திருமணமான நூறாவது நாளை கொண்டாடிய புது தம்பதி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்கட்டமாக வந்த தகவல் மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டார்கள் என்றது. அதை கேட்டவர்கள் பலரும் பதறிவிட்டார்கள். இரவு என்பதால் உயிரிழப்பு குறித்த அச்சம் அதிகமாகவே இருந்தது. நேற்றிரவு முதலில் காட்டுத் தீயில் சிக்கியவர்களின் படங்கள் வெளியாகின. அந்தப் படங்கள் பார்ப்பவர்கள் நெஞ்சை பதறவைத்தது. தீ விபத்து நடந்த இடத்திற்கு முதலில் சென்ற 108 வாகன ஓட்டுநர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் இதயம் வெடிக்கும் அளவிற்கு இருந்தன. தீயில் கருகிய நிலையில், அரை நிர்வாணத்துடன் அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள்.
தீடிரென காட்டுத்தீ ஏற்பட்டதால் பதறி அடித்துக் கொண்டு திசை தெரியாமல் ஓடியதாக அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் கூறினார்கள். உயிருக்கு பயந்து பாறைகளுக்கு கீழே சிலர் குதித்து தப்பிக்க முயற்சித்ததாக கூறினர். ஆனால், அப்படி தப்பிக்க பாறைக்குள் குதித்தவர்கள்தான் தீயில் கருகி உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் விவேக். உயிரிழக்கும் தருவாயில் அவர் பேசிய வீடியோ பதிவுகள் வெளியாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் பற்றி பின்னர் வெளியான தகவல்கள் எல்லோரது கண்களையும் கலங்க வைத்துவிட்டது. துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விவேக்கிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி 4 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில், திருமணமான நூறாவது நாளை கொண்டாட வீட்டிற்கு வந்துள்ளார். கூடவே தனது மனைவியே தன்னுடன் துபாய்க்கு அழைத்துச் செல்லும் திட்டத்துடனும் இருந்துள்ளார். மார்ச் 3 ஆம் தேதி தனது மனைவி உடன் நூறாவது நாளை கொண்டாடிய அவர், தன்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணத்தை கொண்டாட மனைவியுடன் ட்ரெக்கிங் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ட்ரெக்கிங் போவது குறித்து தனது முகநூலில் ஏற்கனவே தகவலை பதிவிட்டிருக்கிறார்.
புது மனைவியுடன் மகிழ்ச்சியாக ஒரு சுற்றுலா போல் ட்ரெக்கிங் செய்து கொண்டிருந்த போதுதான், காட்டுத்தீ அவர்களது எல்லா வருங்கால கனவுகளையும் சேர்த்தே எரித்துவிட்டது. தங்களை சுற்றிலும் காட்டுத்தீ வேகமாக நெருங்கி வருவதை கண்டு நிச்சயம் இருவரும் பதறியிருப்பார்கள். காட்டுத்தீ விவேக்கின் உயிரை பறித்துக் கொண்டு சென்றுவிட்டது. மனைவி திவ்யாவும் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய திவ்யா, எத்தனையோ கனவுகளுடன், விவேக்கை கரம் பிடித்திருப்பார். ஆனால், ஒரே ஒரு டிரெக்கிங் எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது.
இந்நிலையில் இந்தத் தீ விபத்துக் குறித்து விவேக்கின் நண்பர் கணேஷை தொடர்பு கொண்டு பேசினேன். கடுமையான சூழலில் இருந்த அவர் நம்முடன் பேசினார். “நவம்பர் மாதம் ஃபர்ஸ்ட் வீக்தான் விவேக்கிற்கு திருமணம் நடந்தது. அவரது மனைவியை கூடவே துபாய்க்கு அழைத்து போகவே அவர் இந்தியா வந்திருந்தார். அதற்கு முன் அவரது 100வது திருமண நாளை கொண்டாடினார். பிறகு கொழுகுமலை போனார். அப்போதுதான் தீயில் சிக்கியிருக்கிறார். இந்தச் செய்தியை இன்றைக்குக் காலையில்தான் டிவியில் பார்த்து தெரிந்துக் கொண்டோம். மனம் பதறிவிட்டது. நினைக்கவே பரிதாக உள்ளது” என்றார். கனேஷ் ஈரோட்டில் உள்ளார். கணேஷின் மனைவியும் விவேக்கின் மனைவியும் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள் என்பது கூடுதல் செய்தி.