சிறப்புக் களம்

சமூக வலைத்தளத்தில் டைம் பாஸ் பண்ணல! ஆபத்தை தடுத்த இளைஞர்கள்!

சமூக வலைத்தளத்தில் டைம் பாஸ் பண்ணல! ஆபத்தை தடுத்த இளைஞர்கள்!

webteam

குரங்கணி போன்ற மற்றொரு காட்டுத்தீ பாதிப்பு சமூக வலைத்தளத்தின் மூலம் திறண்ட தன்னார்வலர்களால் கேரளாவில் தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9ஆம் தேதி அதிரப்பள்ளி மலைப் பகுதியில் வானம் முழுவதும் சிவப்பு நிறத்தில் ஆனது. மரங்கள் எல்லாம் எரிந்து கரிக்கட்டைகளாக மாறிக்கொண்டிருந்தன. உயரமான புல்கள் எரிந்த போது, அதில் நூற்றுக்கணக்கான பாம்புகளும், ஆமைகளும் கருகி உயிரிழந்தன. மளமளவென பரவிய காட்டுத்தீ பரியாரம் வனப்பகுதியிலும் உள்ள தாவரங்களை எரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தீயை 100 பேர் கொண்ட தன்னார்வ குழு தீவிரமாக போராடி அணைத்துள்ளனர். 

காட்டுத்தீ ஒரே நேரத்தில் பல இடங்களில் பற்றியுள்ளது. இதனை வனத்துறை புகைப்படக்கலைஞர் பாய்ஜூ வாசுதேவ் என்பவர் கண்டுள்ளார். பின்னர் தனது முகநூல் பக்கத்தில் தகவலை பரப்பி, காட்டுத்தீயை அணைக்க உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் மூலமே வன ஆர்வலர்கள் பலர் காட்டுத்தீயை அணைக்க விரைந்துள்ளனர். இந்தத் தகவலை கொன்னாக் குழி வனத்துறை அதிகாரி ராமநாதன் உறுதிசெய்துள்ளார்.

காட்டுத்தீயை அணைக்க வந்த ஆர்வலர்கள் அனைவரும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனத்தின் மூலம் வந்ததாகவும் வனத்துறை கூறியுள்ளது. இதுதொடர்பாக வனப் பாதுகாவலர் ஜமால் பனாம்பத் கூறுகையில், “முகநூலில் காட்டுத்தீ குறித்த பதிவை பார்த்ததும், அதை நாங்கள் பிறருக்கு பகிர்ந்து உதவிக் கோரினோம். அது பலமுறை வாட்சப் மற்றும் சமூக வலைத்தலங்களில் பரப்பப்பட்டது. அதன்மூலம் பல தன்னார்வலர்கள் எங்களை தொடர்புக் கொண்டு உதவி புரிய தயாராக இருக்கிறோம் என்றனர். அதுபோல் பல தொலைபேசி அழைப்புகள் மூலம் தன்னார்வலர்கள் தொடர்பு கொண்டு பேசினர். இதனால் தான் தீயை பரவாமல் தடுக்க முடிந்தது” என்றார்.

இவாறு 80 தன்னாவர்கள் ஒரு குழுவாக குவிந்து காட்டுத்தீயை அணைத்துள்ளனர். இதுதவிர, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 20 பேர், ஒரு குழுவாக மலை மீது ஏறிச்சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்கள் எரிந்து கொண்டிருந்த குச்சிகள், மற்றும் புகைந்து கொண்டிருந்த புற்களை அப்புறப்படுத்தியுள்ளனர். அதிகாலை 6 மணியளவில் சென்ற அக்குழு மாலை 4 மணி வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்த தன்னார்வக் குழுவில் 19 வயது முதல் 50 வயது வரை உடைய நபர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சில மாற்றுத்திறனாளிகளும் ஆர்வத்துடன் தீயை அணைக்கு வந்திருந்தனர். ஒரு கையால் மட்டும் போராடிய அவர்கள், 10 மணி நேரமாக தீயை அணைக்கும் வரையில் பணியாற்றினர். இதில் பெரும்பாலான தன்னார்வலர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், ஜமாலின் பச்சை பாதுகாவலர்கள் அமைப்பிலிருந்தும், போட்டோகிராஃபர் பாய்ஜூ வாசுதேவ்வின் இயற்கை பிரியர்கள் மற்றும் நம்ம மரம் போன்ற அமைப்புகளின் மூலம் வந்தவர்கள். இதுதவிர லைட் மேஜிக் என்ற போட்டோகிராஃபி பள்ளியின் மூலமும் சில மாணவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறையினர் ஒருபுறம் கடுமையாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க, மாணவர்கள் மறுபுறம் அணைக்கப்பட்ட இடத்தில் புகைந்து கொண்டிருந்ததை முற்றிலுமாக அணைக்கும் பணியை செய்துள்ளனர். இந்தப் பணிகள் தீ பற்றியதற்கு மறுநாள் காலை 3 மணி வரை நடைபெற்றுள்ளது. மலைகள் மீது ஏறிச்சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் உணவுகள் இல்லாத நிலையிலும், தீயை அணைக்கும் பணிகளில் பெருந்தன்மையாக ஈடுபட்டதாக வனத்துறை அதிகாரி ஜமால் கூறியுள்ளார். 

அவர்களுக்கு அருகாமையில் இருந்த தனியார் உணவங்கள் சில உணவுகளை கொடுத்து உதவியுள்ளது. இருப்பினும் மலை மீது ஏறி தீயை அணைத்துக் கொண்டிருந்தவர்கள் உணவுகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மாலை வரை உணவு உண்ணாமல் பணியாற்றியுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற தண்ணீரை தவிர வேறு எதையும் உண்ணாமல் தீயை அணைக்க போராடியுள்ளனர்.

அதிர்ஷடவசமாக தன்னார்வலர்கள் யாருக்கும் பெரும் தீக்காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீயை அணைக்க வந்த தன்னார்வலர்களிடம் தடுப்பு மருந்துகள், கை உரைகள், கால் பூட்ஸ்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை முன்கூட்டியே வனத்துறையினர் வழங்கியதால், அவர்கள் பாதுகாப்பாக தீயை அணைத்துள்ளனர். அதன்மூலமே சவாலான நிலையை சமாளிக்க முடிந்தது என அதிகாரி ஜமால் கூறியுள்ளார். 

காட்டுத் தீ ஏற்பட்ட வெட்டிலாபரா, பில்லபாரா, கெனல்குன்னு மற்றும் குடகள்ளம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே, மலைப் பகுதிகளில் தான் தீப்பற்றி எரிந்துள்ளதாக வனத்துறை அதிகாரி ராமநாதன் தெரிவித்துள்ளார். கோடைக் காலங்களில் இதுபோன்ற தீவிபத்துகள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், பெரும்பாலான தீவிபத்துகள் மனிதர்கள் மூலமே ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.    

மேலும் “இந்த வருடம் பெரிய அளவு பாதிப்பின்றி காட்டுத் தீ தடுக்கபட்டுள்ளது. ஆனால் இது சரியான முறையல்ல. இந்த முறை தன்னார்வலர்கள் வந்ததால், தீ அணைக்கப்பட்டது. ஆனால் காட்டுத்தீ பரவுவதை அணைக்க ஒரு உடற்தகுதி உடைய குழுவை அரசு அமைக்க வேண்டும். ஏனெனில் தன்னார்வலர்களைக் கொண்டு காட்டுத்தீயை அணைப்பது பாதுகாப்பற்றதாகும். அவர்களுக்கு தீ பரவும் நிலையில், என்ன செய்ய வேண்டும் என தெரிவதில்லை. எனவே இது ஒரு விபரீதமான செயல் தான்.” என்று தெரிவித்தார். 

குரங்கணியில் மலையேற்றம் சென்றவர்களில் 18 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் தாக்கம் மறைவதற்கு தற்போது மேலும் ஒரு காட்டுத்தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளா மற்றும் தமிழக எல்லை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மலையேற்றம் செல்பவர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அத்துமீறி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிக்குள் யாரேனும் நுழைக்கின்றனாரா என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

(தகவல்கள்: தி நியூஸ் மினிட், ஆங்கில இணையதளப் பத்திரிகை)