‘நான் இந்து விரோதி அல்ல’ - என்ன சொல்ல வருகிறார் கமல்.
தமிழக அரசியலில் புதிதாக அடி எடுத்து வைக்கும் கமல்ஹாசன், தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகிற 21-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்படி ஜெட் வேகத்தில் கமல் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும், கமல் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை இன்றளவும் பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே அவரின் ட்விட்டர் செய்திகளை படித்து புரிந்து கொள்ள முயன்று நொந்து போனவர்கள் பலர். அவரே பொழிப்புரை, விளக்கரையும் சில நேரங்களில் எழுதுவார்.
கொள்கை அடிப்படையில் கமலின் பேச்சுகளில் ஒரு நிலையான தன்மை இல்லையோ என சந்தேகம் எழுவதாக பல தரப்பினரும் நினைக்கின்றனர். ஒரு கட்டம் வரை கமல் பெரியாரின் கொள்கையை பின் பற்றுபவர், இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற கருத்து நிலவி வந்தது. இரண்டே இரண்டு வார்த்தைகளில் அத்தனையும் கமல் சிதைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஒன்று கருப்புக்குள் காவியும் அடக்கம், மற்றொன்று தேவைப்பட்டால் பாஜகவுடனும் கூட்டணி அமைப்பேன் என்ற கருத்து. கமலின் இந்த இரண்டு கருத்துக்களுக்கு பிறகு பலரும் அவர் குறித்த நிலைப்பாட்டில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் திளைத்து வருகின்றனர்.
ஒரு புறம் கமல் ஒரு இந்து விரோதி என்ற கருத்தை பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், மற்றொரு புறம் ரஜினியை போல் கமல்ஹாசனையும் பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. குறைந்தபட்சம் கமல்ஹாசன் இன்னும் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில், வார இதழ் ஒன்றில் கமல் ‘நான் இந்து விரோதி அல்ல’ என்று எழுதியுள்ளது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல் ஏன் தற்போது இதனை பேசுகிறார். அதற்கான பெரிய அளவிலான தேவை தற்போது என்ன எழுந்துள்ளது. தேர்தல் அரசியலுக்காக இப்படியான விளக்கங்களை கொடுக்க முயற்சிக்கிறாரா என்ற கேள்விகள் எழுகிறது. சிலருக்கு நான் வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் எனும் தோற்றத்தை உண்டாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று கமல் கூறுகிறார். ஏன் சிலர் என்று மறைமுகமாக கூறுகிறார். நேரடியாகவே அவரை எதிர்ப்பவர்களை குறிப்பிட்டு பேசலாமே. ஏன் அவர் அதை தவிர்க்கிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனால், சமீபத்தில் ஆண்டாள் சர்ச்சை, விஜயேந்திரர் விவகாரங்களில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவிற்கு எதிராக கடுமையான போராட்டங்களும் எதிர் கருத்துக்களும் எழுந்து வந்த நிலையில், கமல் மவுனமாகவே இருந்தார். ரஜினியை போல் எந்த பிரச்னைக்கும் கருத்து தெரிவிக்காதவர் என்றாலும் பரவாயில்லை. கமல் அரசியலில் பல்வேறு விவகாரங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார். அப்படி இருக்கையில் ஒரு சினிமா பிரபலமாக கூட வைரமுத்துவுக்கு ஆதரவாகவோ அல்லது குறைந்தபட்சம் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவோ எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் போது, காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. அதுவும், ‘தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கும் மரபு இல்லை, தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திர தியானத்தில் இருந்தார்’ என்று சங்கரமடம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. தமிழத்தில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் விஜயேந்திரரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக அமைச்சர்கள் எடுத்த போதும், விஜயேந்திர விவகாரத்தில் பல அமைச்சர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
ஆனால், கமல்ஹாசனோ விஜயேந்திரரின் செயலுக்கு நேரடியாக எதிர்ப்போ ஆதரவோ தெரிவிக்காமல் மழுப்பி கருத்து தெரிவித்தார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை...தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை’ அவர் அளித்த பதில் மீண்டும் அவரது ட்விட்டர் செய்திகளை நினைவுக்கு கொண்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் கண்டகண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கக் கூடாது என்று அவர் கூறினார். இறுதிவரை உறுதியான கருத்து எதனையும் கமல் கூறவேயில்லை.
மதம் தொடர்பான பிரச்னைகளில் கமலிடம் மிதமான போக்கு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரோ நான் இந்து விரோதி அல்ல என்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். அம்பேத்கர், பெரியார், காந்தி ஆகியோரை தனது ஆசான்களாக பின்பற்றுவதாக குறிப்பிடுகிறார். ஆனால், முக்கியமான நேரங்களில் அந்த தெளிவை வெளிக்காட்ட அவர் தவறிவிடுகிறாரோ என்ற எண்ணம் தொடர்ந்து வருகிறது.
பாஜகவுக்கு எதிராக சில நேரங்களில் கமல் பேசினாலும், முழுமையாக அவர் மீதான விமர்சனம் மறைந்தபாடில்லை. கமல்ஹாசனை பொறுத்தவரை அவரை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர். அப்பொழுதெல்லாம், கமல்ஹாசனுக்கு ஆதரவாக முற்போக்கு கட்சிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும், ஜனநாயக அமைப்புகளும் அவர் ஆதரவாக நின்றனர். ஆனால், தற்போது கமல் விவகாரத்தில் சிறிய தயக்கம் உள்ளது. அந்த தயக்கங்களை உடைத்து கமல் தன்னுடைய வீச்சை பெரிய அளவில் கொண்டு செல்வதை வருங்காலங்களில் அவரது செயல்கள் தான் உறுதி செய்யும்.