கோடை விடுமுறைக்கு லாங் ட்ரிப் போக முடியாமல் பட்ஜெட் இடிப்பவர்களுக்கு சென்னையிலேயே சுற்றிப் பார்க்க சில இடங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது சென்னை முதலைப் பண்ணை. பெரியவர்களை தாண்டி, இந்த முதலைப் பண்ணை விசிட், வீட்டில் இருக்கும் வாண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் உங்களை தொல்லை செய்யும் வாண்டுகளை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்த முதலைப் பண்ணைக்கு ஒரு அரை நாள் சுற்றுலாவாக கூட்டிச் சென்று வரலாம்.
"புலி இருக்கும் காடு மிகவும் வளமானது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை முதலை இருக்கும் நீர்நிலை மிகவும் தூய்மையானது என்பதும் உண்மையே". அப்படிப்பட்ட முதலைகளை காத்து பராமரித்து வருகிறது Madras Crocodile Bank Trust Centre for Herpetology எனப்படும் சென்னை முதலைப் பண்ணை. சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வடநெமிலியில் அமைந்துள்ள இந்த முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
உலகளவில் 23 வகை முதலைகள் இருக்கின்றன. அதில் 17 வகையான முதலைகள் சென்னைப் பண்ணையில் உள்ளன.
1976 ஆம் ஆண்டு அமெரிக்கரான ரோமுலஸ் விட்டேகரும் அவரது மனைவி சய் விட்டேகரும் இணைந்து இந்தப் பண்ணையை ஆரம்பித்தனர்.
ஆமைகள், பல்லி இனங்கள், பாம்புகள் ஆகியவையும் உள்ளதால் 2003 ஆம் ஆண்டு முதல் இந்தப் பண்ணைக்கு "தி மெட்ராஸ்
க்ரோக்கடைல் பேங்க் டிரஸ்ட் மற்றும் சென்டர் ஃபார் ஹெபர்டாலஜி' எனப் பெயர் வைத்தனர்.
சென்னை முதலைப் பண்ணை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமை வார விடுமுறை.
பெரியவர்களுக்கு ரூ. 60 ரூபாயும், குழந்தைகளுக்கு ரூ.30 ரூபாயும் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
தினசரி இரவு 7 முதல் 8.30 மணி வரை "நைட் சஃபாரி'" என்ற இரவு நேர அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். பெரியவர்களுக்கு ரூ.200, குழந்தைகளுக்கு ரூ.100.
ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் இந்தப் பண்ணையைப் பார்வையிடுகிறார்கள்.
அழியும் நிலையில் உள்ள முதலைகளைக் காப்பாற்றும் ஒரு மரபணு வங்கியாக இந்தப் பண்ணை திகழ்கிறது. ஆரம்பக் காலத்தில் இவ்வாறு அழிவு நிலையில் உள்ள முதலைகளை "அடைப்பிட இனப்பெருக்கம்' மூலம் வளர்த்து, பின் அவற்றைக் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் விட்டுவந்தனர்.
இப்போது காடுகளின் பரப்பளவு குறைந்துவரும் காரணத்தால் முதலைகளை முன்பு போல இயற்கையான வாழிடத்துக்கு அனுப்ப முடிவதில்லை.
முதலைப் பண்ணைக்கு வரும் பார்வையாளர்களுக்கு இங்கிருக்கும் உயிரினங்களைப் பற்றி பொறுமையாக விளக்கம் கொடுக்கப்படுகிறது.
உயிரினங்களைத் தத்தெடுப்பது, ஒரு நாள் விலங்கு காட்சி சாலைப் பொறுப்பாளராக இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது, ஊர்வன பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
உலகின் மிகச் சிறந்த ஊர்வனவியலாளர்கள் பட்டியலைத் தயாரித்தால், அதில் முதன்மை இடங்களில் இடம்பிடித்திருக்கும் பெயர் சென்னையின் ரோமுலஸ் விட்டேகர். இவருக்கு இந்தாண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிறப்பால் அமெரிக்கரான விட்டேகர், ஏழு வயதிலேயே குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர். முதலை, பாம்புகள் ஆகியவை குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.
2005 ஆம் ஆண்டு 'பசுமை ஆஸ்கர்' எனப்படும் மிக உயரிய விருதான 'ஒய்ட்லி' விருதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பெற்றார்.
முக்கர் முதலை, செம்மூக்கு முதலை, கரியால், யாக்கரே கைமன், குட்டை கைமன், அமெரிக்க முதலை, சியாமிய முதலை,நைல் முதலை, கருமுதலை ஆகியவை இந்தப் பண்ணையில் உள்ளன.
பாம்புகளில் கருநாகம், இந்திய மலைப் பாம்பு, ராஜ மலைப்பாம்பு, வெளிறிய இந்திய நாகம், 5 அனகோண்டா ஆகியவை உள்ளன.
இதுதவிர நீர் உடும்புகள் மற்றும் கொமோடோ ராட்சத பல்லி இந்தோனேசியாவில் இருந்து வரவைக்கப்பட்டுள்ளது.
முதலை பற்றி தெரிஞ்சுக்கோங்க!
முதலையின் பார்வை சக்தி கூர்மையானது. சதுப்புநில முதலை 300 அடிக்கு அப்பாலுள்ள இரையைக்கூட கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.
தண்ணீரில் மூழ்கியிருக்கும்போதும் கூட முதலையால் ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். இதன் பிரதான உணவு மீன். தவிர, தவளை, நண்டு வகைகள், ஆமைகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டிகளையும் உண்ணும்.
சதுப்புநில மற்றும் உப்புநீர் முதலைகளால் மான், குரங்கு, நாய், எருமை போன்ற பெரிய மிருகங்களைக் கூட உண்ண முடியும்.
உப்புநீர் முதலை மற்றும் நைல் முதலை மனிதனைத் தின்றதாக செய்திகள் உள்ளன. ஆனால், சதுப்புநில முதலைகள் மனிதனைத் தின்றதாக போதிய ஆதாரம் இல்லை.
முதலைகள் தண்ணீருக்கு அடியில் உள்ள நிலத்தில் முட்டையிடுகின்றன. சதுப்புநில முதலை மண்ணில் குழிதோண்டி முட்டைகளைப் புதைக்கின்றன. உப்புநீர் முதலை இலை மற்றும் மண்ணால் கூடுகட்டி முட்டையிடுகின்றன.
ஒரு முதலைக்கு அதனது வாழ்நாளில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பற்கள் விழுந்து விழுந்து புதியதாக வளரும். காரணம், அடிக்கடி கடிப்பதால் அதன் பற்கள் உடைந்துவிடும்.