பாஜக file image
சிறப்புக் களம்

மீண்டும் சீட் வழங்காத அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள்! கர்நாடக பாஜகவில் தேர்தல் சடுகுடு!

Prakash J

224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (மே) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 166 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அங்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கிறது. அதேநேரம் பாஜகவோ வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்திய பிறகு, கடந்த 11ஆம் தேதி 189 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

பாஜக

அதன்படி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியிலும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியிலும் போட்டியிட இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மறுநாள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 23 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது.

ஏற்கெனவே முதல் பட்டியலில் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சீட் வழங்கவில்லை எனப் புகார் கிளம்பியது. இந்த நிலையில், 2வது பட்டியல் வெளியானபோதும் இந்தப் பிரச்னை வெடித்தது. அதன்படி, சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 7 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்களில் சன்னகிரி எம்.எல்.ஏ மாடல் விருபக்‌ஷப்பாவும் அடங்குவார். இவர் ஊழல் புகாருக்கு ஆளானவர் எனச் சொல்லப்படுவதாலேயே சீட் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

மேலும் முடிகெரே தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த எம்.பி குமாரசாமிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முடிகெரே தொகுதியில் தீபக் தொட்டய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்களின் ஆதரவாளர்கள் பெரிதும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.பி. குமாரசாமி, தன்னுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் எனது ராஜினாமா கடிதத்தைக் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன், விரைவில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன். எனது ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுடன் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்வேன். தனக்கும் தேசிய பொதுச் செயலாளர் ரவிக்கும் இடையே உள்ள தனிப்பட்ட போட்டினால்தான் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்த குமாரசாமி, ஜே.டி.எஸ். கட்சியில் சேர்ந்தோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

இவரைத் தவிர சி.எம் நம்பன்னவர் (கலகடாகி), எஸ்.ஏ.ரவிந்திரநாத் (தாவனகரே வடக்கு), நேரு ஓலேகர் (ஹாவேரி), என்.லிங்கனா (மாயகொண்டா), சுகுமார் ஷெட்டி (பந்தூர்) ஆகிய 5 எம்.எல்.ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே வெளியான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் சேர்த்தால், வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

பாஜக

அதுபோல், பாஜக மேலவை உறுப்பினரான ஆர்.சங்கரும் ரனேபென்னூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து அவரும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இடஒதுக்கீடு பிரச்னை, நந்தினி பால் பிராண்ட் விவகாரம் உள்ளிட்டவற்றால் ஆளும்கட்சியான பாஜகவுக்கு சில தொகுதிகளில் பின்னடைவு ஏற்படலாம் என்று கருத்துக்கணிப்புகள் கூறிவரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலருக்கு மீண்டும் சீட் வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, மேலும் பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.