ஒரு மனிதனுக்கு உயிர்வாழ உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியமானதாகவும் இருப்பது அவசியம். இது அன்றாடம் தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், ஹார்மோன்கள், சருமம் மற்றும் முடி போன்வற்றின் ஆரோக்கியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது போலவே, சருமத்தின் தன்மைக்கு ஏற்ப உணவுமுறை மற்றும் டயட்டையும் பின்பற்ற வேண்டும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ப ஒருசில உணவுகளை அதிகம் சேர்த்துக்கொண்டு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பொதுவான சருமத்தை 4 வகைகளாக பிரிக்கின்றனர்.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற உணவு மற்றும் டயட் எது?
1. வறண்ட சருமம்
சருமம் நீரேற்றமின்றி இருக்கும்போது அது வறண்டு காணப்படும். எனவே தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். அதேசமயத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தும் நீர்ச்சத்து உடலுக்கு கிடைக்கிறது. தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆப்பிள், தக்காளி போன்றவை நீர்ச்சத்து மிகுந்தவை.
நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள் சருமத்தை ஈரப்பதத்துடனும், மிருதுவாகவும் வைக்கும். அவகேடோ, சால்மன் மீன், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவையும் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியவை. இந்த உணவுகளுடன் முடிந்தவரை நீராகாரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆல்கஹால் மற்றும் காபியை அதிகளவு எடுத்துக்கொள்வது சருமத்தை வறட்சியடைய செய்யும். அதேபோல், புகைப்பிடித்தலும் சருமத்தை பாதிக்கும்.
2. எண்ணெய் சருமம்
அதிகம் எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை எடுத்துக்கொண்டால் சருமத்தில் எண்ணெய்ப்பசை அதிகமாக இருக்கும் என்ற தவறான புரிதல் பெரும்பாலானோரிடையே பரவுகிறது. ஆனால் அழற்சி எதிர்ப்புடைய ஆரோக்கியமான எண்ணெய்கள் உண்மையில் அதை குறைக்க முடியும். அவகேடோ, ஆலிவ் எண்ணெய், மீன், ஃப்ளாக்ஸ் விதை போன்ற நல்ல கொழுப்பு உணவுகள் எண்ணெய்ப்பசையை அதிகரிக்காது. இருப்பினும், கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சிவப்பு இறைச்சிக்கு சிக்கன் அல்லது மீன் போன்றவற்றையும், பதிலாக பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக முழு தானியங்களையும் தேர்ந்தெடுக்கலாம். இப்படி சாப்பிடுவது செபம் உற்பத்தி மற்றும் அடைபட்ட துளைகளை எதிர்த்துப் போராடுகிறது. இனிப்பு கலந்த உணவுகளை தவிர்த்து அதற்கு பதிலாக பழங்கள் போன்ற இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள உணவுகளை தேர்ந்தெடுப்பது மற்றொரு சிறந்தவழி.
3. இயல்பான சருமம்
இயல்பான சருமம் இருப்பவர்கள் கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், சில உணவுகளால் முகப்பரு, சரும சோர்வு மற்றும் பிற சரும பிரச்னைகள் வரலாம். இது அனைத்துவகை சருமத்தினருக்கும் பொருந்தும். எனவே என்ன மாதிரியான உணவுகளை உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது உட்புற ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் உதவும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற நல்ல கொழுப்புகளை சேர்ப்பது இயல்பான சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமற்ற, நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் சருமத்திற்கு ஏற்றதல்ல. போதுமான அளவு நீர் குடித்தல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுதல் மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. காம்பினேஷன் சருமம்
வறண்ட மற்றும் எண்ணெய்ப்பசை சருமத்திற்கு முதலில் எந்த மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அனைத்துவகையான கர்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னென்ன மாதிரியான தானியங்கள் மற்றும் பிரெட்களை தேர்ந்தெடுப்பது என்பதை தெரிந்துகொண்டு அவற்றை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட்டுகள் காம்பினேஷன் சருமத்தின் மென்மைத்தன்மையை பாதித்து அழற்சியை ஏற்படுத்தலாம். எனவே க்ளைசெமிக் குறைவான, புரதச்சத்து அதிகமான கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணலாம். அவற்றில் முக்கியமாக முழு தானியங்கள் மற்றும் சிவப்பரிசி போன்றவை ஊட்டச்சத்து மிகுந்தவையும்கூட.
உட்புற ஆரோக்கியமே சருமத்தில் வெளிப்படும். அதாவது நாம் எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் கடைபிடிக்கும் டயட்முறை போன்றவையே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. சரும ஆரோக்கியத்தை முறையாக கடைபிடிக்க நினைப்பவர்கள் உணவுதவிர தூக்கம், மன அமைதி போன்ற பிறவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம்.