சிறப்புக் களம்

ஓடிடி திரைப்பார்வை 21: கருப்புனா என்ன வெறுப்பு? பாசிடிவ் சினிமா 'காலா குப்பாரா'

ஓடிடி திரைப்பார்வை 21: கருப்புனா என்ன வெறுப்பு? பாசிடிவ் சினிமா 'காலா குப்பாரா'

subramani

"என்ன ஏன் டா இவ்ளோ அழகா படச்ச ஆண்டவா...?" என்பார் ஒரு படத்தில் வடிவேலு. மும்பை சிறுவனொருவனின் “என்ன ஏன் கருப்பா படச்ச ஆண்டவா” என்ற ஏக்கக் குரலுடன் துவங்குகிறது காலா குப்பாராவின் முதல் காட்சி. தமிழில் கருப்பு நிற பலூன் என பொருள்படும் இக்குறும்படம் 2018ஆம் ஆண்டு உருவானது. ஜீத்து ஆர் மாத்ரே இயக்கி இருக்கும் இந்த குறும்படம் நிறப்பாகுபாடு, நிற ஏற்ற தாழ்வு, நிறத்தின் அடிப்படையில் உருவாகும் தாழ்வு மனப்பான்மை குறித்து ஆழமாக அல்லாமல் மென்மையாக அழகாக பேசி இருக்கிறது.

சிக்ஸ் சிக்மா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தக் குறும்படம் ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கிறது. பலூன் விற்பனை செய்யும் மும்பையைச் சேர்ந்த சிறுவன்., தனது முதலாளியிடம் ஐம்பது பலூன்களை வாங்கிக் கொண்டு மும்பை நகரில் விற்பதற்காக சைக்கிளில் பயணிக்கிறான். தனது வாடிக்கையாளர்களிடமிருந்து அவனுக்கு வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறத்திலான பலூனை வாங்குகின்றனர். ஆனால் அவனிடமிருக்கும் கருப்பு நிற பலூன் மட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தானும் கருப்பாக இருப்பதை நினைத்து கொஞ்சம் வருந்திக் கொள்கிறான் சிறுவன்.

ஆரஞ்சு நீலம் சிவப்பு என எல்லா நிற பலூன்களும் விற்றுத் தீர்கின்றன. ஆனால் அவனிடமிருக்கும் கருப்பு பலூன் மட்டும் விலை போகாமல் அப்படியே இருக்கிறது. ஒரு இளைஞர் ஆரஞ்சு பலூனை வாங்கி தன் காதலிக்குக் கொடுக்கிறார். டர்பன் கட்டிய சிறுவன் “காலா குப்பாரா கந்தாஹை, துஸுரா தோ” என கருப்பு நிற பலூனை சாடிவிட்டு வேறு நிற பலூனை பெற்றுக் கொள்கிறான். இதற்கிடையில் பலூன் வாங்க வந்த சிறுமியொருத்தி பலரும் நிராகரித்த கருப்பு நிற பலூனை விரும்பி பெற்றுக் கொள்கிறாள். கருப்பு நிற பலூனை தேவதையொருத்தி வாங்கியதால் சிறுவனின் முகத்தில் ஏக மகிழ்ச்சி.

இப்படியாக பலூன் விற்கும் சிறுவனின் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையினை பலூன்கள் கொண்டே ஊதி உடைக்கிறார் இயக்குநர். இப்போது சிறுமி வாங்கிய கருப்பு நிற பலூனும். கூட்டமாக கட்டப்பட்ட கலர் கலர் பலூன்களும் ஒரே நேரத்தில் பறக்க விடப்படுகின்றன. தனித்து இருப்பதால் எடையற்று இருக்கும் கருப்பு நிற பலூன் கலர் கலர் பலூன்களை பின்னுக்குத் தள்ளி ஆகாயம் நோக்கி வேகமாக மேலெழுகிறது. 'Look to a day when people will not be judge by the color of their skin’ என்ற மார்டின் லூதர் கிங்கின் வரிகளோடு காலா குப்பார நிறைவடைகிறது.

பாட்டி பலூன் விற்கும் தன் பேரனுக்கு திருஷ்டி பட்டுவிடும் என கன்னத்தில் மை வைத்து விடுகிறார். அந்த கருப்பு மையை வெறுப்புடன் அழிக்கிறான் சிறுவன். உண்மையில் சிறுவனுக்கு தன் நிறம் குறித்து இருந்த தாழ்வு மனப்பான்மையினை தான் விற்கும் பலூன்களே காலி செய்கின்றன. நல்ல அழகாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறுப்படத்தின் நீளத்தை இன்னுமே கொஞ்சம் நீட்டி இருக்கலாம். இன்னும் சில கிளைக் கதைகளை அழகான கவித்துவமான காட்சிகளை வைக்கத் தகுதியான ஒன்லைன் இது. ஆனால் ரத்தின சுக்கமாக அவசர அவசரமாக கருத்து சொல்லி முடித்துவிட்டார் இயக்குநர். குறும்படங்களைப் பொறுத்தவரை அதன் தொழில் நுட்ப விசயங்கள் குறித்து அதிகம் விமர்சிக்கக் கூடாது. காரணம் ஒரு குறும்படம் உருவாவதற்குப்பின்னே நிறைய பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனால் காலா குப்பாரா ஓரளவு நல்ல அவுட் புட்டையே தந்திருக்கிறது.

பலூன் மற்றும் சிறுவர்களைக் கொண்டு உருவான நிறைய சினிமாக்கள் உலகளவில் பெரிய வெற்றியை தொட்டிருக்கின்றன. ஆல்பர்ட் லாமோரிஸி இயக்கிய The red ballon உலகப் புகழ் பெற்ற குறும்படமாகும். 1956’ல் இப்படியொரு பிரம்மிப்பூட்டும் குறும்படம் உருவாக்கப்பட்டிருப்பது இப்போது நினைத்தாலும் ஆச்சரியத்தையே தருகிறது.

ஒரு குறிப்பிட விசயத்தை உதாரணமாக இந்த காலா குப்பாராவில் பேசப்பட்டிருக்கும் நிற சிந்தனையினை எடுத்துக் கொள்வோம். நிறப் பிரச்னை குறித்த ஒரு கதையினை பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சரித்திரப் படமாகவும் எடுக்க முடியும். சின்னதான நாலு கலர் பலூன்களைக் கொண்டும் அதே கருத்தை பேச முடியும். அதுவே சினிமா எனும் உன்னதக் கலையின் சாத்திய உயரம். காலா குப்பார’வின் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள்.