சிறப்புக் களம்

பெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்?

பெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்?

webteam

செப்டம்பர் 17 அன்று சென்னையில் நடந்த பிரதமர் மோடி பிறந்த நாள் நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், "சமூக நீதிக்காகப் போராடியவர் பெரியார். அவருக்கு வாழ்த்துக் கூறுவதில் தயக்கமில்லை" என்று தெரிவித்தார். பின்னர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரியாரின் சமுதாய சீர்திருக்கக் கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்க்கிறோம்” என்றார். இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதேநேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள் சில சலசலப்புகளும் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அரசியல் விமர்சகர்களிடம் கேட்டோம்.

கோலாகல ஸ்ரீநிவாஸ், அரசியல் விமர்சகர்

தமிழகத்தில் ஒரு மறைந்துபோன தலைவரைப் பற்றிப் பேசுவதிலும், பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதிலும் எந்த அரசியல் முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. தர்க்கரீதியாக திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கு எதிரானது பாஜக. இரண்டு கழகங்களுக்கும் வேராக பெரியார் இருக்கிறார். ஆனால் பாஜகவின் சித்தாந்த வேர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி.

பெரியாரின் பிறந்த நாள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எல். முருகன், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் அண்ணாமலை அவராகவே பெரியார் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் பெரியார் பற்றிப் பேசுவதை பாஜகவில் பாரம்பரியமாக இருக்கும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். திராவிட இயக்கங்களின் பிற்சேர்க்கையாக பாஜகவை நினைக்கமுடியாது. திராவிட இயக்கங்களில் இருந்து வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள், கோட்பாடுகளைக் கொண்டது பாரதிய ஜனதா கட்சி.

கோலாகல  ஸ்ரீநிவாஸ்

பெரியார் பற்றி முருகன் கூறியதை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் நிலைப்பாடாக புரிந்துகொள்ளமுடியாது. எடுத்துக்காட்டாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துச் சொன்னால், அதை வைத்துக்கொண்டு தேர்தல் அரசியல் கணக்குகளைப் போடக்கூடாது. அரசியல் களத்தில் நாகரிகம் கருதி தலைவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது எதார்த்தமானது.

திமுகவையும் அதிமுகவையும் தேடிப்போகவேண்டிய தேவையில் பாஜக இல்லை. தமிழகத்தில் ஒரு சீட் வாங்காத காலத்தில்கூட மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மத்தியில் அது மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. தற்போது பெரியார் பற்றிப் பேசியதால் கட்சிக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துக்கொண்டிருக்கக் கூடாது.

மணி, பத்திரிகையாளர்

திமுகவுடன் கூட்டணியில் இருந்த 1999 - 2004 காலகட்டத்தில் பெரியார் பற்றி பேசாமல் பாஜகவினர் அமைதியாக இருந்தார்கள். இப்போதைய நிலைமை அப்படியில்லை. பாஜக தலைவர்கள் சிலர் காலையில் எழுந்ததில் இருந்து பெரியாரைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பாரதிய ஜனதாவில் உள்ள ஒரு பிரிவினர் பெரியாரைத் திட்டமாட்டார்கள். ஈவெரா என்று சொல்லாமல் பெரியார் என்றே விழிப்பார்கள். மற்றோரு பிரிவினரோ தொடர்ந்து அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ஹெச். ராஜா பெரியாரை ஈவெரா என்றுதான் சொல்வார். தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், குமரகுரு, எல். முருகன், நாகராஜன் போன்றவர்கள் பெரியார் என்றே குறிப்பிடுவார்கள். தமிழக பாஜகவில் இருவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன. ஒருமுறை தமிழிசையிடம் பெரியார் பற்றி கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த அவர், "எல்லா மாநிலங்களிலும் மக்களால் கொண்டாடப்படக்கூடிய தலைவர்கள் உள்ளனர். அவர்களைப் போற்றுவதில் என்ன தவறு இருக்கிறது. பெரியார் எல்லோருக்கும் பெரியார்தான்" என்று விளக்கம் அளித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மணி 

தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பெரியார் செய்த சமூகச் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்கிறார். பெரியார் போன்ற தலைவர்களை அதிகம் விமர்சிக்காமல் கடந்துபோகவேண்டும் என்றுதான் பாஜகவின் தலைமை விரும்புகிறது. ஆனால் தமிழகத்தில் யாரும் கேட்பதில்லை. பொதுவாக தேர்தல் காலத்தில் பெரியாரைத் தாக்கிப் பேசமாட்டார்கள். எல். முருகன் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதில் வேறெந்த அரசியல் முக்கியத்துவமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றார்.