“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கார்ல் மார்க்ஸின் காலமென்பது (1818 - 83) உழைக்கும் பாட்டாளிகள் வர்க்கமானது, முதலாளி வர்க்கத்தால் தொடர்சியாக சுரண்டப்பட்டுக்கொண்டே இருந்த ஓர் இருண்ட காலம். இது தற்போது வரை இருக்கிறதென்பதை தாண்டி, அந்த காலகட்டத்தில் உழைப்பாளி உயிர் வாழ்வதற்காக மட்டுமே அவர்களுக்கு சொற்ப பணம் கூலியாக வழங்கப்பட்டு, அந்த சொற்ப கூலிக்கும் ‘பிரதிபலன்’ என்ற பெயரில் அதிகப்படியான உழைப்பு பலியாக திரும்பப்பெறப்பட்டு வந்தது. இவ்வாறு சுரண்டப்பட்டு சுரண்டப்பட்டு... தொழிலாளிகள் எலும்பும் தோலுமாக உருமாறி இருந்தனர்.
பெருவாரியான உழைப்பாளிகள் தங்களின் வாழ்க்கையை முதலாளிகளின் வர்க்கத்திற்காகவே தொலைத்திருந்தார்கள். சோகம் என்னவெனில், அவர்கள் தொலைத்தது அவர்களுக்கே தெரியவில்லை. ஒரு உழைக்கும் குடும்பத்தில் மகன் பிறந்தால், ‘நமக்கு இன்னுமொரு உழைப்பாளி கிடைத்துவிட்டான்’ என்ற நினைக்கும் அளவுக்கான நிலை இருந்துள்ளது.
“கூட்டி கழித்துப்பாரு கணக்கு சரியா வரும்” என்று கூறி தொழிலாளர்களை வஞ்சித்து வந்த முதலாளி வர்கத்தின் தப்பான ஒரு கணக்கை, அங்கிருந்த ஒரு புத்திசாலி மாணவன் கண்டுபிடிக்க முனைந்தான். அதற்காக உழைப்பாளிகளின் உலக வரலாற்றை ஆய்வு செய்யத்தொடங்கினான் அந்த மாணவன். ‘உலகம் தோன்றிய காலம் முதல் இப்பொழுது வரையிலான அனைத்து மாற்றங்களுக்கும் மனிதனின் உழைப்பே காரணமாக இருக்கிறது’ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் காட்டினான் அம்மாணவன்.
இதை அறிந்த உழைப்பாளிகள், விழித்துக்கொள்ள ஆரம்பித்தனர். ‘உழைப்பினால் கிடைத்த லாபத்தை தொழிலாளர்களுடன் முதலாளிகள் சமமாக பங்கிட்டுக்கொள்ளும் வரை பேதங்கள் ஏதும் இல்லை. அதுபோக மீதம் இருந்த உபரி பணமானது மீண்டும் மூலதனமாக மட்டுமே ஆக்கப்படும்போதுதான், அங்கு முதலாளிகளின் வர்க்கங்கள் உருவாகின்றன’ என்று கூறி ஒட்டுமொத்த முதலாளித்துவ அதிகார வரலாற்றின் முடிச்சுக்களை அவிழ்த்தார் அந்த மாணவர்.
அவர்தான், மாமேதை கார்ல்மார்க்ஸ்.
“விதைத்தவர் உறங்கலாம், விதைகள் என்றும் உறங்குவதில்லை” - கார்ல் மார்க்ஸ்
ஆம் அவர் விதைத்த கம்யூனிசம் என்ற விதை தான் இன்று உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது.
1818 ம் ஆண்டு மே 5ம் தேதி, ஜெர்மனியில் பிறந்தவர் கார்ல் மார்க்ஸ். இவரது தந்தை ஐன்றிச் மார்க்ஸ், ஒரு வழக்கறிஞர். பெற்றோருக்கு மத நம்பிக்கை அதிகம் இருந்தாலும், கார்ல் மார்க்ஸுக்கு மதங்களின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மாறாக இமானுவேல் காந்த், வோட்டர் ஆகிய தத்துவவாதிகளின் தத்துவங்களில் ஈர்க்கப்பட்டார்.
“உலகத்தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள். இழப்பதற்கு அடிமைசங்கிலியை தவிர உங்களிடம் ஏதும் இல்லை”- கார்ல் மார்க்ஸ்
தனது 17 ம் வயதில் பான் பல்கழைக்கலகத்தில் சட்டம் பயின்றார் கார்ல் மார்க்ஸ். அப்பொழுதே பொதுவுடைமை கொள்கையுடன் இருந்த மார்க்ஸ், சோஷலிச துண்டறிக்கை வெளியிட்டதைக் கண்டித்து, பல்கழைக்கழகம் அவரை வெளியேற்றியது. அதன்பின் 1841 ல் தனது பட்டப்படிப்பை பெர்லின் பல்கழைக்கழகத்தில் முடித்தார் மார்க்ஸ்.
ஷேக்ஸ்பியர், கதே என்ற என்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்தில் சிறுவயதிலிருந்தே அதீத ஆர்வம் கொண்டிருந்தார் கார்ல் மார்க்ஸ். தனது சிறு வயது தோழியான செனிவான் வெசுட்பலெனை (ஜென்னி) பல இன்னல்களை கடந்து 1843ல் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவரது அரசியல் சாணக்கியதனத்தைக் கண்ட ஜெர்மனி அரசு 1844-ல் இவரை லண்டனுக்கு நாடு கடத்தியது.
அங்கு ஜெர்மனிய தத்துவளாளரான பிரெட்ரிக் எங்கெல்சுடன் இவருக்கு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் இணைந்து உலக தொழிளாளர்களின் வர்க்கத்தை மாபெரும் சக்தியாக மாற்றும் நோக்கத்தோடு ‘பிரிட்டானிய அருங்காட்சியக நூலக’த்தில் ஆய்வுகளை மேற்கொண்டு மார்க்சியத்தை (கம்யூனிசம்) தோற்றுவித்தார்கள்.
1841ல் பட்டம் பெற்ற மார்க்ஸ், சில காலம் இதழியல் துறையில் இருந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, கொலோன் நகரில் இரைனிசு சைத்துங்கு என்னும் இதழின் ஆசிரியராக சில காலம் பணியாற்றினார்.
“உங்களிடம் அறிவொளி இருந்தால் காட்டுங்கள். அந்த தீபத்தில் மற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏத்திக்கொள்ளட்டும்”- கார்ல் மார்க்ஸ்
1844ல் பிரெடரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட்டாளிகள் (தொழிலாளிகள்) எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகளின் வழியே கூறினார் மார்க்ஸ். 1850-க்குப் பின் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் போராடினார் மார்க்ஸ். கடனாளியாக மாறிய போதும், தொழிலாளர் நலனுக்காக போராடிக்கொண்டே இருந்தார் மார்க்ஸ். அத்தனை நேரத்திலும் அவருக்கு உறுதுணையாக இருந்துவந்தார் அவரின் காதல் மனைவி ஜென்னி! இவர்களின் காதல் வாழ்க்கையே ஒரு தனிக்கதை!
”பாட்டாளிகளின் அடக்குமுறையை தகர்த்தெரிய அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்று அவரின் எழுத்துகள் தொழிளாளர்களிடையே உத்வேகத்தை தந்தது. ஆனால் அதே எழுத்துக்கள் அரசாங்கத்தை அச்சுறுத்தியது. இவரின் எழுத்தையும், சிந்தனையையும் கண்ட புரஸ்ய அரசு அவரை நாடு கடத்தியது. பிரான்ஸ் அரசோ அவரை ஒரு நாள் அவகாசத்தில் நாட்டை விட்டு வெளியேறி விட நிர்ப்பந்தித்தது. இப்படி பல இன்னல்கள் அவரை சூழ்ந்துக்கொண்டன.
வீட்டுப்பொருளாதாரமே நன்கு இல்லாத அந்த நேரத்திலும், உலக பொருளாதாரத்தை சிந்தித்தது அது தொடர்பாக கட்டுரைகள் பல எழுதி வந்தார் கார்ல் மார்க்ஸ்.1867ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அன்று, மார்க்ஸ் தனது 15 ஆண்டு எழுத்துப் போராட்ட வடிவத்தை கேப்பிட்டல் (மூலதனம்) என்ற புத்தகமாக வெளியிட்டார். இப்புத்தகம் மக்களிடையே பெரிய அதிர்வலைவுகளை ஏற்படுத்தியது. இப்புத்தகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகமானது அவரின் இறப்பிற்குப் பின் வெளிவந்தன.
“யானையின் பலமானது யானைக்குத்தெரியாது பாகனுக்கு தான் தெரியும் அதே போல் தொழிலாளியின் பலமானது அவனுக்கு தெரியாதயாதலால் தான் அவன் முதலாளியை தெய்வமாக வணங்குகிறான்”- கார்ல் மார்க்ஸ்
இன்றும்கூட தொழிலாளரின் நலனென்றால் கார்ல் மார்க்ஸின் கொள்கைகளும் சித்தாந்தங்களுமே முன்வந்தது நிற்கும்! அதனாலேயே மாமேதை மார்க்ஸ் ‘ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர்’ என அறியப்படுகிறார் என்றால் அது மிகையாகாது.