சிறப்புக் களம்

'பிக்பாஸ்' போட்டியாளர்கள் பேசுவதற்கு நான் பொறுப்பல்ல: கமல்ஹாசன் சிறப்புப் பேட்டி

'பிக்பாஸ்' போட்டியாளர்கள் பேசுவதற்கு நான் பொறுப்பல்ல: கமல்ஹாசன் சிறப்புப் பேட்டி

JustinDurai

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பேசுவதற்கு நான் பொறுப்பல்ல' என்று குறிப்பிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

'தலைவர்களுடன் ஒரு நாள்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு நேர்காணலில்,
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் சில துளிகள் இங்கே...

2017-ம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது பயமாக உள்ளது. ஏனெனில் நான் கோபக்காரன். இந்தக் களம் சரியாக இருக்குமா என தெரியவில்லை என்று சொன்னீர்கள். இப்போது இந்தக் களம் சரியாக இருக்கும் என எண்ணுகிறீர்களா?

"எனக்கு இப்போது பலம் தருவதே என் கோபம்தான். வெறும் பாமரத்தனமான கோபமாக அப்போது இருந்தது. அந்தக் கோபம் பண்பட்ட கோபமாக இப்போது  மாறியிருக்கிறது."

ஆன்மிக அரசியலுக்கான இடமிருக்கிறது என்றும் திராவிட ஆட்சிகளுக்கு எதிரான வேறொரு கருத்தியல் வெற்றி பெறக்கூடியதாக மாறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன?

"ஜனநாயகம் வருவதற்கு முன்பாகவே இங்கே ஆன்மிகம் இருந்திருக்கிறது. அதுவொரு பகுதிதான். அதையும் சேர்த்து பரிபாலனம் செய்வதுதான் பகுத்தறிவு. எனவே, பகுத்தறிதல் என்பது நிரகாரித்தல் என்பதாகாது. அரசியல், ஆளுகை என்று வரும்போது எல்லோரும் உள்பட்டதுதான். தோற்கும் கட்சியும் மக்களில் ஒருவர்தானே."

வாக்கு அரசியலில் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தும் அளவிற்கு கருணாநிதியை முன்னிறுத்தவில்லையே?

"கலைஞர், என்னிடம் பிரியமாக இருந்தார். அதற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழுக்கு கலைஞர் செய்ய விரும்பியதை நானும் செய்ய விரும்புகிறேன். ஆனால் நெருக்கம் என்று சொன்னால் அது எம்.ஜி.ஆர்., சிவாஜி அவர்களுடன்தான். அதற்கு காரணம், நான் செய்து கொண்டிருந்த தொழில். அவர்கள் செய்து கொண்டிருந்த தொழில். அதனால் எங்கள் நெருக்கம் இன்னும் அதிகமாக இருந்தது."

எம்.ஜி.ஆர். நல்ல படங்களை தந்தார். ஆனால் கமலின் படங்களை பார்த்தால் குடும்பங்கள் உருப்படாது என்று முதல்வர் பழனிசாமி சொல்லி இருக்கிறாரே?

"அவர் அரசியலை கவனிக்காதது போன்று எனது படங்களையும் கவனிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. 'நல்லது சொல்ல வேண்டும் என்ற முனைப்பு உங்களிடம் தெரிகிறது, வாழ்த்துக்கள் 'என்று சினிமாவை அடிக்கடி பார்க்கதாவர்கள்கூட என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். ‘ஹே ராம்’ படமாக இருக்கட்டும் ‘தேவர் மகன் படமாக இருக்கட்டும் அதிலுள்ள பூடகமான கருத்து மக்கள் நலனுக்கான கருத்தாக இருக்கும்."

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நான்கரை கோடி மக்கள் பார்க்கிறார்கள். நல்ல விஷயங்களை சிறுக சிறுக சொன்னாலும் நல்லதுதான். நிகழ்ச்சியில் மற்றவர்கள் (போட்டியாளர்கள்) பேசுவதற்கு நான் பொறுப்பல்ல.

இந்நிகழ்ச்சியில் நான் பேசும்போது, நான் செய்த, பேசிய விஷயங்களில் பொதுநலன் கேடு விளைவிக்கும் விஷயங்கள் எதுவும் இருக்கிறதா என்று சொன்னால், இல்லை. ஆனால் ஒரு புத்தக வாசிப்பு, விவசாயிகள், கைத்தறித் தொழிலாளர்களை போற்றுவது என பல நல்ல விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறேன்."