சிறப்புக் களம்

கேரள உள்ளாட்சி தேர்தலும், ஐந்து இளம்வயது பெண் தலைவிகளும்!

கேரள உள்ளாட்சி தேர்தலும், ஐந்து இளம்வயது பெண் தலைவிகளும்!

Veeramani

நாடே விழி உயர்த்தி ஆச்சர்யம் கலந்து உற்றுநோக்கும் அளவிற்கு வயதில் மிகக் குறைவான இளம் பெண்களை உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாக்கி அழகுபார்த்திருக்கிறது கேரளா. அதிலும் நாம் தலைவரா என்று தன்னையே கிள்ளிப்பார்க்கும் நிலைக்கு தள்ளிய அதிசயங்களும் நிகழ்ந்திருக்கிறது.

கேரளாவில் கடந்த டிசம்பர் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. டிசம்பர் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தபோது உள்ளாட்சி அமைப்பின் வார்டுகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களின், கனவில் கூட நினைத்து பார்த்திருக்க முடியாத ஆச்சர்யங்களை உருவாக்கியிருக்கிறது இந்த உள்ளாட்சி அமைப்பு தலைவர் தேர்தல்கள்.

முதலில் உள்ளாட்சி அமைப்பின் மிகப்பெரிய அமைப்பான மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால், அதில் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நாட்டிலேயே மிகக்குறைந்த இளம் வயது பெண் மேயர் என்ற வரலாற்று முத்திரையை கேரளா தக்க வைத்துக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து, பத்தனம்திட்டா மாவட்டம் அருவாபுலம் ஊராட்சி தலைவியாக 21 வயது நிரம்பிய ரேஷ்மா மரியம் ராய் பொறுப்பேற்றிருக்கிறார். மாநிலத்திலேயே ஊராட்சிகளில் மிகக்குறைந்த வயதுடைய ஊராட்சி தலைவி என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது. காரணம், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளுக்கு முதல் நாள் தான் அவருக்கு 21 வயது பூர்த்தியாக, மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்து மாநிலத்திலேயே வயது குறைந்த முதல் வேட்பாளர், வெற்றியை தொடர்ந்து முதல் இளம் வயது கவுன்சிலர் எனற சாதனைகளோடு, இப்போது மாநிலத்திலேயே முதல் வயது குறைந்த ஊராட்சி தலைவி என்ற பெருமையையும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக பாலக்காடு கோழிக்கோடு மாவட்டம் ஓலவன்னா ஊராட்சியின் தலைவியாக பதவியேற்ற சருதியை குறிப்பிட வேண்டும். 22 வயது நிரம்பிய அவர் கோழிக்கோடு சட்டக்கல்லூரி மாணவி. ஊராட்சி தலைவியாக பொறுப்பேற்பதற்கு ஒரு நாள் முன்பு தான் சட்டப்படிப்பிற்கான தேர்வையே அவர் எழுதியிருக்கிறார். தேர்தல் பரப்புரையில் தனது இருசக்கர வாகன ஓட்டும் சுவரொட்டிகளை ஒட்டி வாக்காளர்களைக் கவர்ந்தவர்.

இளம் வயது உள்ளாட்சி அமைப்புத் தலைவிகளின் பட்டியலில் பாலக்காடு மாவட்டம் மலம்புழா ஊராட்சியின் தலைவியாக பதவியேற்றுள்ள 23 வயது ராதிகா மாதவனும் இடம்பிடிக்கிறார். மலையாளத்தில் முதுகலை பட்டதாரியான இவர், பாலக்காடு அனக்கல்லு ஆதிவாசியின பள்ளியின் ஆசிரியை.

இந்த வரிசையில் அனாஸ் ரோஸ்னா ஸ்டெஃபியும் அணி சேர்கிறார். 23 வயது நிரம்பிய ஸ்டெஃபி, தொலை தூர கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் பெண்களுக்கான வார்டில் அல்லாமல் பொது வார்டில் போட்டியிட்டு ஆண்களையும் தோற்கடித்தவர். தற்போது வயநாடு மாவட்டம் பொழுதனா ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வாறாக கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு ஊராட்சிகளின் தலைவிகளாக, ஒரு பெரிய மாநகராட்சியின் தலைவியாக 24 வயதிற்கும் கீழ் உள்ள திருமணமாகாத படித்த பட்டதாரி இளம் மங்கைகள் பொறுப்பேற்று அசத்தியுள்ளனர். இவர்கள் ஐந்து பேருமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தான் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம்.

இந்த இளம் மங்கைகள் ஐவருமே சாதாரண நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள். பள்ளிப்பருவத்திலேயே தங்களை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டவர்கள். கட்சியின் பள்ளிகளில் இயங்கும் மாணவ அமைப்பு துவங்கி, கல்லூரிகளில் கட்சியின் இந்திய மாணவர் சங்கம், அனைந்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டு கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டியவர்கள்.

அதனால் தான் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்குப்பின் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கான இந்த இளம் மங்கைகளான வேட்பாளர்களை கட்சியின் மாநில செயற்குழு தேர்வு செய்து அறிவித்தது. கட்சி அறிவித்த இந்த இளம் வேட்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவிகளாக தேர்வானதை விட, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற முதிர்ந்த, மூத்த உறுப்பினர்களின் எந்த எதிர்ப்பும் இன்றி அவர்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டது தான் இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். இது கட்சியின் கட்டுப்பாட்டிற்கு மிகச் சிறந்த உதாரணமும் கூட.

இத்தனை வயது குறைந்த பெண்கள், இத்தனை பெரிய பதவிகளை சமாளிப்பார்களா என்ற கேள்விக்குறியை முன்னிறுத்தாமல், ஊராட்சிகளில் துவங்கி மாநகராட்சி வரை தலைவியாக்கி அழகு பார்த்துள்ளது ”நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையின் வெளிப்பாடு என்பதையும், புதியவர்களுக்கு அதுவும் படித்தவர்களுக்கு கட்சி வழங்கும் முன்னுரிமை என்பதையும்  மறுப்பதற்கில்லை!