சிறப்புக் களம்

வாவா சுரேஷ் எனும் நாகப்பாம்புகளின் நாயகன் : கடிகள்.. காயங்கள் புதிதல்ல-தவறு நடந்தது எங்கே?

வாவா சுரேஷ் எனும் நாகப்பாம்புகளின் நாயகன் : கடிகள்.. காயங்கள் புதிதல்ல-தவறு நடந்தது எங்கே?

கலிலுல்லா

அன்பு நிறைந்த இந்த வாழ்வில் ஜீவித்திருக்க வைப்பதெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கை தான். நம்பிக்கையின் வழிதான் உலகின் வலிகளெல்லாம் கரைந்தொழுகுகின்றன. ஆனால், சமயங்களில் அதீத நம்பிக்கையின் ஆபத்துகள் நம்பிக்கையற்ற சூழலுக்கான அடித்தளத்தை கட்டமைத்துவிடுகின்றன. உண்மையில் நம்பிக்கை என்பது கண்ணாடி குடுவையைப்போல. இறுகிப்பிடித்தால் உடைந்து நொறுங்கிவிடும். லாவகமாக கையாளப்படவேண்டியவை நம்பிக்கைகள். அந்த அதீத நம்பிக்கை அமைத்த கொடுத்த பாதையில் பயணித்த வாவா சுரேஷ் நமக்கு உணர்த்தியதெல்லாம் ஒன்று தான். அது அதீத நம்பிக்கையின் அபாயம்!

அன்று சரியாக மாலை 4.45 மணி அளவில் கேரளாவின் கோட்டயம் செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் வீட்டில் நாகப்பாம்பு புகுந்ததாக வாவா சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டதும் வழக்கப்போல வாவா சுரேஷ் பாம்பு பிடிக்க சாக்குப்பையுடன் அதீத நம்பிக்கையும் எடுத்துக்கொண்டு சென்றார். பாம்பை லாவகமாக பிடித்த அவர் அதனை சாக்குப் பைக்குள் நுழைக்க முயன்றார். ஆனால், அப்போது விநாடியில் பாம்பு கைப்பிடியிலிருந்து நழுவ, அது சுரேஷின் வலது தொடையில் கடித்தது. சில மணிநேரங்களில் அங்கேயே மயக்கமான நிலைக்குச் சென்றவரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

யார் இந்த வாவா சுரேஷ்?

'நான் பாம்பு பிடிக்கவில்லை என்றால், அப்போது நான் உயிரோடு இல்லை என்று அர்த்தம்' என ஒருமுறை கூறியிருந்தார் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டிருப்பதைத்தாண்டி, விரும்பித்தான் ஏற்றிருக்கிறார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். 'பாம்பு பிடி மன்னன்' என அடைமொழிக்குசொந்தக்காரரான இவர், ராஜ நாகங்களை பிடிப்பதில் வல்லவர். அக்கம் பக்கம் எங்கு பாம்பு நுழைந்தாலும் உடனே போகும் முதல் கால் வாவா சுரேஷூக்குத்தான். இதன்காரணமாக அரசு வேலை ஒன்று வாவா சுரேஷூக்கு தேடி வந்தது. பாம்பு பண்ணையில் வேலை பார்க்க அரசு அழைத்தது. இதனை மறுத்த அவர், ' பாம்புகளை பிடித்து அவற்றை வனப்பகுதியில் விடும் பணியில்தான் எனக்கு மன நிம்மதி இருக்கிறது' என்றார்.

சுரேஷை பாம்பு பதம் பார்ப்பது இது முதல் தடவையல்ல. பாம்புக்கும் அவருக்குமான பந்தம் ஆண்டாண்டுகளுக்கானது. இப்போது வீடியோ வைரலானதால் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார் சுரேஷ். இப்படித்தான் கடந்த 2020ம் ஆண்டு பாம்பு ஒன்று தீண்டி பல நாட்கள் படுத்த படுக்கையாக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் அதே சூழல் திரும்பியுள்ளது.

அதேசமயம் வாவா சுரேஷை சுற்றி குற்றச்சாட்டுகளும் இருக்கத்தான் செய்கின்றன. முறையான பயிற்சி இல்லாமல் பாம்பை பிடிப்பது ஆபத்தானது. அந்த வீடியோ காட்சியில் பாம்பை பிடிக்கும்போது வாவாசுரேஷ் காட்டிய அலட்சியம் தவறானது. சட்டத்திற்கு எதிரான அவரது செயல்பாடுகளுக்கு வனத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே தற்போது, கோமாவிலிருந்து வாவா சுரேஷ் மீண்டு வந்துள்ளார். மயக்க நிலையில் இருந்து, 'கடவுளே' என்று கூறியபடிய கண்விழித்த அவரிடம் கோட்டயம் மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவர் ஜெயக்குமார் வாவா சுரேஷ் பேசினார்.

அவரின் பெயர் குறித்து கேள்விகேட்ட போது, 'நான் சுரேஷ், வாவா சுரேஷ்' என்று பதில் கொடுத்துள்ளார். மேலும், "இந்தப் பதில் அவரின் உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவர்களுக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும். எங்கள் கேள்விக்கு வாவா சுரேஷ் தெளிவாகப் பதில் கொடுத்திருப்பது மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதின் அறிகுறி. படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்து திரவ ஆகாரம் சாப்பிட்டார்" என மருத்துவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாம்புக்கடியால் நிகழும் உயிரிழப்புகள்:

உலகளவில் 2,900-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த வருடம் 2 புதிய வகை பாம்புகள் கண்டறியப்பட்டதோடு சேர்த்து நூறு வகையான பாம்பு இனங்கள் தற்போது வரை தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகைகளில் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டைவிரியன் ஆகிய நான்கு வகை மட்டுமே அதீத விஷமுள்ளவை. மற்ற வகை பாம்புகள் உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை அல்ல.

விஷமற்ற பாம்புகளாக சாரைப்பாம்பு, நீர்சாரை, மலைப்பாம்பு வகைகள், வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு ஆகியவை அறியப்படுகின்றன.

உலக அளவில் ஓராண்டில் பாம்பு கடியால் உயிரிழப்போர் எண்ணிக்கை 81 ஆயிரம் முதல் 1,38,000 ஆயிரம் வரை உள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பாம்பு கடியால் வருடத்திற்கு சுமார் நான்கு லட்சம் பேர் நிரந்தரமாக மாற்றுத்திறனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது. இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில்தான் பாம்பு கடி இறப்புகள் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதிலும் பாம்பு கடிக்கு பலியாகும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரில் சுமார் 50 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல ஆண்டுகளாக பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து வருகிறது. 2030 ஆண்டுகளில் இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2001 முதல் 2014 வரையிலான தரவுகளின் ஆய்வின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சத்து 11 ஆயிரத்து 483 பாம்பு - மனித மோதல்களில் 2 ஆயிரத்து 833 பேர் இறந்துள்ளனர். அதுவே 2000மாவது ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட பாம்பு கடி சம்பவங்களின் ஆய்வுப்படி, பாம்புக்கடி இறப்பு விகிதம் வேகமாக அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.