சிறப்புக் களம்

அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? - காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? - காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

Sinekadhara

சரியாக மூச்சுவிட முடியாத நிலையை மூச்சுத்திணறல் என்கிறோம். படிக்கெட்டுகளில் ஏறும்போதும், கனமாக பொருட்களை தூக்கும்போதும் இதுபோன்று மூச்சுவிடுவதில் சிரமம் பலருக்கும் இருக்கும். ஆனால், சிலருக்கு இதன் அறிகுறிகள் மிகவும் மோசமானதாக இருக்கும். அது இதயம் அல்லது நுரையீரல் பிரச்னைகளின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். அடிக்கடி மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

மூச்சுத்திணறல் பிரச்னைக்கான காரணங்கள்:

அலர்ஜி முதல் இதய நோய்கள் வரை பல்வேறு பிரச்னைகள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம். சில அதீத உடல்நலக்குறைபாடுகளின் விளைவாகவும் இருக்கலாம்.

1. ஆஸ்துமா: மூச்சுப்பாதையில் வீக்கம் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதை ஆஸ்துமா என்கின்றனர். இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதுடன், மூச்சுத்திணறலுக்கும் வழிவகுக்கும். ஆஸ்துமா அதிகமாகும்போது அது தினசரி வாழ்க்கைமுறைக்கு தடையாக அமைவதுடன், இதே நிலை தொடரும்போது அது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. எனினும், ஆஸ்துமா பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பது இல்லை. அறிகுறிகளை மட்டுமே மருந்துகள், உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

2. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்: இதனை COPD (Chronic obstructive pulmonary disease) என்றும் அழைக்கின்றனர். இந்த நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோயானது நுரையீரலுக்கு காற்று செல்லுதல் மற்றும் வெளியேறுதல் போன்றவற்றுக்கு தடையாக அமைகிறது. மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் (wheezing), இருமல் போன்றவை இந்த பிரச்னையின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இது குறிப்பிட்ட செயல் மற்றும் எரிச்சலுண்டாக்கும் வாயு ஆகியவற்றை நீண்ட நாட்கள் சுவாசிக்க நேரிடும்போது இந்த பிரச்னை ஏற்படுகிறது. மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு COPD பிரச்னை வரும் வாய்ப்புகள் மிகமிக அதிகம்.

3. கொரோனா: தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று மூச்சுத்திணறல். இதனை தவிர்ப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்.

4. நிமோனியா: நுரையீரலிலுள்ள மூச்சுப்பைகளில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொற்று இது. காற்றுப்பைகளில் திரவம் அல்லது சீழ் அடைப்பதால் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளால் நிமோனியா தொற்று ஏற்படலாம். ஆரம்பத்தில் தொற்று அறிகுறிகள் குறைவாக இருக்கும். ஆனால் சிகிச்சை எடுக்காமல் விட்டால் அதுவே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

5. இதயம் செயலிழப்பு: இதய தசைகள் ரத்தத்தை சீராக பம்ப் செய்யாதபோது ரத்தம் ஒரே இடத்தில் சேர்ந்து, நுரையீரலில் திரவம் ஒன்றுதிரள்கிறது. இது மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கிறது.

6. மாரடைப்பு: மாரடைப்பின் முதல் அறிகுறி மூச்சுத்திணறல். ரத்த ஓட்டத்தில் அடைப்பு அல்லது தடை ஏற்படும்போது மாரடைப்பு உருவாகிறது. இதயத் தமனிகளில் கொழுப்பு கட்டிகள் சேரும்போது அது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.

7. உடற்பருமன்: உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேரும் நிலை இது. இது இதய நோய்கள் முதல் கேன்சர் வரை பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. உடற்பருமனால் மூச்சுப்பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

இவை மூச்சுத்திணறல் பிரச்னைகளின் முக்கிய காரணிகளாக கருதப்பட்டாலும், இவைதவிர வேறு காரணிகளும் மூச்சுத்திணறல் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம்.