Kylian Mbappe Twitter
சிறப்புக் களம்

முடிவுக்கு வந்தது இழுபறி; ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார் எம்பாப்பே! தொடங்கும் புதிய அத்தியாயம்!

Viyan

கடந்த சில ஆண்டுகளாகவே பிஎஸ்ஜி அணியிலிருந்து அவர் ரியல் மாட்ரிட் அணியில் இணைவார் இணைவார் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்த நிலையில், ஒருவழியாக அந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது. ஏன் இந்த டிரான்ஸ்ஃபருக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு? இது கால்பந்து அரங்கில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது?

Real madrid

கிலியன் எம்பாப்பே - உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவர். மோனகோ கால்பந்து அணிக்காக ஆடிய அவர், 2016-17 சீசனில் கால்பந்து உலகின் கவனத்தைப் பெற்றார். பிரான்ஸின் லீக் 1 சுற்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் ஆதிக்கத்தைத் தடுத்தி நிறுத்தி மோனகோ அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அவர் முக்கியக் காரணமாக விளங்கினார். அதுமட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் அந்த அணி அந்த சீசன் அரையிறுதி வரை முன்னேறியது. மொத்தம் விளையாடிய 44 போட்டிகளில் 26 கோல்கள் அடித்து மிரட்டினார் அவர்.

அதனால் பிஎஸ்ஜி அணி அடுத்த சீசனே அவரை வாங்க முடிவு செய்தது. ஒரு ஆண்டுக்கு முன்பு தான் நெய்மரை உலக சாதனை தொகைக்கு ஒப்பந்தம் செய்தார்கள் என்பதால், லோனில் இருந்து மோனகோவிலிருந்து அவரை ஒப்பந்தம் செய்தனர். ஒரு வருட லோனுக்குப் பிறகு, அடுத்த சீசன் 180 மில்லியன் யூரோவுக்கு அவரை வாங்குவதே அந்த ஒப்பந்தம். அந்த அணிக்கும் அசத்திய அவர், 44 போட்டிகளில் 21 கோல்கள் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அடுத்த ஆண்டு அந்த லோன் ஒப்பந்தம் முடிந்து டிரான்ஸ்ஃபர் உறுதி ஆனது. நெய்மரும், எம்பாப்பேவும் அந்த அணிக்கு பெரிய தூண்களாக இருந்தனர். தொடர்ந்து பிரான்ஸில் டொமஸ்டிக் பட்டங்கள் வென்றாலும் அந்த அணியால் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்ல முடியாமல் இருந்தது. ஆனானப்பட்ட மெஸ்ஸியே வந்தும் கூட அவர்களால் பட்டம் வெல்ல முடியவில்லை.

Kylian Mbappe

இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி தங்களின் எதிர்கால திட்டத்தில் எம்பாப்பாவை முக்கிய அங்கமாகக் கருதியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியிலிருந்து வெளியேறிய பிறகு அவர் இடத்தை நிரப்பக் கூடிய ஒரு சூப்பர் ஸ்டாராக எம்பாப்பேவைப் பார்த்தது அந்த அணி. ரியல் மாட்ரிட் போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க கிளப்புக்கு ஆடுவது எம்பாப்பேவுக்கும் கனவு என்பதால், அவரும் அதற்குத் தயாராகவே இருந்தார். ஆனால் பிஎஸ்ஜி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

2022ம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு பெரும் யுத்தமே நடந்தது. எம்பாப்பே தன் ஒப்பந்தம் முடிந்ததும் ரியல் மாட்ரிட் அணியில் இணைவது என்ற முடிவில் இருந்தார். ஆனால் பிஎஸ்ஜி நிர்வாகமோ அவரை வெளியேற விடாமல் தடுத்தது. அந்த அணியின் எதிர்கால அடையாளமாக எம்பாப்பேவை கருதியதால் என்னென்னமோ செய்து அவரை அணியில் இருக்கவைக்க முடிவு செய்தனர். எப்படியோ மிகப் பெரிய ஊதியம், அதுபோக மில்லியன் கணக்கில் பல சலுகைகள் கொடுத்து அவர் ஒப்பந்தத்தை நீட்டித்தனர். ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் வெளியேறிய பிறகு, அடையாளமாக சூப்பர் ஸ்டார் பிளேயர் இல்லாத லா லிகா அமைப்பே பிஎஸ்ஜி அணிக்கெதிராக புகார் கொடுக்கும் அளவுக்கு இந்த விஷயம் வெடித்தது. ஒருவழியாக அப்போது வேறு எந்த சிக்கலும் ஏற்படாமல் தப்பித்தது பிஎஸ்ஜி.

Kylian Mbappe

அதன்பிறகு சில ஆண்டுகள் எப்படியோ அவர் பிஎஸ்ஜி அணியில் நீடித்திருந்தாலும், எம்பாப்பே மீதான ரியல் மாட்ரிட்டின் மோகமோ, ரியல் மாட்ரிட்டில் இணைய வேண்டும் என்ற எம்பாப்பேவின் லட்சியமோ மாறவில்லை. அது தொடர்ந்துகொண்டே இருக்க, கடந்த மாதம் தான் பிஎஸ்ஜி ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்று அறிவித்தார் எம்பாப்பே. இந்த சீசன் முடிவடைந்திருந்த நிலையில், நேற்று எம்பாப்பே தங்கள் அணியில் இணைந்ததாக ரியல் மாட்ரிட் அணி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த டிரான்ஸ்ஃபர் மூலம் பிஎஸ்ஜி அணியின் மதிப்பு பெருமளவு குறையும். பல நட்சத்திர வீரர்கள் இருந்துமே சாம்பியன்ஸ் லீக் வெல்ல முடியாத அந்த அணி, இப்போது முற்றிலும் வேறு திசையில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதுபோக, ரியல் மாட்ரிட் அணியோ ஐரோப்பாவில் அடுத்த சில காலம் கோலோச்ச முடியும். இந்த சீசனே லா லிக, சாம்பியன்ஸ் லீக் போன்ற தொடர்களை வென்று அசத்தியிருக்கிறது அந்த அணி. போக, வினிஷியஸ் ஜூனியர், ராட்ரிகோ, சுவாமெனி, கமாவிங்கா, வால்வெர்டே போன்ற இளம் ஸ்டார்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்களெல்லாம் சேரும்போது நிச்சயம் அந்த அணியை எதிர்கொள்வது எளிதாக இருக்காது. பெரும் ஆதிக்கம் செலுத்தப்போகும் ஒரு காலகட்டத்துக்கு ரியல் மாட்ரிட் தயாராகிக்கொண்டிருக்கிறது.