சிறப்புக் களம்

ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசம்... கராத்தே பயிற்சி அளிக்கும் ராமநாதபுரம் விவசாயி!

ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசம்... கராத்தே பயிற்சி அளிக்கும் ராமநாதபுரம் விவசாயி!

subramani

அடிப்படையில் நம் பிள்ளைகள் வளரும் போதே சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொடுப்போம். அதுபோல இன்றையச் சூழலில் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையினை பயிற்றுவிப்பதும் அவசியமாகிறது. பரமக்குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகளில் ஒன்றான கராத்தே பயிற்சியினை கொடுத்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விவசாயி முத்துக்கிருஷ்ணன். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

உலக கராத்தே பட்டியலில் 'சிட்டோரியா', 'சோட்டாகான்', 'கெஜிரியோ', 'வாடோரியோ' என நான்கு வகையான கராத்தே முறைகள் உள்ளன. அகில இந்திய கராத்தே சங்கத்தின் தனிப் பயிற்சி அங்கீகாரம் பெற்ற விவசாயி முத்துகிருஷ்ணன், இவற்றில் 'சிட்டோரியா' வகை பயிற்சியைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.

இவரிடம் ஐந்து வயது முதலே பலரும் கராத்தே கற்று வருகின்றனர். தினமும் காலை ஆறு மணி முதலே பயிற்றுவித்தலை துவங்கி விடுகிறார் முத்துக்கிருஷ்ணன். குறைத்த அளவிலான கட்டணத்தில் கராத்தே சொல்லிக் கொடுக்கும் முத்துக்கிருஷ்ணன் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கி வருகிறார். பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது.

இதனால் அவ்வூர் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பலரும் முத்துக்கிருஷ்ணனிடம் கராத்தே பயில மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலரும் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று பல விருதுகளையும் வாங்கி இருக்கின்றனர். இந்தப் பயிற்சியும் சான்றிதழும் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் கூட உதவிகரமாக உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் இன்னுமே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இவரிடம் கராத்தே பயிற்சி பெற வருகின்றனர்.

பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதைவிடவும், மீன் பிடிக்க கற்றுக் கொடு என்கிறது சீனப் பழமொழி. அதற்கு ஏற்ப முத்துக்கிருஷ்ணன் தங்கள் பகுதி மாணவர்களின் எதிர்காலத்திற்கு தன்னாலான பாதையை காட்டி வருகிறார்.