political leaders twitter pages
சிறப்புக் களம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாராமா?.. பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகளை இணைக்கும் காங்கிரஸ்!

கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவின் மூலம், எதிர்க்கட்சிகளை இணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது.

Prakash J

காங்கிரஸ் ’முதல்வர்’ பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சித்தராமையா, நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதை, காங்கிரஸ் பெரிய விழாவாகக் கொண்டாட இருக்கிறது. நாளை பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக அவருக்குப் பதிலாக மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் கலந்துகொள்ள இருக்கிறார். இத்தகவலை அக்கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெயன் உறுதிசெய்துள்ளார். மேலும், இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன காா்கே ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இத்தனை பேருக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பதுதான் இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பதாகவும், பாஜகவை வாய் பிளக்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை அமைத்து வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது. எனவே, இதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை இணைக்க, காங்கிரஸ் முயற்சி மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அதன் முதல் முயற்சியாகத்தான் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளை ஒன்றிணைக்கக்கூடிய முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தீவிரமாய் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சில மாநில முதல்வர்களையும், கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவை மையமாக வைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அரசியல் வல்லுநர்களிடம் விவாதத்தை எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. ஆனால் வலிமையான தலைமை, ஒருங்கிணைக்க முடியாத கட்சிகளால் அது தோல்வி கண்டது. இந்த நிலையில்தான் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, அக்கட்சிக்கு மீண்டும் ஏறுமுகம் இருப்பதாகவும், இதைவைத்தே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தம்மால் மட்டுமே ஒரு வலிமையாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்புவதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த முயற்சியில் காங்கிரஸ் களம் இறங்கியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

”எதிர்க்கட்சிகள் அணியை நாங்கள்தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று யாரும் சான்று அளிக்கத் தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வெற்றி பெறாது” என கடந்த காலங்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பேசியிருந்ததும் தற்போது எடுத்தாளப்படுகிறது.