சிறப்புக் களம்

கொங்குநாடு சர்ச்சை: அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ள தயங்குவது ஏன்? - ஒரு பார்வை

கொங்குநாடு சர்ச்சை: அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ள தயங்குவது ஏன்? - ஒரு பார்வை

Veeramani

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டில் ‘கொங்குநாடு’ குறித்த சர்ச்சை புகைச்சலை உருவாக்கியிருக்கிறது. கொங்குநாடு கருத்துக்கு திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, ‘தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் தற்போது பாதுகாப்பான ஆட்சியின் கீழ் உள்ளது இதனால் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்தார்.  திமுகவின் முக்கிய தலைவர்களும், கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சியின் தலைவர்களும் தமிழகத்தை பிரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பேசிவருகின்றனர்.

பாமக ஏற்கனவே அவ்வப்போது ‘வட தமிழ்நாடு’ கோரிக்கையை முன்வைத்து வருவதால் ‘கொங்குநாடு’ பற்றி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த சூழலில்தான் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இந்த சர்ச்சை குறித்து அழுத்தமான கருத்தை பதிவுசெய்ய தயங்குவதும் சர்ச்சையாகியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் இந்த சர்ச்சை வெடித்த சூழலில் அதிமுகவின் முக்கிய தலைவரான முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது” என்று பட்டும் படாமலும் பதிலளித்தார். அதனைப்போலவே அதிமுகவின் முக்கிய தலைவர்களின் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ கொங்கு நாடு கோரிக்கையை கருத்து சுதந்திரமாக பார்க்கிறோம்” என சொல்லி அதிர்ச்சியளித்தார். அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ இந்த சர்ச்சை பற்றி பேசியபோது, “ நாங்கள் தற்போது ஆட்சியில் இல்லை கொங்குநாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. எனவே அதை தெரிவித்திருந்தவர்கள் தான் கருத்து கூற வேண்டும்” என தெரிவித்தார்.

கொங்குநாடு குறித்த சர்ச்சைக்கு அதிமுக தலைவர்களின் இதுபோன்ற மேம்போக்கான பதில்கள், தமிழ்நாடு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாகவே கொங்குநாடு சர்ச்சை முன்வைக்கப்படுவதாகவும், அந்த சர்ச்சைக்கு தூபம் போடும் வகையில் அதிமுக மவுனமாக உள்ளதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தின் பிரதான கட்சியாகவும், தமிழகத்தை பலமுறை ஆண்ட கட்சியாகவும் உள்ள அதிமுகவின் இந்தமவுனம் உண்மையில் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. தமிழகம் முழுமைக்கும் முழுமையான கட்டமைப்பு கொண்ட கட்சியாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளது. இந்த சூழலில் மாநிலத்தின் ஒருபகுதியை பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை திமுக வலுவாக எதிர்க்கும் நிலையில், அதிமுகவின் ‘மேம்போக்கான’ அணுகுமுறை அந்த கட்சியின் எதிர்காலத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த சூழலில்தான் நேற்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கொங்குநாடு கோரிக்கை குறித்து மிகவும் அழுத்தமான எதிர்ப்பினை பதிவு செய்தார். அதில், “  தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.” என தெரிவித்திருந்தார்

கொங்குநாடு சர்ச்சை குறித்த அதிமுகவின் மவுனம் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில் இன்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதன்முறையாக கொங்குநாடு கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். "கொங்குநாடு தனி மாநிலம் என்பது விஷமத்தனமான சிந்தனை. யாரையோ சிறுமைப்படுத்த முன்வைக்கப்பட்ட விஷமத்தனமான சிந்தனை நாட்டுக்கு நல்லதல்ல. கொங்குநாடு தனி மாநிலம் என யார் முன்னிறுத்தினரோ அவர்களே அவ்வார்த்தை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நாடு வளமாக இருப்பதே முக்கியம். சிறுசிறு மாநிலங்களாக பிரிந்தால் நாட்டின் பலம் குறையும். சென்னை முதல் குமரி வரை உள்ள மக்கள் இது தமிழ்நாடு என்ற ஒரே சிந்தனையோடு உள்ளனர், மக்கள் மனதில் தேவையற்ற விதைகளை விதைப்பதை தவிர்க்க வேண்டும்" என தெரிவித்தார்

இருப்பினும், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தினம்தோறும் போட்டிபோட்டுக்கொண்டு ட்விட்டரில் அறிக்கை வெளியிடும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதுவரை கொங்குநாடு சர்ச்சை குறித்து எந்த கருத்தும் சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.