தவர்களால் தம் செயல்களிலும் நூறு விழுக்காட்டுக்கு மேலே ஈடுபட முடியும். இன்றைய புதிய வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொரு செயலுமே போர்தான். அங்கே அரைகுறை முயற்சிக்கு இடமில்லை.

hunting

குழந்தையையும் விளையாட்டையும் பிரிக்க முடியாது. குழந்தையிலிருந்து அடுத்த இருபதாண்டுகட்கு நம் உடல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இயற்கை அத்தகைய திட்டத்தை அச்சிற்றுடலுக்குள் பொதித்து வைத்திருக்கிறது. கை கால் அசைப்பிலிருந்து தொடங்கும் அதன் உடலியக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. மெல்லத் தவழத் தொடங்குகிறது. தவழ்ச்சி முடிந்தவுடன் எழுந்து நிற்கிறது. தத்தக்கா பித்தக்கா என்று நடக்கிறது.

பெற்றோர்கள் அடிக்கடி சோர்ந்துபோகும் இடம் ஒன்றுண்டு. குழந்தையின் துறுதுறுப்புக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாத இடம் அது. ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளைக் கட்டி மேய்ப்பது பெரும்பாடு. குழந்தைகளும் ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருப்பார்களா, என்ன? அவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள், விளையாடிக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகளால் நாள் முழுக்க விளையாட முடியும். வளர்ந்தவர்கட்குள்ளேயும்கூட விளையாட்டு விரும்பி ஒருவர் தட்டி அடக்கி வைக்கப்பட்டுள்ளார் என்றே கொள்ளவேண்டும். விளையாட்டு உயிரியல்பு! மாலை முழுதும் விளையாட்டு என்றே வழக்கப்படுத்திக் கொள்ளச் சொல்கிறார் பாரதியார்.

village games

நம் விளையாட்டில் மொழி கலந்திருந்தது. பிள்ளைகளின் விளையாட்டில் வாயொலிக்கு வேலையில்லை என்றே கூற முடியாது. ஏதாவது ஒன்றைக் கூறிக்கொண்டே விளையாடவேண்டும், பாடிக்கொண்டே விளையாடவேண்டும். விளையாட்டின் வழியாகவும் பிள்ளைகளின் மொழிவளம் மேம்பட்டது. நம் இளமையில் எத்தனை விளையாட்டுகளை விளையாடினோம் என்று எண்ணிப் பாருங்கள். அவ்விளையாட்டுகளில் என்னென்ன பாடினோம் என்று நினைவிருக்கிறதா ? அந்தப் பாடல்களை இன்றைய பிள்ளைகள் அறிந்திருக்கின்றனவா ? பிள்ளைகளுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டுச் செயல்வழியே அவர்கள் நினைவில் கலக்கும் மொழி எத்துணை வன்மை பெறும் !

‘நண்டூருது, நரியூருது’ என்று கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோவதுபோல் சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் கைவழியே எட்டுவைத்து வருவார்கள். தோளருகே வந்தவுடன் கிச்சு கிச்சு மூட்டுவார்கள். விளையாட்டும் நடக்கிறது. தொடுசெயல் வழியாய் மெய்ப்புலப்பாடும் தூண்டப்படுகிறது. “நண்டு ஊர்கிறது, நரி ஊர்கிறது” என்னும் மொழித்தொடர்களும் விதைக்கப்படுகின்றன. இந்த வழியில் வந்த மொழி வலிமையான அடித்தளத்தைப் பெற்றிருக்குமில்லையா ?

இளமை விளையாட்டில் உள்ள மொழித்தொடர்கள், பாடல்கள், உரையாடல் பகுதிகள் அமைந்த விளையாட்டுகளை நினைவுகூர முடிகிறதா ?

mother play with her child

“பருப்பான் பருப்பான் பன்னிரண்டு பருப்பான்

சுக்கைத் தட்டி சோத்துல போட்டு

குள்ளியம்மா குழலூத இராக்காத்தா விளக்கேத்த

உங்கொப்பன் பேரு என்ன ?

முருங்கைப்பூ

முருங்கைப்பூவும் தின்னவனே

முந்நூறு காசு கொடுத்தவனே

பாம்புக்கையை மடக்கு

மாட்டேன்.”

இந்தப் பாட்டினைப் பாடிய நினைவு பலர்க்கும் இருக்கக்கூடும். இத்தகைய பாடல்களை இன்றைய குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்துப் பாடி விளையாடப் பழக்குகிறோமா ? இந்தத் தொடர் எளிமையான பாட்டுத் தொடர்போல் தோன்றும். ஆனால், பருப்பாம் என்பது பருப்பான் ஆகியிருக்கிறது. ம் என்பது ன் ஆகுமே. நலம் – நலன், திறம் – திறன். வள்ளி என்று பெயர்வைப்பதுபோல் குள்ளி என்றும் பெயரிட்டழைப்பது பண்பாடாக இருந்திருக்கிறது. உயரம் எப்படிச் சிறப்போ அவ்வாறே குள்ளமும் சிறப்புத்தான்.

அச்சொற்களில் ஏதேனும் தாழ்வுணர்வு கருதினால் அது அவருடைய மனப்பான்மைக் குறை. இத்தகைய சொற்களை மேலைச் சிந்தனைகளால் ஆளப்பட்ட நாம் தாழ்வாகக் கருதத் தொடங்கினோம். ஒரு விளையாட்டு மறைவதால், ஒரு பாடல் மறைவதால், ஒரு பண்பாட்டு வளமே இழப்பைக் காண்கிறது. ’பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்’ என்று ஒரு விளையாட்டுப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலில் ‘வர்றோம்’ என்ற கொச்சைத் தொடரே இல்லாமல் வருகிறோம் என்று ஆளப்பட்டிருப்பதைக் காணலாம்.

games

பிள்ளைகளின் விளையாட்டில் கலந்திருந்த மொழியும் பாடல்களும் எவ்வாறு அருகிப்போயின? இன்றைக்கு நம் பிள்ளைகளின் விளையாட்டாக மட்டைப் பந்து மாறிவிட்டது. அந்த விளையாட்டில் நாம் மன்றாடிப் புகுத்திய மட்டை, பந்து போன்ற சில சொற்களைத் தவிர ஒரு சொல்லாவது தமிழ்ச்சொல் உண்டா? விளையாட்டில் மொழி கற்றுக்கொண்டு வளர்ந்த நாம், நம் மொழிச்சொற்களே இல்லாத, இன்னும்கூட ஆக்கி வழங்கிப் புகுத்தப்படாத விளையாட்டைத்தானே தலைமேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறோம்? விளையாட்டில்கூட இடம்பெற்று வளர்ந்த மொழி, விளையாட்டாகவே கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறதா ?